Budget 2023: “எந்த முன்னேற்றமும் இல்லை”... மத்திய அரசின் பட்ஜெட்டை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நாட்டின் 2023-2024ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையை இன்று தாக்கல் செய்தார்.
2023-2024ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31ஆம் தேதி) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நாட்டின் 2023-2024ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார்.
இந்த ஆட்சியின் கடைசி முழுநேர பட்ஜெட் இதுவாகும். நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்வார். இதுவே, மத்திய பட்ஜெட் என அழைக்கப்படுகிறது. கூட்டத்தொடரின் முதல் அமர்வு அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
The budget was presented by the Modi govt keeping in view the upcoming Assembly polls in 3-4 states. There's nothing in the budget for poor people & to control inflation. No steps for jobs, to fill govt vacancies & MNREGA: Congress president Mallikarjun Kharge on #UnionBudget2023 pic.twitter.com/af8AHZhEhN
— ANI (@ANI) February 1, 2023
இதனிடையே மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், “ பாஜக மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது என்பதற்கு மோடி அரசின் பட்ஜெட் ஒரு சான்று என்றும், இது நாட்டை மனதில் கொள்ளாமல் தேர்தலை மட்டும் மனதில் வைத்து உருவாக்கப்பட்ட பட்ஜெட்” என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், “இந்த பட்ஜெட்டில் நாட்டில் பயங்கர பிரச்சினையாக உள்ள வேலையின்மைக்கு தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் பணவீக்கம் உள்ளது, சாமானிய மக்கள் சிரமத்தில் உள்ளனர். அன்றாடப் பொருட்களின் விலையைக் குறைக்கும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை. மாவு, பருப்பு, பால், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி நாட்டை கொள்ளையடித்த மோடி அரசு தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இந்த பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதார பட்ஜெட்டில் முன்னேற்றமும் இல்லை. விவசாயிகளுக்கு எதிராக உள்ள நரேந்திர மோடி அரசு விவசாயிகளுக்கான பட்ஜெட்டில் எதையும் கொடுக்கவில்லை. 2022 ஆம் ஆண்டு விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டும், அதை ஏன் நிறைவேற்றவில்லை?” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
“மொத்தத்தில் மோடி அரசு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கடினமாக்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்ததைத் தவிர, மோடி அரசு எதுவும் செய்யவில்லை” என மத்திய பட்ஜெட் குறித்து மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.