New 7 Seater Hybrid: புதுசா வரப்போகும் 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி, எம்பிவிக்கள் - எந்தெந்த பிராண்டில் தெரியுமா?
Upcoming 7 Seater Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள, 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி மற்றும் எம்பிவிக்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Upcoming 7 Seater Hybrid SUV: விரைவில் சந்தைபடுத்தப்பட உள்ள, 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி மற்றும் எம்பிவிக்களின் விவரங்களை இங்கே அறியலாம்.
புதிய ஹைப்ரிட் எஸ்யுவி & எம்பிவி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இன்ஜின் மற்றும் மின்சார எடிஷன்களுக்கு, பிரதான மாற்றாக ஹைப்ரிட் கார்கள் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன. மிகவும் முக்கிய கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுசூகி, ஹுண்டாய், டாடா, மஹிந்திரா, கியா, ரெனால்ட் மற்றும் நிசான் ஆகியவை, தேவையை கருத்தில் கொண்டு, ஜைப்ரிட் சந்தைக்கான தங்களது புதிய மாடல்களை தயார்படுத்தி வருகின்றன. எதிர்காலத்தில் பயனர்களுக்கு எஸ்யுவிக்கள் தொடங்கி 7 சீட்டர் வரையில் ஹைப்ரிட்டில் பல ஆப்ஷன்கள் கிடைக்கக் கூடும். இந்நிலையில், வரும் 2028ம் ஆண்டுக்குள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி மற்றும் எம்பிவி கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய ஹைப்ரிட் எஸ்யுவி & எம்பிவி - வெளியீடு எப்போது?
| 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி/ எம்பிவி | எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி |
| மாருதி மினி எம்பிவி | 2026 |
| ரெனால்ட் போரியல் | 2026- 2027 |
| நிசான் 7 சீட்டர் எஸ்யுவி | 2027 |
| ஹுண்டாய் Ni1i | 2027 |
| கியா MQ4i | 2027 |
1. மாருதி மினி எம்பிவி
மாருதி சுசூகி நிறுவனம் சப்-4 மீட்டர் எம்பிவி கார் மாடலை 2026ம் ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த காரானது ஜப்பானில் விற்பனையில் உள்ள ஸ்பேசியா மாடலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. அதன்படி, நேரான மற்றும் பாக்ஸி வடிவமைப்பை பெற உள்ளது. அதேநேரம், ஜப்பான் எடிஷனில் உள்ள ஸ்லைடிங் டோர் மற்றும் ADAS போன்ற சில ப்ரீமியம் அம்சங்கள் இந்திய எடிஷனில் இருக்காது என கூறப்படுகிறது. இதில் இடம்பெற உள்ள இன்ஜின் அம்சங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. அதேநேரம், 82bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் சுசூகியின் முற்றிலும் புதிய ஹைப்ரிட் பவர்ட்ரெயின் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. ரெனால்ட் போரியல்
சர்வதேச சந்தையில் ரெனால்டின் 7 சீட்டர் டஸ்டர் கார் மாடலானது, போரியல் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரானது இந்திய சந்தைக்கு 2026ம் ஆண்டின் இறுதி அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் கொண்டு வரப்படலாம். இந்த காரின் பிளாட்ஃபார்ம், பவர்ட்ரெயின்ஸ், வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஆகியவை 5 சீட்டர் டஸ்டரிடமிருந்து அப்படியே பின்பற்றப்படுகின்றன. சர்வதேச சந்தைக்கான போரியல் மாடலானது 108bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 51bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார், ஸ்டார்டர் ஜெனரேட்டர் மற்றும் 1.4KWh பேட்டரி பேக் உட்ன இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜினின் ஒட்டுமொத்த ஆற்றல் வெளிப்பாடு 155bhp ஆக உயரும்.
3. நிசான் 7 சீட்டர் எஸ்யுவி
நிசானின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி ஆனது தனக்கான பிளாட்ஃபார்ம், அம்சங்கள் மற்றும் பவர்ட்ரெயினை ரெனால்டின் போரியல் கார் மாடலில் இருந்து கடன் வாங்குகிறது. இருப்பினும் வடிவமைப்பு அடிப்படையில் இது முற்றிலும் மாறுபட்டதாக காட்சியளிக்க உள்ளது. இந்த புதிய 3 வரிசை இருக்கை எஸ்யுவி ஆனது, தனக்கான சில ஸ்டைலிங் அம்சங்களை மேக்னைட் காரிலிருந்து பெற உள்ளது. இதில் 115bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய பெட்ரோல் - ஹைப்ரிட் உடன் நேட்சுரலி ஆஸ்பிரேடட் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம்.
4. ஹுண்டாய் Ni1i
ஹுண்டாய் நிறுவனம் Ni1i என்ற கோட் நேமில், இந்திய சந்தைக்கு புதிய 3 வரிசை இருக்கை எஸ்யுவியை தயார்படுத்தி வருகிறது. இந்த புதிய 7 சீட்டர் கார் மாடலின் உற்பத்தி வரும் 2027ம் ஆண்டு டேல்கான் ஆலையில் வைத்து தொடங்க உள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டக்சன் காரை காட்டிலும் நீளமானதாக உருவாகும் இந்த காரில், ஹுண்டாயின் 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினின் ஹைப்ரிட் எடிஷன் இடம்பெறலாம்.
5. கியா MQ4i
உள்நாட்டு சந்தையில் கியா MQ4i என்ற கோட்நேமில் உருவாக்கி வரும், புதிய ப்ரீமியம் 7 சீட்டர் எஸ்யுவியை கியா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காரானது நிறுவனம் தரப்பில் சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள,சொரெண்டோவை அடிப்படையாக கொண்டதாக இருக்கக் கூடும். ADAS மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் கொண்டு கார்களை உருவாக்குவதற்கு ஏதுவான, இலகுவான எடைகொண்ட N3 பிளாட்ஃபார்ம் இதில் பயன்படுத்தப்படுகிறது. ஹுண்டாயின் Ni1i காரை போன்றே கியாவின் 7 சீட்டர் எஸ்யுவியிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் - ஹைப்ரிட் பவர்ட்ரெயின் ஆப்ஷன் வழங்கப்படலாம்.




















