Mahindra Best Car: கரடுமுரடான மஹிந்திரா.. கட்டிக் காக்கும் சிங்கிள் மாடல் - 56 ட்ரிம், விற்று தீரும் 9 சீட்டர் எஸ்யுவி
Mahindra Scorpio N SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ, நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் மாடலாக இருப்பது ஏன் என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Mahindra Scorpio N SUV: மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ கார் மாடலின் விலை மற்றும் அம்சங்கள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் அதாவது ஜனவரி தொடங்கி ஜுன் மாதம் வரையிலான காலகட்டங்களில், 3 லட்சத்து ஆயிரத்து 194 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம், முதல் 6 மாதங்களில் அதிக வாகனங்களை விற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதோடு, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான விற்பனையை காட்டிலும், 20 சதவிகிதம் கூடுதல் விற்பனை பதிவாகியுள்ளது. இந்த விற்பனையில் நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ கார் மாடல் மிகவும் முக்கிய பங்கு வகித்து, மஹிந்திராவின் போர்ட்ஃபோலியோவில் அதிகம் விற்பனையாகும் வாகனமாகவும் திகழ்கிறது.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ - விற்பனை விவரம்:
நடப்பாண்டின் முதல் மாதத்தில் மஹிந்திராவின் மொத்த விற்பனையில், ஸ்கார்ப்பியோ (கிளாசிக் & N மாடல் சேர்ந்து) கார் மட்டும் 15 ஆயிரத்து 442 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதனைதொடர்ந்து, பிப்ரவரியில் 13 ஆயிரத்து 618, மார்ச் மாதத்தில் 13 ஆயிரத்து 913, ஏப்ரல் மாதத்தில் 15 ஆயிரத்து 534, மே மாதத்தில் 14 ஆயிரத்து 401 மற்றும் ஜுன் மாதத்தில் 12 ஆயிரத்து 740 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதாவது முதல் 6 மாதங்களில் 85 ஆயிரத்து 648 யூனிட்கள் ஸ்கார்ப்பியோவிலிருந்து விற்பனையாகியுள்ளன. நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 28 சதவிகிதம் இந்த ஒரு மாடலில் மட்டுமே பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை மக்கள் விரும்புவது ஏன்?
கரடுமுரடான தோற்றம், வலுவான செயல்திறன், சாலையில் கம்பீரமான தோற்றம் ஆகிய அம்சங்களால் ஸ்கார்ப்பியோ பயனர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. நகர மற்றும் ஆஃப் ரோட் பயன்பாட்டிற்கும் இது சிறந்த தேர்வாக உள்ளது. விசாலமான இடவசதி, சொகுசான பயணம், மோசமான சாலைகளை கூட கடந்து செல்லும் வகையிலான திறனை பெற்று இருப்பது ஸ்கார்ப்பியோவை வலுவான எஸ்யுவி ஆப்ஷனாக முன்னிறுத்துகிறது. குறைந்த பராமரிப்பு செலவு, எளிதில் கிடைக்கும் உதிரி பாகங்கள், விலைக்கு ஏற்ற மதிப்பு ஆகியவற்றை கொண்டு இருப்பது, ஸ்கார்ப்பியோ விற்பனையில் அசத்துவதற்கு ஏதுவான காரணங்களாக உள்ளன.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ - வெளிப்புற அம்சங்கள்
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என குறிப்பிட்டாலோ அனைவருக்கும் நினைவிற்கு வரும் விதமாக, கரடுமுரடான மற்றும் வலுவான கட்டமைப்பை பாக்ஸி வடிவமைப்பில் கொண்டுள்ளது. பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடிகள் உடன் கூடிய ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், 17 இன்ச் ஸ்டீல் வீல்கள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளன. பயனர்களை கவரும் விதமாக எவரெஸ்ட் ஒயிட், ஸ்டெல்த் பிளாக் உள்ளிட்ட 5 வண்ண ஆப்ஷன்களை வழங்குகின்றன.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ - உட்புற அம்சங்கள்
மேனுவல் ஏசி, டில்ட் ஸ்டியரிங் அட்ஜெஸ்ட்மெண்ட், ப்ளூடூத் மற்றும் ஸ்க்ரீன் மானிட்டரிங் உடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் உள்ளன. ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ், சன்ரூஃப், 12 ஸ்பீக்கர் சோனி ஆடியோ சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. விசாலமான இடவசதியுடன் 7 மற்றும் 9 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ - பாதுகாப்பு அம்சங்கள்
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்கார்ப்பியோவில் ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி 6 ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் & டிசெண்ட் கண்ட்ரோல், ஃபார்வர்ட் கொலிசன் வார்னிங், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் டிபார்ட்சுர் வார்னிங், ஹை பீம் அசிஸ்ட், குழந்தைகளுக்கான ISOFIX இருக்கை மற்றும் ரியர் பார்கிங் சென்சார் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. டாப் வேரியண்ட்களில் லெவல் 2 ADAS வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ - இன்ஜின் விவரங்கள்
மஹிந்திரா ஸ்கார்ப்பியோவானது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. பெட்ரோல் எடிஷனானது 2.0 லிட்டர் mஸ்டாலியன் டர்போ சார்ஜ்ட் இன்ஜினாகவும், டீசல் எடிஷன் 2.2 லிட்டர் mஹாவ்க் இன்ஜினையும் கொண்டுள்ளது. இரண்டிலுமே ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. ஸ்கார்ப்பியோ என் கார் மாடலானது ரியர் வீல் மற்றும் 4 வீல் ட்ரைவ் ஆப்ஷன்களில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. லிட்டருக்கு சுமார் 14 முதல் 16 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ - விலை, போட்டியாளர்கள்
உள்நாட்டு சந்தையில் சென்னையில் மஹிந்திரா கிளாசிக் ஸ்கார்ப்பியோவின் விலையானது, 13.77 லட்சத்தில் தொடங்கி 17 லட்சத்து 72 ஆயிரம் (ஆன் - ரோட்) வரையில் நீள்கிறது. இது மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதேநேரம், ஸ்கார்ப்பியோ N எடிஷனின் விலையானது 17 லட்சத்து 60 ஆயிரத்தில் தொடங்கி 32 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது. இது மொத்தம் 52 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரானது உள்நாட்டு சந்தையில் ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், MG ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.





















