LIC IPO: தள்ளிப்போகிறதா எல்ஐசி பங்கு விற்பனை? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால் எல்ஐசி பங்கு விற்பனைத் திட்டத்தை சற்று தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால் எல்ஐசி பங்கு விற்பனைத் திட்டத்தை சற்று தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது எல்ஐசி தான். காரணம் அதன் நம்பகத்தனமை. அதனாலேயே இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசி செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதன் மூலம் ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை நிதி திரட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பலரும் எல்ஐசி பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் தள்ளுபடி தரப்பட உள்ளது அவர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால் எல்ஐசி பங்கு விற்பனைத் திட்டத்தை சற்று தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி எல்ஐசி பங்கு விற்பனை தள்ளிப்போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே உணர்த்துகிறது. நிருபர்கள், நிதியமைச்சரை நோக்கி, "எல்ஐசி ஐபிஓ திட்டமிட்டப்படி இந்த மாதத்திலேயே நடக்குமா" என வினவினர். அதற்கு அவர், "எல்ஐசி பங்குகள் விற்பனையை திட்டமிட்டபடியே நடத்தவே விரும்புகிறோம். நாங்கள் பங்கு விற்பனையைத் திட்டமிடும் போது இருந்த சர்வதேச சூழல் இப்போது இல்லை. நாம், பங்கு விற்பனையை இந்தியச் சூழலுக்கு ஏற்றப்படிதான் திட்டமிட்டுள்ளோம். ஆனால், இப்போது உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சர்வதேச சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு பரிசீலி்க்க வேண்டிய தேவை ஏற்படின் ஐபிஓ விற்பனை தேதியை பரிசீலனை செய்ய தயங்கமாட்டோம்" என்று கூறினார்.
அப்போது நிருபர்கள் ஐபிஓ விற்பனை மத்திய அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் ஒருவேளை தாமதமானால் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கும் அளவிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியுமா? என்று வினவினர். அதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஒரு தனியார் நிறுவனத்தின் ஐபிஓ விற்பனையென்றால் அதை அந்த நிறுவனம் அதன் நிர்வாகக் குழுவினருக்கு மட்டுமே தெரிவித்தார் போதும். ஆனால், எல்ஐசி பொதுத்துறை நிறுவனம். இதன் பங்கு விற்பனை தாமதம் பற்றி சர்வதேச அளவில் விளக்கிக் கூற வேண்டியிருக்கிறது" என்று கூறினார்.
எல்ஐசி பங்கு விற்பனையில், அந்நிய நேரடி முதலீட்டாளர்களும் 20சதவீதம் வரை பங்குகளை வாங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலால் உலகப் பொருளாதாரமே சிக்கலை சந்திக்கும் சூழல் நிலவுகிறது. இந்தச் சூழலால் சர்வதேச அளவில் எல்ஐசி பங்கு விற்பனையில் பங்கேற்பதில் எவ்வளவு தூரம் ஆர்வம் காட்டப்படும் என்பது தெரியவில்லை. இதனாலேயே எல்ஐசி பங்கு விற்பனைத் திட்டத்தை சற்று தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பான் கார்டினை எல்ஐசி பாலிசி இணைப்பு அவசியம்:
எல்ஐசி ஐபிஓ ஏலத்தில் இணைவது மற்றும் எல்ஐசி பங்குகளின் பலன்களை நீங்கள் பெற வேண்டும் என்றால், ஒவ்வொரு பாலிசிதாரரும் தங்களது பான் விபரங்களை கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும். இல்லாவிடில் எந்தப் பலனையும் நீங்கள் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பான் கார்டினை எல்ஐசியில் பாலிசியுடன் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும். டிமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும். தற்போது 8 கோடி டிமேட் கணக்குகளுடன் ஒப்பிடுகையில் எல்ஐசியில் மட்டும் 25 கோடி பாலிசிதாரர்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.