Voluntary Retirement Rules: அரசு ஊழியர்கள் கவனத்திற்கு..! விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தில் மாற்றம் - மத்திய அரசு அதிரடி
Voluntary Retirement Rules: அரசு ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தில் மத்திய அரசு புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
Voluntary Retirement Rules: அரசு ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள் கவனத்திற்குள்
தேசிய ஓய்வூதிய திட்டம் எனப்படும் NPS (National Pension System) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களின் விருப்ப ஓய்வு குறித்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறையின் புதிய வழிகாட்டுதல்களின்படி, 20 ஆண்டுகள் வழக்கமான சேவையை முடித்து பிறகு, விருப்ப ஓய்வு பெற விரும்பும் மத்திய ஊழியர்கள் முன் அறிவிப்பு கொடுத்து வேலையை விட்டு வெளியேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாத அறிவிப்புக் காலம்
மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை 11 அக்டோபர் 2024 அன்று 'அலுவலக குறிப்பேடு' ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, ”20 ஆண்டுகள் வழக்கமான சேவயை முடித்த பணியாளர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம் அவர்களை நியமித்த அதிகாரியிடம் செய்யப்பட வேண்டும். இந்த விண்ணப்பம் 3 மாத அறிவிப்பாக கருதப்படும். மத்திய பணியாளரின் கோரிக்கையை (விண்ணப்பத்தை ஏற்று) அதிகாரிகள் நிராகரிக்காத வரையில், 3 மாத அறிவிப்பு காலத்திற்குப் பிறகு விருப்ப ஓய்வு உடனடியாக அமலுக்கு வரும்.
புதிய VRS விதிகள் என்ன?
புதிய விதியின்படி, மத்திய அரசு ஊழியர் விரும்பினால், மூன்று மாத கால நோட்டீஸ்க்கான கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக உயரதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும். கோரிக்கையை பரிசீலித்த பிறகு, அறிவிப்பு காலத்தை குறைக்க நியமன அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. ஒருமுறை மத்திய அரசு ஊழியர் விருப்ப ஓய்வு அறிவிப்பை வெளியிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் அதை திரும்பப் பெற முடியாது. விருப்ப ஓய்வு ரத்து செய்யப்பட வேண்டுமெனில், ஓய்வுபெறும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே ரத்து செய்ய விண்ணப்பம் செய்யப்பட வேண்டும்.
PFRDA விதிமுறைகளின் கீழ் பலன்கள்:
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoP&PW) அலுவலக குறிப்பாணையின்படி, சேவையில் இருந்து தாமாக முன்வந்து ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் "PFRDA விதிமுறைகள் 2015" இன் படி அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள். விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வழக்கமான அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் நிலையான ஓய்வூதிய வயதில் பெறுவார்கள். ஓய்வுபெறும் ஊழியர் தனது ஓய்வூதியக் கணக்கைத் தொடர விரும்புகிறாரா அல்லது தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) சலுகைகளை ஒத்திவைக்க விரும்புகிறாரா என்பது அவர் சார்ந்தது. இந்த இரண்டு விருப்பங்களில் ஒன்றை PFRDA விதிகளின்படி தேர்வு செய்யலாம்.
DoP&PW வழிகாட்டுதல்களின்படி, ஒரு ஊழியர் 'உபரி ஊழியர்' என்ற கணக்கில் 'சிறப்பு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின்' கீழ் ஓய்வு பெற்றால், அவருக்கு இந்த விதி பொருந்தாது. மேலும், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் வேறு ஏதேனும் பொதுத்துறை நிறுவனத்திலோ அல்லது சுயதொழில் நிறுவனத்திலோ பணியாளராக நியமிக்கப்பட்டால், அத்தகைய நபர்களுக்கு இந்த விதி பொருந்தாது.