(Source: ECI/ABP News/ABP Majha)
Budget 2023: பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு என்ற சொற்கள் இடம்பெற்றதா? விவரம்..
2023-24ஆம் நிதி ஆண்டிக்கான பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டினால், இந்திய பங்குச் சந்தை இன்று காலை முதலே ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என நம்பப்பட்ட பல்வேறு அம்சங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஒன்றாக இருந்தது. மேலும், சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இருசக்கர மற்றும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும், தனியார் போக்குவரத்து துறை சார்ந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.அதேபோல், சமையல் எரிவாயு குறித்தும் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை என்பதால் நடுத்தர மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியானது குறைக்கப்பட வேண்டும் என் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான வரி குறையுமா, சாமானிய மக்களும் தங்கத்தை வாங்க முடியுமா என்று மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023-2024 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 2023ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தங்கம், வெள்ளி பொருட்களுக்கான சுங்க வரி 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரங்கள் மீதான இறக்குமதி வரி, குறைக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளியின் வரி குறைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. இதுபோன்ற வரி குறைத்தால், தங்கம், வெள்ளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டதற்கு எதிராக தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றிற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் வரும் காலங்களில் தங்கம், வெள்ளி விலை உயர்வும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது அதற்கான வரி உயர்த்தி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை உயர்வு
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் இறக்குமதி குறைந்த இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக பணம் கொடுத்து தங்கத்தை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இறக்குமதியை கட்டுப்படுத்தவும், இறக்குமதி-ஏற்றுமதியில் சமநிலையை பராமரிக்கவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தங்கம், வெள்ளியின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட சில மணி நேரத்திலேயே தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ. 43,320 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு தங்கம் விலையானது ரூ.55 உயர்ந்து ரூ5,415க்கு விற்கப்படுகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ 1.20 உயர்ந்து ரூ.76க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கக் கட்டியில் இருந்து செய்யப்படும் ஆபரணங்களுக்கு சுங்கவரி உயர்த்தப்பட்டதால் தங்கம் விலை தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது காலையில் கிராமுக்கு ரூ 22 என்றும், மதியம் கிராமுக்கு ரூ.55 என்றும் இன்று மட்டும் தங்கம் விலை ரூ.77 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.