Direct Tax Code: 63 ஆண்டுகால சட்டத்தை ஒழித்து கட்டும் நிர்மலா சீதாராமன்? டைரக்ட் டேக்ஸ் கோட் என்றால் என்ன?
Direct Tax Code: மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படும், டைரக்ட் டேக்ஸ் கோட் என்றால் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Direct Tax Code: மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான, 63 ஆண்டுகால பழைய சட்டம் எளிமையாக்கப்படலாம் என கூறப்படுகிறது.
டைரக்ட் டேக்ஸ் கோட்:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, வரும் பிப்ரவரி 1, 2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அதில் நேரடி வரிக் குறியீடு (டைரக்ட் டேக்ஸ் கோட் 2025) தொடர்பான அறிவிப்பி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய சட்டம் வருமான வரிச் சட்டம், 63 ஆண்டுகள் பழமையான 1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வருமான வரிச்சட்டத்திற்கு மாற்றாக அமையும். டைரக்ட் டேக்ஸ் கொண்டுவரப்படுவதன் நோக்கம், விதிகளை எளிமையாக்குவது, பொருத்தமற்ற பிரிவுகளை நீக்கி, சாமானிய மக்களுக்கு மொழியை மேலும் புரிய வைப்பதாகும். இது வரிச் சட்டங்களை எளிதாக்கும் என்றும், சட்டச் சிக்கல்களைக் குறைத்து, வரி செலுத்துவோருக்கு முழுச் செயல்முறையையும் எளிதாக்கும் என்றும் வரி நிபுணர்கள் நம்புகின்றனர். அதாவது பழைய சட்டத்தில் உள்ள வார்த்தைகள், பொதுமக்களுக்கு பல சந்தேகங்களை எழுப்புகின்றன. அவற்றை திருத்தி பொதுமக்களுக்கு எளிதில் புரியும்படி, சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தயாராகும் சட்ட திருத்தம்:
வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, புதிய சட்டம் இரண்டு பகுதிகளாகவா அல்லது மூன்றாக அமையுமா என்பதை முடிவு செய்து வருகிறது. பொதுமக்களின் கருத்துக்களுக்காக இந்த சட்ட வரைவு வெளியிடப்படும் என அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த சட்டமூலத்தை முதலில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, வரி செலுத்துவோர் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் அதைத் திருத்தலாம்.
இறுதி நிலையில் மசோதா:
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகம் (PMO) அதிகாரிகள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் கடந்த ஆறு முதல் எட்டு வாரங்களாக, இந்த மசோதாவை எளிமையாக்கி இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கூட்டத்தொடரின் எந்த நேரத்தில் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
வருமான வரிச் சட்டத்தை மாற்ற மூன்றாவது முயற்சி:
வருமான வரிச் சட்டத்தை திருத்த முயற்சி மேற்கொள்ளப்படுவது இது மூன்றாவது முறையாகும் . முன்னதாக, 2010ல் நேரடி வரி விதிப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, மோடி அரசு நிபுணர் குழுவை அமைத்தது, ஆனால் அவர்களின் அறிக்கை வெளியிடப்படவில்லை. மற்றும் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. புதிய சட்டத்தில், ஆயிரக்கணக்கான விதிகளை நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல ஆண்டுகளாக பொருத்தமற்றதாகிவிட்ட பிரிவுகளும் விலக்கப்படும். பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் மொழியை முடிந்தவரை எளிமைப்படுத்தவும் குழு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




















