TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
TATA Sierra SUV Booking: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி காரான டாடா சியாரா, ஒரே நாளில் 70 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று, போட்டியாளர்களான மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களை கதறவிட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவியான டாடா சியராவை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது . இதைத் தொடர்ந்து, நிறுவனம் இந்த வாகனத்திற்கான முன்பதிவுகளை நேற்று தொடங்கியது. இந்நிலையில், ஒரே நாளில் 70,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை சியாரா பெற்றுள்ளது. மேலும், லட்சத்திற்கும் மேற்பட்டோர் புக்கிங்கிற்கான நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்பதிவில் அசத்திய டாடா சியாரா
டாடா சியரா எஸ்யூவி சில காலமாக அதிகம் பேசப்படும் புதிய கார்களில் ஒன்றாகும். இந்த காருக்கான புக்கிங் நேற்று தொடங்கிய நிலையில், டாடா நிறுவனம் முதல் நாள் விற்பனை குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. அதில், "முன்பதிவுகள் தொடங்கிய முதல் நாளிலேயே, சியாரா பிரியர்களின் உற்சாகத்திற்கும் நம்பிக்கைக்கும் ஒரு புதிய பென்ச்மார்க் நிர்ணயித்துள்ளது. 70,000-க்கும் அதிகமான முன்பதிவுகள் மற்றும் 1.35 லட்சம் கூடுதல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு நடைமுறையில் பல்வேறு கட்டத்தில் உள்ளனர்" என்று டாடா நிறுவனம் கூறியுள்ளது.
டாடா சியாராவை எவ்வாறு புக்கிங் செய்வது.?
டாடா சியாரா காரை, அங்கீகரிக்கப்பட்ட டாடா டீலர்ஷிப்புகளிலோ அல்லது டாடா நிறுவனத்தின் இணையதளம் வழியாகவோ, வெறும் 21,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யலாம். இந்த தொகை இறுதி விற்பனைத் தொகையுடன் சரிசெய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் தரப்பில் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
டாடா சியாராவின் விலை என்ன.?
இந்தப் புதிய டாடா சியாரா எஸ்யூவி, 11.49 லட்சம் ரூபாய் முதல் 21.29 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட் பிளஸ், ப்யூர், ப்யூர் பிளஸ், அட்வென்சர், அட்வென்சர் பிளஸ், அக்காம்ப்ளிஷ்டு மற்றும் அக்காம்ப்ளிஷ்டு பிளஸ் என 7 வேரியன்ட்களில் இந்த புதிய எஸ்யூவி மாடலை வெளியிட்டுள்ளது டாடா நிறுவனம்.
புதிய எஞ்சினுடன் வரும் டாடா சியாரா
இந்த சியரா எஸ்யூவியின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, இதன் முற்றிலும் புதிய பெட்ரோல் என்ஜின்கள் தான். சியாராவில் பயன்படுத்துவதற்காகவே, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை புதிதாக உருவாக்கியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
எனினும், இந்த டர்போ பெட்ரோல் என்ஜின், டாப் வேரியன்ட்களில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜினை அடிப்படையாகக் கொண்ட 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜினை சியராவின் தொடக்கநிலை வேரியன்ட்களில் கொடுத்திருக்கிறது நிறுவனம். இந்த எஞ்சின்கள், மிகவும் மேம்பட்ட திறன் கொண்டவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
டாடா சியரா, அதன் பிரிவில் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் புதிய மாருதி சுசுகி விக்டோரிஸ் உள்ளிட்ட பல புதிய கார்களுடன் போட்டியிடுகிறது. இந்நிலையில், முதல் நாளிலேயே 70,000 முன்பதிவுகளை பெற்று, போட்டி நிறுவனங்களை கதறவிட்டுள்ளது சியாரா. அடுத்தடுத்த நாட்களில் எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.





















