PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
PMEGP scheme: பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக அறியலாம்.
PMEGP scheme: 10 லட்சம் முதல் 25 லட்சம் வரையிலான கடன் வழங்கும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்:
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) என்பது பிரதம மந்திரி ரோஜ்கர் யோஜ்னா (PMRY) மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (REGP) ஆகிய இரண்டு திட்டங்களின் இணைப்பாகும். இத்திட்டம், விவசாயம் அல்லாத துறைகளில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களின் மூலம், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் (KVIC) செயல்படுத்தப்படுகிறது. இது தேசிய அளவில் இந்தத் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலகமாகவும் செயல்படுகிறது.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
மாநில அளவில், இந்தத் திட்டம் மாநில KVIC இயக்குநரகங்கள், மாவட்ட தொழில் மையங்கள் (DICகள்), மாநில காதி மற்றும் கிராமத் தொழில் வாரியங்கள் (KVIBs) மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தொழில்முனைவோர் அல்லது பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வழங்குவதற்காக, நியமிக்கப்பட்ட வங்கிகள் மூலம் அரசாங்க மானியத்தை KVIC வழி செய்கிறது. பயனாளி தனது விண்ணப்பம்/திட்டத்தை www.kvic.org.in / kviconline.gov.in/pmegpeportal என்ற இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
யாருக்கு கடன் வழங்கப்படும்?
18 வயதுக்கு மேல் உள்ள எந்தவொரு தனிநபரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ரூ.10 லட்சத்திற்கு மேல் செலவாகும் உற்பத்தித் துறையிலும், ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவாகும் வணிகம் அல்லது சேவைத் துறையிலும் உள்ள திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ், புதிய திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சுய உதவிக் குழுக்கள், சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், உற்பத்தி சார்ந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளும் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியுடையவை ஆகும்.
யாருக்கு தகுதி இல்லை?
PMRY, REGP அல்லது இந்திய அரசு அல்லது மாநில அரசின் பிற திட்டங்களின் கீழ் இருக்கும் நிறுவனங்களால் இந்த கடன் உதவியை அணுக முடியாது. இந்திய அரசு அல்லது மாநில அரசின் வேறு எந்தத் திட்டத்தின் கீழும் ஏற்கனவே அரசு மானியத்தைப் பெற்றுள்ள நிறுவனங்களும் கூட இந்த திட்டத்தை அணுக முடியாது.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
உற்பத்தித் துறையில் அனுமதிக்கப்பட்ட திட்டம் அல்லது யூனிட்டிற்கு அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. வணிகம் அல்லது சேவைத் துறையில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். நகப்புறங்களைச் சேர்ந்த பொதுப்பிரிவினருக்கு 15 சதவிகிதமும், கிராமங்களைச் சேர்ந்த பொதுப்பிரிவினருக்கு 25 சதவிகிதமும் மானியம் வழங்கப்டுகிறது. அதேநேரம், நகர்ப்புறங்களை சேர்ந்த சிறப்புப் பிரிவினருக்கு 25 சதவிகிதமும், கிராமப்புறங்களைச் சேர்ந்த சிறப்பு பிரிவினருக்கு 35 சதவிகிதமும் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 11 முதல் 12 சதவிகிதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது.