Google Pay செயலியை அடிக்கடி பயன்படுத்துபவரா? கூகுள் பே மூலம் தங்கம் வாங்குவதும், விற்பதும் எப்படி?
கூகுள் பே செயலியை ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்காக அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் கூகுள் பே மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையில் தங்கம் வாங்குவதையும், விற்பதையும் தெரிந்துகொள்ளவும்.
கூகுள் பே செயலியைக் கட்டணங்களுக்காகவும், ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்காகவும் அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் கூகுள் பே மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையில் தங்கம் வாங்குவதையும், விற்பதையும் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கூகுள் பே மூலம் தங்கம் வாங்கினால், 99.99 சதவிதம் 24 கேரட் தங்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் வாங்கும் தங்கம், Gold Accumulation Plan என்ற திட்டத்தின் கீழ், MMTC-PAMP India Pvt. Ltd என்ற நிறுவனத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கும் தங்கம் குறித்த விவரங்கள் கோல்ட் லாக்கரில் பார்க்க முடியும். உங்கள் கோல்ட் லாக்கர் உங்கள் சேமிப்பில் உள்ள தங்கம் குறித்த விவரங்களைப் பார்வையிடும் இடமாக இருக்கும். மேலும், தங்கம் வாங்குவது, விற்பது என உங்கள் தங்கம் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் இதில் பார்வையிட முடியும். மேலும் உங்கள் கூகுள் பே கோல்ட் லாக்கர் உங்கள் சிம் கார்ட் உடனும், ஃபோன் நம்பருடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் உங்கள் சிம் கார்டையோ, ஃபோன் நம்பரையோ மாற்றினால் உங்கள் அடையாளம் சரிபார்க்கப்பட்ட பிறகே, உங்கள் கூகுள் பே கோல்ட் லாக்கரைப் பயன்படுத்த முடியும்.
கூகுள் பே தளத்தின் மூலமாக தங்கம் வாங்கவும், விற்கவும் விரும்பினால் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றவும்.
1. கூகுள் பே செயலியைத் திறக்கவும்.
2. `நியூ’ என்ற பட்டனை அழுத்தவும்.
3. `கோல்ட் லாக்கர்’ என்று தேடி, அந்தப் பகுதிக்குச் செல்லலாம்.
4. `Buy' என்பதை அழுத்தி, தங்கம் வாங்கலாம். தற்போதைய சந்தை மதிப்பில், வரிகள் உள்பட, தங்கத்தின் விலை காட்டப்படும். தங்கம் வாங்கத் தொடங்கிய அடுத்த 5 நிமிடங்களுக்கு விலை எந்த மாற்றமும் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்படும், ஏனெனில் தங்கத்தின் விலை தொடர் மாற்றங்களுக்கு உட்பட்டது. அஞ்சல் எண்ணின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் வரியின் தொகை மாறுதல்களுக்கு உட்பட்டது.
5. இந்திய ரூபாய் மதிப்பில் உங்களுக்குத் தேவையான அளவுக்குத் தங்கத்தை வாங்கலாம். நீங்கள் வாங்கும் தங்கத்தின் அதிகபட்ச அளவு என்ற நிர்ணயம் எதுவும் இதில் இல்லை. எனினும், நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தங்கம் வாங்கலாம். குறைந்தபட்சமாக இதில் 1 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் கோல்ட் லாக்கரில் Gold Accumulation Plan கீழ், 49,999 ரூபாய்க்கு மேல் தங்கம் சேமிக்கப்பட்டால் அதற்கேற்ப வரி விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
6. உங்களுக்கு வசதியான கட்டண முறையைப் பின்பற்றி, கட்டணத்தைச் செலுத்தவும். பரிவர்த்தனை முடிவடைந்த சில நிமிடங்களில் உங்கள் லாக்கரில் தங்கம் சேமிக்கப்படும்.
பரிவர்த்தனை முடிவடைந்த பிறகு, உங்களால் அதனை ரத்து செய்ய முடியாது. எனினும், அப்போதைய சந்தை மதிப்பின் விலைக்கு நீங்கள் விற்பனை செய்யலாம்.