New Rajdoot 350: மீண்டும் சந்தைக்கு வரும் ராஜ்தூத் 350 பைக் - நவீன அப்கிரேட், அட்டகாசமான மைலேஜ் - கம்மி விலை
Yamaha New Rajdoot 350 Motorcycle: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் யமாஹா நிறுவனத்தின், ராஜ்தூத் 350 மாடல் மோட்டார் சைக்கிள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Yamaha New Rajdoot 350: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் யமாஹா நிறுவனத்தின், ராஜ்தூத் மாடல் மோட்டார் சைக்கிள் கடந்த 1983ம் ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
யமாஹா ராஜ்தூத் 350 மாடல் மோட்டார் சைக்கிள்:
விண்டேஜ் மாடல் மோட்டார்சைக்கிள்களுக்கு பெயர் போன யமாஹாவின், மற்றொரு பிரபலமான வாகனம் தான் ராஜ்தூத். கடந்த 1983ம் ஆண்டு இந்திய சந்தையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஸ்ட்ரோக் பைக் ஆகும். கடும்போட்டி, அதிகப்படியான் விலை மற்றும் புதிய உமிழ்வு விதிகள் காரணமாக, கடந்த 1989ம் ஆண்டு ராஜ்தூத் பைக்கின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நவீன காலத்திற்கு ஏற்ற அப்கிரேட்களுடன் அந்த வாகனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்த யமாஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையானால், புதிய ஸ்டைலில் அந்த பைக் விரைவில் சந்தைப்படுத்தப்படலாம்.
வெளியீடு எப்போது?
வெளியாகியுள்ள தகவல்களின்படி, அடுத்த ஆண்டின் மார்ச் மாதத்தில் புதிய அவதாரத்தில் ராஜ்தூத் 350 பைக் மாடல் அறிமுகப்படுத்தப்படலாம். அதேநேரம், வாகனத்தின் அறிமுகம் தொடர்பாக நிறுவனம் தரப்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, புதிய எடிஷனில் என்னென்ன அப்டேட்கள் இடம்பெறலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.
புதிய ராஜ்தூத் 350 பைக்கில் என்ன அம்சங்கள் இருக்கலாம்?
புதிய ராஜ்தூத் 350 பைக் மாடலில் மலிவு விலையில் கிடைக்கக் கூடியதாகவும், அதேநேரம் முந்தைய எடிஷனை காட்டிலும் அதிக அம்சங்கள் கொண்டதாகவும் உருவாக்கப்படுகிறதாம். அதன்படி, புதிய எடிஷனில் முன் மற்றும் பின்பக்கங்களில் டிஸ்க் பிரேக்குகள் இடம்பெறலாம். டூயல் சேனல் ஏபிஎஸ் அம்சம் வழங்கப்படலாம். டெலஸ்கோபிக் மற்றும் மோனோஷாக் சச்பென்ஷன் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்டகாசமான வடிவமைப்பில் கவனம் செலுத்துவதோடு டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டிஜிட்டல் ஓடோமீட்டர், மற்றும் டிஜிட்டல் ட்ரிப் மீட்டர் போன்ற நவீன காலத்திற்கான அப்கிரேட்களும் வழங்கப்படுமாம். கூடுதலாக எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி இண்டிகேட்டர்ஸ், டியூப்லெஸ் டயர்ஸ் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்களும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் விவரங்கள்:
பழைய எடிஷனில் 347சிசி டு-ஸ்ட்ரோக் ஏர் கூல்ட் பாரெல்லல் ட்வின் இன்ஜின் இடம்பெற்று இருந்தது. 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொண்டிருந்த இந்த வாகனம், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 4 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டிருந்தது. இந்நிலையில் வெளியாகியுள்ள தகவலின்படி பழைய எடிஷனில் இருந்த அதே இன்ஜினை பிஎஸ் 6 உமிழ்வு விதிகளுக்கு பொருந்தும்படி, 4 ஸ்ட்ரோக்காக மேம்படுத்தி பயன்படுத்த யமாஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். இது லிட்டருக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கப்படும் என தரவுகள் தெரிவிக்கின்றன.
விலை, போட்டியாளர் விவரங்கள்:
புதிய அப்கிரேட்கள், திருத்தப்பட்ட டிசைன், மேம்படுத்தப்பட்ட இன்ஜின் காரணமாக, புதிய ராஜ்தூத் 350 மாடல் மோட்டார்சைக்கிளின் விலை ரூ.1.7 லட்சம் முதல் ரூ.1.8 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். வெளியாகியுள்ள தகவல்களின்படி ராஜ்தூத் 350 வாகனம் அறிமுகமானால் இந்திய சந்தையில் அதற்கு, ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, ஜாவா 42, யெஸ்டி ரோட்ஸ்டர், மற்றும் ஹோண்டா ஹென்னஸ் CB350 ஆகியவை கடும் போட்டியாளர்களாக விளங்கும். கூடுதலாக ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் ஆகியவையும், ராஜ்தூத் 350 மாடலுடன் ஒரே செக்மெண்டில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்தூத் 350 மாடலை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இல்லாமல், தகவல்களை வழங்கும் நோக்கிலேயே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.





















