Maruti 7 Seater MPV: ரூ.7 லட்சத்துக்கே புதிய 7 சீட்டரை கொண்டு வரும் மாருதி - எப்போது அறிமுகம்? ஹைப்ரிட் ஆப்ஷனுமா?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் புதிய 7 சீட்டர் காரை அறிமுகப்படுத்த மாருதி சுசூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Maruti New 7 Seater MPV: மாருதி சுசூகி கொண்டு வரப்போகும் புதிய 7 சீட்டர் எஸ்யுவி வெகுஜன பயனாளர்களை கவரும் விதமாக, ரூ.6 முதல் 7 லட்சம் பட்ஜெட்டில் சந்தைப்படுத்தப்படலாம்.
சந்தையை விரிவுப்படுத்த மாருதி தீவிரம்:
இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் வாகன உற்பத்தியாளராக மாருதி சுசூகி நிறுவனம் திகழ்கிறது. கடந்த 2020ம் நிதியாண்டில் 50 சதவிகிதமாக இருந்த சந்தை பங்களிப்பு தற்போது 41 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து போட்டித்தன்மை அதிகரித்து இருப்பதே ஆகும். எனவே தனது சந்தை பங்களிப்பை மீண்டும் விரிவுபடுத்தும் நோக்கில் எஸ்யுவி, மின்சார வாகனம், ஹைப்ரிட்கள், ஃபேஸ்லிஃப்ட் மற்றும் முற்றிலும் புதிய மாடல்கள் ஆகியவற்றை அடுத்தடுத்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுபோக சொந்தமாக புதிய வலுவான ஹைப்ரிட் அமைப்பையும் தயார்படுத்தி வருகிறது. இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வரவுள்ள, ஃப்ராங்க்ஸ் கார் மாடல் மூலம் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மாருதியின் புதிய 7 சீட்டர் எம்பிவி:
மாருதி சார்பில் அடுத்து சந்தைக்கு வரவுள்ள கார்களின் பட்டியலில் பல என்ட்ரி லெவல், சப்காம்பாக்ட் எம்பிவி உள்ளிட்ட மலிவு விலை மாடல்கள் ஆகும். YDB என்ற கோட்நேமை கொண்ட புதிய 7 சீட்டர் எம்பிவி ஆனது, ஜப்பானில் பிரபலமாக உள்ள சுசூகியின் ஸ்பேசியா காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. அந்த காரானது, 3,395 மில்லி மீட்டர் நீளம் மற்றும் இரண்டு வரிசை இருக்கை அமைப்பை கொண்டது. ஆனால், இந்தியாவிற்கான எடிஷனானது கூடுதல் நீளம் மற்றும் மூன்று வரிசை இருக்கை அமைப்பை பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய 7 சீட்டர் - எப்படி மாறுபட்டு இருக்கும்?
ஜப்பானில் ஸ்பேசியா கார் மாடலானது ஸ்லைடிங் டோர் மற்றும் ADAS ஆகிய தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால், இந்திய சந்தைக்கான மாருதியின் எம்பிவி ஆனது ஃபிட்மெண்டுகளில் மாறுபடும். அதேநேரம், பாக்ஸி அடிப்படையிலான வடிவமைப்பு மற்றும் நிமிர்ந்த நிலைப்பாட்டை ஸ்பேசியாவிலிருந்து அப்படியே தொடர உள்ளது. மேலும், க்ரோம் எம்ப்லிஷ்மெண்ட்களுடன் கூடிய பிளாக்ட்-அவுட் கிரில், முன்புற பம்பர் மற்றும் ரெக்டேங்குலர் ஹெட்லேம்புகளுடன் இணைக்கப்பட்ட அகலமான ஏர் டேம் ஆகிய அம்சங்களும் அப்படியே தொடரும்.
புதிய 7 சீட்டர் - இன்ஜின் ஆப்ஷன்:
புதிய 7 சீட்டரில் இடம்பெறக்கூடிய இன்ஜின் ஆப்ஷன்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் இல்லை. இருப்பினும் இதில் ஸ்விஃப்ட் கார் மாடலில் உள்ள 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் 82bhp மற்றும் 108Nm ஆற்றலை உற்பத்த் செய்ய முடியும். இது 5 ஸ்பீட் மேனுவல் அல்லது CVT ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். காருக்கு கிடைக்கு வரவேற்பை பொறுத்து எதிர்காலத்தில் இந்த புதிய 7 சீட்டரிலும் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம். அதேநேரம், ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஸ்பேசியா கார் மாடலில் 660cc இன்ஜின் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய 7 சீட்டர் - மலிவு விலை
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி ஆனது, அதன் போர்ட்ஃபோலியோவில் எர்டிகாவிற்கு கீழே நிலைநிறுத்தப்பட உள்ளது. உள்நாட்டு சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் மற்றும் நிசானின் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சப்-காம்பேக்ட் எம்பிவி உடன் போட்டியிட உள்ளது. இந்த காரின் தொடக்க விலையானது மாருதி சுசூகியின் மிகவும் மலிவு விலை எம்பிவி ஆக, 6 முதல் 7 லட்ச ரூபாய் என்ற விலை நிர்ணயத்தை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முடிவுக்குள் இந்த புதிய 7 சீட்டர், இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பேசியா எப்படி பிரபலம்?
ஸ்பேசியா கார் மாடலானது லேசான எடை, உட்புறத்தில் விசாலமான இடவசதி மற்றும் எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றிற்கான மிகவும் பிரபலமானதாகும். பொருட்களை வைப்பதற்கும் தேவையான இடவசதியை கொண்டுள்ளது. அந்நாட்டிலில் லிட்டருக்கு 29 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பலதரப்பட்ட பயன்பாடுகள், நல்ல மைலேஜ், மலிவு விலையில் சொந்த காரை வாங்க விரும்புவோருக்கு, ஸ்பேசியா சிறந்த தேர்வாக விளங்குகிறது.





















