EPF Account Correction: உங்க பி.எஃப்., கணக்கு விவரங்கள் தப்பா இருக்கா? - திருத்தம் செய்வது எப்படி?
EPF Account Correction: வருங்கால வைப்பு நிதி கணக்கில் பயனாளரின் விவரங்கள் தவறாக இருந்தல், அதனை திருத்தம் செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
EPF Account Correction: வருங்கால வைப்பு நிதி கணக்கில் பயனாளரின் விவரங்கள் சரியாக இல்லாவிட்டால், பணத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
வருங்கால வைப்பு நிதி கணக்கு:
நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால், உங்களது ஊதியத்தின் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு, EPF அதாவது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பணம் உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க EPFO இல் சேமிக்கப்படுகிறது. இந்தப் பணத்தின் மீது ஒரு நல்ல அளவு வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. இதனால் ஓய்வுக் காலத்தில் உங்களுக்கு ஒரு நல்ல தொகை உங்களது கணக்கில் இருக்கும். அந்த தொகையை கையில் பெற பிஎஃப் கணக்குகளில் உள்ள உங்களது பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்கள் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவலுடன் பொருந்தி இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பணம் எடுக்கும்போது நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் PF கணக்கில் ஏதேனும் தவறான தகவல்கள் இருந்தால், அதை எப்படி திருத்தலாம் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
முதலில் விண்ணப்பிக்க வேண்டும்..!
உங்கள் PF கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் ஆதாருடன் பொருந்தவில்லை என்றால், நீங்கள் அதை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக சரி செய்து கொள்ளலாம். இதற்கு, பணியாளர் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் உங்களது முதலாளியால் அங்கீகரிக்கப்பட்டு அதன் பிறகு EPFO அதிகாரி கோரிக்கையில் செய்யப்பட்ட திருத்தம்/மாற்றங்களைச் சரிபார்த்து கணக்கைப் புதுப்பிப்பார்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
படி 1: EPFO யுனிஃபைட் போர்ட்டலுக்குச் சென்று, UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில் "நிர்வகி> அடிப்படை விவரங்களை மாற்றவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும், உங்கள் ஆதார் வெரிஃபைட் செய்யப்பட்டு இருந்தால், விவரங்களைத் திருத்த முடியாது.
படி 3: சரியான விவரங்களை நிரப்பவும் (உங்கள் ஆதார் அட்டையில் இருப்பதை போன்றே), அதன் பிறகு கணினி அதை ஆதார் தரவு மூலம் சரிபார்க்கும்.
படி 4: விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, "புதுப்பிப்பு விவரங்கள்" என்பதைக் கிளிக் செய்யவும், அதன் பிறகு தகவல் முதலாளியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
முதலாளி அடுத்த செயல்முறையை முடிப்பார்..!
படி 1: முதலாளி EPFO யுனிஃபைட் போர்ட்டலில் உள்நுழைந்து, "உறுப்பினர்> விவரங்கள் மாற்றம் கோரிக்கை" என்பதைக் கிளிக் செய்து மாற்றங்களைச் சரிபார்க்கலாம்.
படி 2: முதலாளி தகவலைச் சரிபார்த்து அதை அங்கீகரிப்பார்.
படி 3: ஒப்புதலுக்குப் பிறகு, முதலாளி கோரிக்கையின் நிலையை சரிபார்க்கலாம்.
படி 4: இதற்குப் பிறகு, முதலாளி இந்தக் கோரிக்கையை EPFO அலுவலகத்திற்கு அனுப்புவார். அங்கே கள அதிகாரி பரிசீலனை செய்வார்.
படி 5: இதற்குப் பிறகு, விவரங்கள் சரியாக இருந்தால் பிராந்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் அவற்றை அங்கீகரிப்பார்.
ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
பணியாளர் ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால், அது தொடர்புடைய படிவத்தை பூர்த்தி செய்து, முதலாளியால் பூர்த்தி செய்து EPFO அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்குப் பிறகு, கள அலுவலகம் சரிபார்த்த தகவலை புதுப்பிக்கும்.