4 years of GST : ஜி.எஸ்.டி.,யின் நான்காண்டுகள்! - சாதனையா? சோதனையா?
ஜி.எஸ்.டி. வழியாக ஈட்டப்படும் வருவாயில் மாநிலங்களுக்கு ஆண்டுக்கு 14% வருவாய் என மத்திய அரசால் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு எதிர்பார்த்தது போல நிகழ்ந்ததா? இதன் முக்கிய நோக்கமான வருவாய் பெருக்கம் சாத்தியமானதா?
2017 ஜூலை 1ம் தேதி, மதிப்புக் கூட்டு வரி, கலால் வரி மற்றும் சேவை வரி எனப் பலவரிகளில் இருந்து சுதந்திரம் பெற்று மாறாக ‘ஒரே நாடு ஒரே வரி’ என சரக்கு மற்றும் சேவை வரியை (Goods and Service Tax - GST) அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர உறுப்பினர்கள் முன்னிலையில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றினார் அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லி. வரிசெலுத்துபவர்களுக்கான வழிமுறைகளை எளிமையாக்குவதற்காக இந்த மறைமுகவரி (Indirect taxex) அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும் தனது நோக்கத்தை இந்த நான்கு ஆண்டுகளில் எட்டிவிட்டதா இந்த சரக்கு மற்றும் சேவை வரி. இந்தியாவுக்கு மறைமுக வரிகள் புதிதல்ல, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த வி.பி.சிங் அறிமுகப்படுத்திய மாட்வாட்(MODVAT)லிருந்து இந்த வகை வரிகளின் வரலாறு தொடங்குகிறது. 1999ல் அடல்பிகாரி வாஜ்பாயின் ஆட்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர்களாக இருந்த சி.ரங்கராஜன், பிமல் ஜாலன் மற்றும் ஐ.ஜி. பட்டேல் ஆகியோருடனான பொருளாதார ஆலோசகர்கள் கூட்டத்தில் இந்த சரக்கு மற்றும் சேவை வரிக்கான முதல் அடித்தளமிடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பல அரசியல் ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு 18 ஆண்டுகள் கழித்து 2017ல் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
ஜி.எஸ்.டி. வழியாக ஈட்டப்படும் வருவாயில் மாநிலங்களுக்கு ஆண்டுக்கு 14% வருவாய் என மத்திய அரசால் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு எதிர்பார்த்தது போல நிகழ்ந்ததா? இதன் முக்கிய நோக்கமான வருவாய் பெருக்கம் சாத்தியமானதா?
ஜி.எஸ்.டி., வருவதற்கு முன்பு சேவை வரிகளுக்கு எதிரான மதிப்புக்கூட்டு வரி தொடர்பான உள்ளீட்டு வரிகளை (Input taxes) வரைவு செய்வதில் சிக்கல் இருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி. வந்த பிறகு ஒரே மறைமுகவரி என்பது நடைமுறைக்கு வந்ததால் மதிப்புடன் செலுத்தப்படும் இதர வரிகளுக்கான உள்ளீட்டு வரிக்கடன்களை (Input tax credit) எளிதாகக் கோரலாம் என்பது நடைமுறைக்கு வந்தது.
ஆனால் இவை எல்லாம் வரிசெலுத்தவேண்டிய பெருவணிக நிறுவனங்களை நோக்கி இல்லாமல் சந்தையில் இருக்கும் சிறுகுறு வணிகங்களைத்தான் பாதித்ததாகச் சொல்கிறார் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா. அவர் கூறுகையில், ‘ஜி.எஸ்.டி அறிமுகத்துக்கு முன்பு கலால் வரியானது 1.5 கோடிகள் வரும் வரை அமலுக்கு வராது ஆனால் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 20 லட்ச ரூபாய்க்கே கலால் தொடங்கியது. இதனால் சிறு வணிகங்கள்தான் பாதிக்கப்பட்டன.இது கிட்டத்தட்ட அவர்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறை. அதன்பின்னர் பணமதிப்பு நீக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இவர்களது நிலை மேலும் வலுவிழந்து பெரும்பாலானவர்கள் தங்களது வணிகங்களை மொத்தமாக மூடினார்கள்.17 ஜூலை 2017 முதல் ஜனவரி 2020 வரையிலான காலக்கட்டத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அரசு எதிர்பார்த்தது போல வருவாய் ஈட்டமுடியவில்லை என்பதுதான் நமக்கு புலனாகிறது. மற்றொருபக்கம் மாநிலங்களின் வரி நிர்ணயம் தொடர்பான அதிகாரத்தை முற்றிலுமாக பாதித்தது. பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானத்துக்கு மட்டும் மாநிலங்கள் வரி நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு சொன்னாலும் அதன் மீதான கலால் வரி மற்றும் அதன் மீதான செஸ் கட்டணம் எனக் கூடுதல் வரிகளைக் கள்ளத்தனமாக நுழைத்தது மாநில வருவாயையும் பாதித்தது. இதன்வழியாக மத்திய அரசு மாநிலங்களைக் கிட்டத்தட்ட முனிசிபாலிட்டி போல நடத்தியது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஜி.எஸ்.டி., போன்ற பிற வரிகள் அமலில் இருந்தாலும் மாகாணங்களுக்கான தளர்வுகளை உள்ளடக்கியதாகவும் அவை இருக்கும். ஆனால் இங்கே அது மாநிலங்களை ஏமாற்றுவதாக அமைந்தது. இதுஒருபக்கம் இருக்க சானிட்டரி நாப்கின் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கெல்லாம் 18 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதித்ததை எல்லாம் எக்காலத்துக்கும் ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என்கிறார்.
ஜி.எஸ்.டி.யை மறுபரிசீலனை செய்து அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றி அமைத்து வரிநிர்ணயத்தில் மாநிலங்களுக்கான கூடுதல் உரிமையை வழங்குவது மட்டுமே இதற்கான தீர்வு என்கிறார் அவர்.