Yamaha Electric Scooter: யமாஹா புதிய ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; இதுல என்ன அதிசயமா.? எலக்ட்ரிக் ஸ்கூட்டருங்க.! விவரம் இதோ
மின்சார வாகனங்களை தயாரிப்பதில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு வரும் நிலையில், விரைவில் அறிமுகமாக உள்ளது பிரபல யமாஹா நிறுவனத்தின் புதிய இவி ஸ்கூட்டர். அதன் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பைக் பிரியர்களின் ப்ரியமான நிறுவனமாக விளங்கும் யமாஹா, தனது புதிய மின்சார ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மக்களிடையே பிரபலமடைந்துவரும் மின்சார வாகனங்கள்
மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறுவது போல், வாகன உலகிலும் தற்போது பெரும் மாற்றம் வந்துள்ளது. பெட்ரோல், டீசல், லேட்டஸ்டாக சிஎன்ஜி என, வாகனங்கள் பல்வேறு எரிபொருட்களை பார்த்துவிட்டது. ஆனால், தற்போது புதிய மாற்றமாக, மின்சார வாகனங்கள் மக்களிடையே பிரபலமடைந்து வருகின்றன.
இதனால், உலகில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்துமே, தற்போது மின்சார வாகனங்களை தயாரித்து அறிமுகப்படுத்தி வருகின்றன. கார், பைக், பஸ், சிறிய சரக்கு வாகனங்கள் என கிட்டத்தட்ட அனைத்திலுமே மின்சார வெர்ஷன்கள் வரத் தொடங்கிவிட்டன. இதனால், பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டு அதிக ரேஞ்சுகளுடன் கூடிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையில், குறைந்த விலையிலான மின்சார வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.
அந்த ரேஸில் தற்போது இணைந்துள்ளது, ஜப்பானின் பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான யமாஹா மோட்டார்ஸ்.
யமாஹா அறிமுகப்படுத்த இருக்கும் RY01 மின்சார ஸ்கூட்டர்
ஏற்கனவே, யமாஹா நிறுவனத்தின் பைக்குகள் உலகம் முழுவதிலும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக, இந்தியாவில், விற்பனையில் முன்னணியில் உள்ள யமாஹா நிறுவனம், பைக் ஓட்டுபவர்களின் ப்ரியமான நிறுவனம் என்றே சொல்லலாம்.
பொதுவாக யமாஹா பைக்குகள் வேகத்திற்கும், தரத்திற்கும் பெயர் போனவை. யமாஹா என்றாலே நம்பி வாங்கலாம் என்ற அளவிற்கு இந்தியாவில் பெயர் பெற்றுள்ளது இந்நிறுவனம். இந்நிலையில், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது யமாஹா.
ரிவர் இண்டியை அடிப்படையாக கொண்ட குறைந்த விலை எலக்ரிக் ஸ்கூட்டர் பிரிவில், புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது யமாஹா. இந்த மாடலுக்கு தற்போது RY01 என்ற குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. பைக் வெளிவரும்போது அதற்கு பெயர் சூட்டப்படும்.
யமாஹா நிறுவனம், பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ரிவர் நிறுவனத்தில் ஒரு முதலீட்டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது. ரிவர் நிறுவனத்தில், கடந்த 2024-ல், யமாஹா நிறுவனம் சுமார் 40 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்நிலையில், வரவிருக்கும் புதிய யமாஹா எலக்ட்ரிக் பைக்கில், ரிவர் இண்டி எலக்ட்ரிக் பைக்கில் உள்ள அதே பேட்டரி அமைப்பு மற்றும் பவர் ட்ரெய்னைப் பயன்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பைக், இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
பெங்களூருவில் தயாராவதால் விலை குறைவு
மேலும், யமாஹாவின் இந்த புதிய எலக்ட்ரிக் பைக், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள அந்நிறுவனத்தின் பொறியியல் குழுக்களால் உருவாக்கப்பட்டுள்ளதாகம். இந்த மாடல், யமாஹாவின் வடிவமைப்பு மற்றும் பிராண்ட் அம்சங்களை கொண்டிருக்கும் எனவும், பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சோதனை ஆகியவை ரிவர் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைக்கின் தயாரிப்பும் பெங்களூருவில் உள்ள ரிவர் நிறுவனத்திலேயே மேற்கொள்ளப்படுவதால், செலவுகள் குறைந்து, அது பைக்கின் விலையிலும் எதிரொலிக்கும். ஆகவே, தரமான ஒரு பைக், குறைந்த விலையில் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படும். மேலும், தற்போது மார்க்கெட்டில் உள்ள எலக்ட்ரிக் பைக்குகளுக்கு, யமாஹா கடும் பேட்டியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.





















