அவ்வளவு சுலபமானது இல்லை: போர்டு நிறுவனம் சென்னையில் உருவான கதை!
ஜப்பானிய நிறுவனமான சுஸுகி, அரசாங்கத்துடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கி, 1983 ஆம் ஆண்டில் மாருதி 800 என்னும் சிறிய காரை அறிமுகப்படுத்தியது.
அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்ட் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறுகிறது. ஆனால் சென்னைக்குள் அது பிரவேசித்தபோது செழிப்பானதொரு ஆட்டோமொபைல் கட்டமைப்பை எப்படி உருவாக்கியது தெரியுமா?
90களின் முற்பகுதியில் ஆட்டோமொபைல் துறையில் ஒரு உற்சாகமான வளர்ச்சி இருந்தது. நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்திய சந்தை பயன்படுத்தப்படாமலேயே இருந்தது. அம்பாசிடர்களும் ப்ரீமியர் பத்மினிக்களும் தொழில்துறை புரட்சியில் வளர்ச்சி அடைந்து வந்த நாடுகளுடன் போட்டி போடும் ரகமாக இல்லை. ஜப்பானிய நிறுவனமான சுஸுகி, அரசாங்கத்துடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கி, 1983 ஆம் ஆண்டில் மாருதி 800 என்னும் சிறிய காரை அறிமுகப்படுத்தியது. அடுத்த 10 ஆண்டுகள் இந்த மாருதி கோலோச்சியது, கார் வாங்குவது பெரிய விஷயமாக இருந்த காலக்கட்டத்தில் மலிவு விலை குடும்ப ஆட்டோமொபைலாக மாருதி வலம் வந்தது.
மத்திய அரசு ஆட்டோமொபைல் துறையில் அந்நியக் கூட்டு முயற்சிகளை வரவேற்கத் தொடங்கிய சமயம் 90களில் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு இந்திய சந்தைக்கு வருவதற்கான தனது முடிவை அறிவித்தது. மகாராஷ்டிராவின் மஹிந்த்ரா நிறுவனத்துடன் கைகோத்து ஃபோர்டு மஹிந்த்ரா என்னும் மாடலை உற்பத்தி செய்தது.போர்டு நிறுவனத்தின் ஊடகத் தொடர்பு என்பது மிகக் கெடுபிடியானதாக இருந்தது. நிறுவனம் அனுமதி அளித்தால் தவிர யாரும் பேசமுன்வரவில்லை. அது இங்கே இந்திய வணிகப் பத்திரிகையாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
மஹிந்த்ராவுடன் டை-அப் என முடிவானதும் ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையும் மகாராஷ்டிராவில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல மாத ஆய்வுக்குப் பிறகு புனே, குர்கான் மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களைத் தேர்வு செய்தது நிறுவனம். அதில் சென்னை இறுதியாக இருந்தது.
இருப்பினும் வாகன உதிரிபாகத் தொழில், பயிற்சி பெற்ற ஊழியர்கள், பொறியாளர்கள், துறைமுகம் என தொழிற்சாலை அமைப்பதற்கான வலுவான சூழல் சென்னைக்கு இருந்தது. இருந்தாலும் சென்னையை ஒரு தொழிற்சாலை நகரமாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே சமயம் தமிழ்நாடு முதல்வராக அப்போது பதவிவகித்த ஜெ.ஜெயலலிதாவை சந்திப்பது அத்தனைச் சுலபமானதாக இல்லை. எல்லாம் ஒருவழியாகப் பேசி முடிக்கப்பட்டு 1995ல் போர்டு நிறுவனம் சென்னையில் தனது தொழிற்சாலையைத் திறக்கும் திட்டத்தை முடிவு செய்தது. ஆனால் அது கிட்டத்தட்ட 40 விதமான விதிமுறைகளுடன் வந்தது. உதாரணத்துக்கு ஃபோர்டு நிறுவனத்தைச் சுற்றி 20 கிமீ சுற்றுக்கு வேறு எந்த தொழிற்சாலையும் இருக்கக் கூடாது என போர்டு கட்டளை இட்டது. போர்ட் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டின் தொழில்துறை முன்னேற்றம், மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவே இதுபோன்ற அத்தனை கட்டளைகளுக்கும் சம்மதம் தெரிவித்தார் ஜெயலலிதா.
போர்ட் நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு கற்றுக்கொண்டவை ஏராளம்.தொழில்துறைக்கான பாலிசி வரைவு செய்வதை அரசு கற்றுக்கொண்டது. அது அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களை தமிழ்நாட்டுக்கு வரவேற்க பேருதவியாக இருந்தது.