LIC எம்பெடட் ஷேர் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாக இருக்கலாம்: அரசு அதிகாரி கணிப்பு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் (எல்ஐசியின்) ஐபிஓ பங்குகள் விற்பனை வரும் மார்ச் மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் (எல்ஐசியின்) ஐபிஓ பங்குகள் விற்பனை வரும் மார்ச் மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அதன் எம்பெடட் ஷேர் எனப்படும் உட்பொதிக்கப்பட்ட பங்குகள் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வணிக உலகில் இது பரபரப்பான பேச்சாக உருவாகியுள்ளது.
ஐபிஓ என்றால் என்ன?
ஐபிஓ என்பது ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) ஆகும். (IPO - Initial Public Offering) மூலம் பொது முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்ய முடியும். இது, நிறுவனங்கள் தங்கள் பல்வேறு தொழில் செயல்பாடுகள் அல்லது வணிக விரிவாக்கத்திற்காக பணத்தை திரட்டுவதற்கான ஒரு வழியாகும். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே இதைச் செய்யும். ஆனால், எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனமும் இதை இப்போது கையில் எடுத்துள்ளது.
ரூ.5 லட்சம் கோடி:
(எல்ஐசியின்) ஐபிஓ பங்குகள் விற்பனை அடுத்த மாதம் இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில்,மத்திய அரசு சார்பில் இன்னும் உட்பொதிக்கப்பட்ட பங்குகள் விலை குறித்து அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், இது ரூ.5 லட்சம் கோடிக்கும்அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும்படி வரும் மார்ச் மாதம் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை நடந்தால், நாட்டிலேயே இது மிகப்பெரிய ஐபிஓ விற்பனையாக மாறும் எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஊடகங்கள் தரப்பில் எல்ஐசி ஐபிஓ மதிப்பு 5300 கோடி டாலர் முதல் 15,000 கோடி டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஐபிஓ விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை வைத்து, நாட்டின் நிதிப் பற்றாக்குறையை குறைக்கலாம் என்றும் அதுதான் மத்திய அரசின் எதிர்பார்ப்பு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால், உட்பொதிக்கப்பட்ட பங்குகள் மதிப்பு வெளியாகும்போது எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு சந்தையில் உயரும், அந்த பங்குகள் மதிப்பின் மூலம் எவ்வளவு பணத்தை மத்திய அரசால் பெற முடியும் என்பதும் தெரியவரும்.
நிபுணர் கருத்து என்ன?
எல்ஐசி, ஐபிஓ பங்கு விற்பனை குறித்து மத்திய அரசின் பங்கு விலக்கல் துறையின் செயலாளர் துஹின் காந்தா பாண்டே கூறும்போது, "எல்ஐசி பங்குகளி்ன் எம்பெடட் ஷேர் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கலாம். நிறுவனத்தின் மதிப்பு இந்தத் தொகையைவிட இன்னும் அதிகமாக இருக்கும்" என்றார்.
ஆனால், பொருளாதார வல்லுநர்களோ, எம்பெடட் ஷேர் மதிப்பைவிட 4 மடங்கு முதல் 5 மடங்குவரை எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு இருக்கும் எனக் கூறுகின்றனர்.
ஆயுள் காப்பீட்டுச் சந்தையில் பெரும்பாலான பங்குகள் எல்ஐசி நிறுவனத்திடமே இருக்கிறது.
வரைவு ஐபிஓ பத்திரங்களை அடுத்த வாரம் முதலே முதலீட்டாளர்களுக்கு கொடுக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளதாக துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.