Digital Credit: மத்திய அரசின் சூப்பர் திட்டம்.. டிஜிட்டல் முறையில் வங்கிகளில் கடன் பெறும் வசதி விரைவில் தொடக்கம்..! UPI-இலும் ஒரு அற்புதம்..
டிஜிட்டல் கடன் வழங்கும் சேவையில் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா முன்னிலை வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு மற்றும் குறு வியாபாரிகள் கூட வங்கிகளில் கடன் பெறும் டிஜிட்டல் சேவையை இந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்றைய தினம் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் உத்சவ் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் பெரிய சாதனையாக இருக்கும் என்றும், இது டிஜிட்டல் பணபரிவர்த்தனைப் போல நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்களால் நிகழும் தரவுகள் திருட்டு, கடன் பெறுவோரை துன்புறுத்துதல் போன்றவற்றை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விதிமுறைகளின்படி சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் கடன் வழங்குவதற்கான கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும், இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இதன்மூலம் எளிதாக வங்கிகளில் கடன் வசதி பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த டிஜிட்டல் கடன் வழங்கும் சேவையில் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா முன்னிலை வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்நிகழ்ச்சியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனை சேவையில் (UPI) மாநில மொழிகளின் குரல் அடிப்படையில் கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
தேசிய மொழி மொழிபெயர்ப்பு தளமான பாஷினியுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ள இந்த வசதியில் 18 மொழிகளில் நாம் இந்த சேவையை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் UPI ஆனது உலகளவிலான சேவையாக மாற வேண்டும் என்ற அடிப்படையில் நேபாளம், சிங்கப்பூர், பூட்டான், இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுடன் இணைந்து நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா செயல்பட தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 10 நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு UPI சேவைகள் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.