Deadline Alert: டிசம்பர் 31-க்குள் இதைச் செய்யாவிட்டால் சிக்கல்! மூன்று முக்கிய விஷயங்கள் இருக்கு.. உடனே பண்ணுங்க
காலக்கெடுவைத் தவறவிடுவது வரி தாக்கல் செய்தல், வங்கிப் பரிவர்த்தனைகள், முதலீட்டு நடவடிக்கைகள் மற்றும் இணக்கக் கடமைகளில் (compliance obligations) பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

நடப்பு நிதியாண்டு நிறைவடைய உள்ள நிலையில், வரி செலுத்துவோர் மற்றும் வணிக நிறுவனங்கள் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடையும் மூன்று முக்கியமான நிதி காலக்கெடுவை (deadlines) கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தக் காலக்கெடுவைத் தவறவிடுவது வரி தாக்கல் செய்தல், வங்கிப் பரிவர்த்தனைகள், முதலீட்டு நடவடிக்கைகள் மற்றும் இணக்கக் கடமைகளில் (compliance obligations) பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
ஆதார் பான் கார்டு இணைப்பு
அக்டோபர் 1, 2024 அன்று அல்லது அதற்கு முன்னதாக ஆதார் பெற்ற வரி செலுத்துவோர், தங்களது நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN) டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் இணைக்க தவறினால், உங்கள் PAN எண் செயலிழந்து (Inoperative) போகும். இதனால் பின்வரும் நிதிச் செயல்பாடுகள் பாதிக்கப்படும்:
- வங்கிக் கணக்குத் தொடங்குதல்.
- டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் பெறுதல்.
- மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்குதல்.
- குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் ரொக்கம் டெபாசிட் செய்தல்.
மேலும், செயலிழந்த PAN காரணமாக வருமான வரி தாக்கல் செய்தல், ரீஃபண்ட் (Refund) பெறுதல், TDS/TCS வரவுகள் மற்றும் வரி விலக்கிற்கான 15G/15H படிவங்களைச் சமர்ப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.
வருடாந்திர GST தாக்கல் (Annual GST Return)
வணிகங்கள் மற்றும் GST பதிவு செய்த நிறுவனங்களுக்கு, வருடாந்திர GST கணக்கைத் தாக்கல் செய்ய டிசம்பர் 31 இறுதி நாளாகும். இதனை தாக்கல் செய்யும் போது நிதி ஆண்டின் மொத்த விற்பனை, உள்ளீட்டு வரி வரவு (ITC), செலுத்திய வரிகள் மற்றும் பெற்ற ரீஃபண்டுகள் பற்றிய விவரங்கள் இடம்பெறும்.
தாக்கல் செய்வதில் ஏற்படும் காலதாமதம் அல்லது பிழைகள் அபராதக் கட்டணம் மற்றும் வரி அதிகாரிகளின் ஆய்வுக்கு வழிவகுக்கும்.
வருமான வரித் திருத்தப்பட்ட அல்லது காலதாமதமான தாக்கல் (Revised or Belated ITR)
மதிப்பீட்டு ஆண்டு 2025-26-க்கான (Assessment Year 2025-26) வருமான வரித் தாக்கலைத் திருத்தவோ அல்லது காலதாமதமாகத் தாக்கல் செய்யவோ வருமான வரிச் சட்டம் பிரிவு 139(5)-ன் கீழ் டிசம்பர் 31 கடைசித் தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அபராதங்களை தவிர்க்கலாம்
இதற்கு முன்பு தாக்கல் செய்த கணக்குகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் இந்த காலக்கெடுவிற்குள் அதனை சரிசெய்யலாம். இந்தத் தேதிக்குப் பிறகு, வரித் துறையின் சிறப்பு அனுமதி இன்றி திருத்தப்பட்ட கணக்குகளைத் தாக்கல் செய்ய முடியாது. 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கலை முடிப்பதன் மூலம் அபராதங்களைத் தவிர்க்கலாம்.
PAN மற்றும் ஆதார் இணைப்பு முடிக்கப்படும் வரை, இந்த ஆவணங்களை சார்ந்து நடைப்பெற கூடிய அரசு சேவைகளைப் பெறுவதும் கடினமாகக்கூடும்.






















