Paytm | இந்தியாவின் பெரிய ஐபிஓவுக்கு தயாராகிறது பேடிஎம்: தெரிந்துகொள்ளவேண்டிய 10 தகவல்கள்..
ஐபிஓவுக்கு அனுமதி வேண்டி வெள்ளிக்கிழமை (ஜூலை 16) செபியிடம் விண்ணப்பத்திருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் சுமார் ரூ.16,600 கோடி திரட்ட பேடிஎம் திட்டமிட்டிருக்கிறது.
ஜொமோட்டோ நிறுவனத்தின் ஐபிஒ பரபரப்பு முடிந்திருக்கும் இந்த சூழலில் பேடிஎம் நிறுவனம் ஐபிஓவுக்கு தயாராகி வருகிறது. ஐபிஓவுக்கு அனுமதி வேண்டி வெள்ளிக்கிழமை (ஜூலை 16) செபியிடம் விண்ணப்பத்திருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் சுமார் ரூ.16,600 கோடி திரட்ட பேடிஎம் திட்டமிட்டிருக்கிறது. இது இந்தியாவின் பெரிய ஐபிஓ ஆகும். கடந்த 2010-ம் ஆண்டு கோல் இந்தியா நிறுவனம் 15,475 கோடி ரூபாய் திரட்டியது. இதுவரை ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட அதிகபட்ச தொகை இதுதான். 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த எல்லையை பேடிஎம் முறியடிக்க இருக்கிறது. நிறுவனம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் சில.
1. ஐபிஓ மூலம் 16,600 கோடி ரூபாய் திரட்டப்படுகிறது. இதில் 8300 கோடி ரூபாய் பங்குகளை ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் பங்குதாரர்கள் விற்க இருக்கிறார்கள். மீதமுள்ள ரூ.8300 கோடி புதிய பங்குகள் மூலம் திரட்ட இருக்கிறார்கள்.
2. ஆன்ட் குழுமம் மற்றும் மற்றும் அலிபாபா ஆகிய நிறுவனங்கள் இணைந்து 38 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன. சாப்ட்பேங்க் 18.73 சதவீதமும் எலிவேஷன் கேபிடல் 17.65 சதவீத பங்குகளையும் பேடிஎம் நிறுவனத்தில் வைத்துள்ளன. நிறுவனர் விஜய் சேகர் சர்மா வசம் 14.6 சதவீத பங்குகளும் உள்ளன. இது தவிர ரத்தன் டாடா மற்றும் வாரன் பபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனமும் முதலீடு செய்திருக்கின்றன.
3. பெர்க்ஷயர் ஹாத்வே, எலிவேஷன் கேபிடல், சாப்ட்பேங்க், ரத்தன் டாடா மற்றும் விஜய்சேகர் சர்மா ஆகியோர் கணிசமான பங்குகளை விற்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் யார் எவ்வளவு பங்குகளை விற்கிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல அலிபாபா மற்றும் ஆண்ட் குழுமம் இரண்டும் சேர்ந்து 38 சதவீத பங்குகளை வைத்துள்ளன. இதனை 25 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணியாளர்களும் கணிசமான அளவுக்கு பங்குகளை விற்க இருக்கிறார்கள்.
4. ரத்தன டாடா 2015-ம் ஆண்டு தனிப்பட்ட முறையில் முதலீடு செய்தார். இவர் வசம் 75000 பேடிஎம் பங்குகள் உள்ளன
5. பட்டியலான பின்பும் வெளிநாட்டு உரிமை மற்றும் வெளிநாடு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாகவே பேடிஎம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
6. பேடிஎம் நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் நஷ்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2019-ம் நிதி ஆண்டில் ரூ.4,325 கோடி, 2020-ம் ஆண்டில் ரூ.2,943 கோடி, 2021-ம் ஆண்டில் ரூ.1,704 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் லாபம் எதிர்பார்க்க முடியாது என அறிவிகக்ப்பட்டிருக்கிறது. தற்போது திரட்டப்படும் நிதி விரிவாக்கம் மற்றும் நிறுவனங்களை கையகப்படுத்துதல் நடவடிக்கைகாக செலவு செய்ய இருப்பதால் உடனடியாக லாபம் கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
7. `பே த்ரோ மொபைல்’ என்பதன் சுருக்கமே பேடிஎம். 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். 2014-ம் ஆண்டு வாலட் தொடங்கப்பட்டு அதன் மூலம் பணப்பரிமாற்றம் நடந்தது. 2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு டிஜிட்டல் பரிமாற்றம் வேகமாக நடந்தது. பேமேண்ட் சேவைகளுக்கு கிடைக்கும் பரிவர்த்தனை கட்டணமே பேடிஎம் நிறுவனத்தின் முக்கியமான வருமானம். தற்போது 2.1 கோடி நிறுவனங்கள் (மெர்ச்சண்ட்ஸ்) மற்றும் 33 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
8. 2009-ம் ஆண்டு மொபைல்களுக்கான மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கும் நிறுவனமாக பேடிஎம் இருந்தது. ஆனால் தற்போது நிதிசேவைகள் துறையில் முக்கியமான நிறுவனமாக மாறி இருக்கிறது. பணப்பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல், புரோக்கிங், காப்பீடு, மியூச்சுவல் பண்ட், பேமெண்ட் பேங்க் என பல தொழில்களில் உள்ளது பேடிஎம்.
9. படிக்கும்போது ஆங்கித்தில் பேசுவதற்கு தடுமாறியவர் விஜய்சேகர் சர்மா. ஹிந்தியில் படித்து புரிந்துகொண்ட பிறகுதான் பேசுவார். ஆனால் இன்று இந்தியாவின் முக்கிய பேமெண்ட் நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்.
10. 2010-ம் ஆண்டே பேடிஎம் நிறுவனத்தின் ஐபிஓ கொண்டுவர திட்டமிட்டார். அப்போது போன்களுக்கு காலர் ட்யூன் வழங்கும் நிறுவனமாக இருந்தது. ஐபிஓவுக்கான தேதியெல்லாமல் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அப்போது சந்தை சூழல் சரியில்லாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அப்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.500 கோடி மட்டுமே. தற்போது 16,600 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. தற்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1.85 லட்சம் கோடி. 10 ஆண்டுகள் காத்திருந்ததில் 370 மடங்குக்கு நிறுவனம் வளர்ந்திருக்கிறது.