Automobile Top 10 Brands: மீண்டும் மீண்டுமா.. பயங்கர அடி வாங்கிய டாடா, கல்லா கட்டும் மஹிந்திரா, ஸ்கோடா காட்டில் மழை
Automobile H1 Top 10 Brands: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டின் முதல் பாதியில் விற்பனையில் அசத்திய, நிறுவனங்களில் மாருதி சுசூகி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

Automobile H1 Top 10 Brands: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டின் முதல் பாதியில் விற்பனையில் அசத்திய, நிறுவனங்களில் டாடா நிறுவனம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஆட்டோமொபைல் விற்பனை அசத்தல்:
நடப்பாண்டின் முதல் பாதியில், இந்திய பயணிகள் வாகன சந்தையில் விற்பனை சற்றே உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி தொடங்கி ஜுன் வரையிலான 6 மாத காலகட்டத்தில், ஒட்டுமொத்தமாக 21.89 லட்சம் வாகனங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், வாகன விற்பனை 1.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், இது அனைத்து நிறுவனங்களுக்கும் சாதகமாக அமையவில்லை என்பதே உண்மை. சில நிறுவனங்கள் ஒட்டுமொத்த விற்பனையில் முன்னேற்றம் கண்டு இருந்தாலும், சில நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.
மாஸ் காட்டும் மஹிந்திரா:
மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டின் முதல் பாதியில் பெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் கூடுதலாக 50 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்து, ஒட்டுமொத்தமாக 3.01 லட்சம் வாகனங்களை விநியோகம் செய்துள்ளது. 20 சதவிகித வளர்ச்சி மூலம் ஹுண்டாய் மற்றும் டாடாவை பின்னுக்கு தள்ளி, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன உற்பத்தியாளராக மஹிந்திரா உருவெடுத்துள்ளது. உள்நாட்டில் அண்மையில் அறிமுகப்படுத்திய ஸ்கார்ப்பியோ என், தார் ராக்ஸ் மற்றும் XUV 3X0 ஆகிய கார் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையை ஊக்குவித்துள்ளன.
ஆதிக்கம் செலுத்தும் மாருதி சுசூகி:
நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகன உற்பத்தியாளர்கள் பட்டியலில், மாருதி நிறுவனம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக அதன் செயல்திறனை பார்த்தால், சற்றே வீழ்ச்சி கண்டுள்ளது என்பதே உண்மை. முதல் ஆறு மாதங்களில் 8 லட்சத்து 78 ஆயிரம் வாகனங்களை விநியோகித்து இருக்க, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான விநியோகத்தை காட்டிலும் 2 சதவிகிதம் குறைந்து விநியோகத்தில் 20 ஆயிரம் யூனிட்கள் சரிந்துள்ளது. நிறுவனத்தின் ஹேட்ச்பேக் மற்றும் எண்ட்ரி லெவல் செக்மெண்ட்களில் தொடரும் சிக்கலையே இந்த சரிவு காட்டுவதாக கூறப்படுகிறது.
ஆட்டோமொபைல் விற்பனை விவரம் - 2025 H1
| பிராண்ட் | 2025 முதல் பாதி விற்பனை | 2024 முதல் பாதி விற்பனை | வளர்ச்சி % |
| மாருதி சுசூகி | 8,78,705 | 8,98,905 | -2 |
| மஹிந்திரா | 3,01,194 | 2,50,348 | 20 |
| ஹுண்டாய் | 2,85,809 | 3,09,772 | -8 |
| டாடா | 2,69968 | 2,93,122 | -8 |
| டொயோட்டா | 1,61,531 | 1,40,027 | 15 |
| கியா | 1,42,139 | 1,26,137 | 13 |
| ஸ்கோடா | 36,194 | 15,462 | 134 |
| ஹோண்டா | 32,096 | 36,871 | -13 |
| MG | 31,602 | 26,903 | 17 |
| ஃபோல்க்ஸ்வாகன் | 18,780 | 19,397 | -3 |
| ரெனால்ட் | 16,031 | 23,100 | -31 |
| நிசான் | 11,723 | 15,041 | -22 |
| சிட்ரோயன் | 2,427 | 3,335 | -27 |
| ஜீப் | 1,534 | 2,185 | -30 |
| மொத்தம் | 21,89,733 | 21,60,605 | 1.3 |
சரிவில் ஹுண்டாய், டாடா
ஹுண்டாய் மற்றும் டாடா மோட்டர்ஸ் நிறுவனங்களும் ஒட்டுமொத்த விற்பனையில் 8 சதவிகித சரிவை சந்தித்துள்ளன. முறையே இந்த நிறுவனங்களின் விற்பனையில் 24 ஆயிரம் மற்றும் 23 ஆயிரம் யூனிட்கள் சரிந்துள்ளன. பஞ்ச் மற்றும் நெக்ஸான் ஆகிய மாடல்கள் டாடாவிற்கு நல்ல விற்பனையை கொடுத்தாலும், மற்ற மாடல்களின் சரிவை ஈடுகட்ட முடியவில்லை. அதேநேரம், டொயோட்டா மற்றும் கியா நிறுவனங்கள் ஆரோக்கியமான வளர்ச்சியுடன் நடப்பாண்டின் முதல் பாதியை முடித்துள்ளன.
எகிறிய ஸ்கோடா
ஜப்பானை சேர்ந்த டொயோட்டாவின் விற்பனை 21 ஆயிரத்து 500 யூனிட்கள் வரை உயர்ந்துள்ளது. அதேநேரம், கொரியாவைச் சேர்ந்த கியா நிறுவனத்தின் விற்பனை 13 சதவிகிதம் அதிகரித்து ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 42 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பட்டியலில் உள்ள அனைத்து நிறுவனங்களுடனும் ஒப்ப்டுகையில், ஸ்கோடா நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் 134 சதவிகிதம் அளவிற்கு கூடுதல் விற்பனையை பெற்றுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் 15 ஆயிரத்திலிருந்து 36 யூனிட்களாக அதன் விற்பனை அதிகரித்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கைலாக் உள்ளிட்ட கார் மாடல்கள் இதில் முக்கிய பங்காற்றியுள்ளன.
முன்னேற்றத்தில் எம்ஜி, சரிவில் ஹோண்டா:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போதும் வெறும் 5 சதவிகிதத்தை மட்டுமே பிடித்து இருந்தாலும், 17 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்து 31 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், ரெனால்ட் நிறுவனம் 31 சதவிகித வீழ்ச்சியை கண்டுள்ளது. அதாவது விற்பனை எண்ணிக்கையில் 7 ஆயிரம் யூனிட்கள் வீழ்ச்சி கண்டுள்ளது. இதேபோன்று நிசான் மற்றும் சிட்ரோயன் நிறுவன கார்களின் விற்பனையும் சரிவை சந்தித்துள்ளன. ஹோண்டா நிறுவனம் 13 சதவிகிதம் சரிவை கண்டு 32 ஆயிரம் யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஃபோல்க்ஸ்வாகன் நிறுவனம் 3 சதவிகித சரிவை பெற்று, 19 ஆயிரத்திற்கும் குறைவான யூனிட்களையே விநியோகித்துள்ளது.





















