வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன்: தூத்துக்குடியில் தயாராகும் 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார்! கியா-வை வீழ்த்த வருமா?
வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன், வியட்நாமில் பிரபலமாக உள்ள ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். இது 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி (7 Seater Electric MPV) ரகத்தை சேர்ந்ததாகும்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (Vinfast). தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் (Thoothukudi) வின்ஃபாஸ்ட் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது. அந்த தொழிற்சாலை சமீபத்தில் திறக்கப்பட்டு, எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பணிகள் தொடங்கியுள்ளன.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் விஎஃப் 6 (VF 6) மற்றும் விஎஃப்7 (VF 7) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கவுள்ளது. இதற்காக பல்வேறு எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் காப்புரிமை கோரி வின்ஃபாஸ்ட் நிறுவனம் விண்ணப்பம் செய்து வருகிறது. இந்த வரிசையில் வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் (Vinfast Limo Green) காருக்கு, இந்தியாவில் காப்புரிமை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக கார்வாலே தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன், வியட்நாமில் பிரபலமாக உள்ள ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். இது 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி (7 Seater Electric MPV) ரகத்தை சேர்ந்ததாகும்.
எனவே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் காரின் நீளம் 4.7 மீட்டர்கள் ஆகவும், அகலம் 1.8 மீட்டர்கள் ஆகவும், உயரம் 1.7 மீட்டர்கள் ஆகவும் இருக்கும். ஆனால் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் நீளம் 4.5 மீட்டர்கள் ஆகவும், அகலம் 1.8 மீட்டர்கள் ஆகவும், உயரம் 1.7 மீட்டர்கள் ஆகவும் உள்ளது. அதாவது கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை விட, வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் எலெக்ட்ரிக் காரின் நீளம் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதே நேரத்தில் வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் எலெக்ட்ரிக் காரில், 60.13 kWh பேட்டரி தொகுப்ப வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 450 கிலோ மீட்டர் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 80 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், இதன் பேட்டரியை, வெறும் 30 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும்.
அத்துடன் சிங்கிள் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், எல்இடி லைட்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், 2 டிரைவிங் மோடுகள், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 4 ஸ்பீக்கர்கள், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளும் (Features) வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 17.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 24.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். கிட்டத்தட்ட இதே விலையில்தான் இந்தியாவில் வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















