Tata Sierra: கன்ஃபார்ம் ஆயிருச்சே..! ப்ரீமியம் அம்சங்களை அள்ளிப் போட்டு வரும் சியாரா - டாடாவின் மரண செய்கை
Tata Sierra: டாடாவின் முற்றிலும் புதிய சியாரா கார் மாடலின் கேபின் அம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி, அந்த காரின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Tata Sierra: டாடாவின் சியாரா கார் சாலை சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், அதன் ப்ரீமியம் அம்சங்கள் தொடர்பான விவரங்களை அறிய உதவியுள்ளது.
டாடா சியாரா கார்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நம்பகத்தன்மைக்கு பெயர் போன டாடா ப்ராண்டில் இருந்து, முற்றிலும் புதிய காராக சியாரா மாடல் உருவாகியுள்ளது. இதுதொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் ஏற்கனவே வெளியாகி, அதன் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. அந்த வகையில் புனேவில் சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான், சியாராவின் கேபின் தொடர்பான முழு விவரங்களை அறியச் செய்துள்ளது. அதன்படி, பெரிதும் பேசப்பட்ட 3 ஸ்க்ரீன் செட்-அப் உள்ளிட்ட பலதரப்பட்ட ப்ரீமியம் அம்சங்கள் சியாராவில் இடம்பெற்றுள்ளது.
டாடா சியாரா - 3 ஸ்க்ரீன் செட்-அப்:
மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக டாடா சியாரா காரின் டேஷ்போர்டில், மூன்று கனெக்டட் ஸ்க்ரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. ப்ராண்டின் வாகனங்களில் இந்த அம்சம் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். இந்த செட்-அப்பில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், நடுவில் டச்-ஸ்க்ரீன் ஆனது இன்ஃபோடெயின்மெண்டிற்காகவும், மூன்றாவதாக இருப்பது முன் இருக்கை வரிசையில் உள்ள சக பயணிக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பானது சியாராவின் கேபினிற்கு உயர்தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாகவும், மஹிந்த்ராவின் XEV 9e போன்ற சொகுசு எஸ்யுவி ஆகவும் உணர செய்கிறது. இந்த ஸ்க்ரீன்கள் பார்வைக்கு பெரியதாகவும், ஒரே டிஸ்பிளேவில் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
டாடா சியாரா - மற்ற அம்சங்கள் என்ன?
புகைப்படங்களின் படி கூடுதலாக, வெப்பநிலை அமைப்பிற்கான பிஷிகல் அப்/டவுன் கட்டுப்பாட்டுடன் கூடிய டச்-அடிப்படையிலான HVAC கட்டுப்பாடுகள், ஒளிரும் டாடா லோகோவுடன் கூடிய ஃப்ளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் ஆகியவை இடம்பெற்றுள்ளது. சாஃப்ட் டச் மெடீரியல்ஸ், மெடாலிக் இன்செர்ட்ஸ் ஆகியவற்றின் கலவையுடன் சுத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ள கியர் லிவர் பகுதி, காரின் ப்ரீமியம் தோற்றத்தை மேலும் கூட்டுகிறது.
டாடா சியாரா - வெளிப்புற அம்சங்கள்
சியாரா கார் மாடலின் வெளிப்புறம் முற்றிலுமாக மறைக்கப்பட்டு இருந்தாலும், அது உற்பத்திக்கு தயாரான எடிஷனை போலவே காட்சியளிக்கிறது. புதிய பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள், ஸ்ப்லிட் முகப்பு விளக்குகள், கனெக்டட் எல்இடி டெயில் லைட்ஸ், கம்பீரமான தோற்றம் ஆகியவை டாடாவின் புதிய எஸ்யுவி வடிவமைப்பு மொழியை உறுதி செய்கின்றன. மறைக்கப்பட்டு இருந்தாலும் வெளிப்புறத் தோற்றம் பாக்ஸி ஆகவும் கட்டுமஸ்தானாகவும் காட்சியளிக்கிறது. இதன் மூலம் மாடர்ன் அம்சங்களை கொண்டிருந்தாலும், இந்த சியாராவானது தனது கிளாசிக் லுக்கையும் தொடர்வதை உணர முடிகிறது. இந்த, மாதிரி காரானது உற்பத்தி நிலைக்கு தயாரான அலாய் வீல்களை பயன்படுத்தியுள்ளது. அதன் பாடி பேனல்கள் மற்றும் லைட்டிங் அமைப்புகள் ஆகியவை மதிப்பிடுவதற்கான கடைசி கட்டத்தில் உள்ளன.
டாடா சியாரா - இன்ஜின் விவரங்கள்
சியாரா காரானது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பெட்ரோல் வேரியண்டானது டாடாவின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தக் கூடும்.அதேநேரம் டீசல் எடிஷனானது சஃபாரி மற்றும் ஹாரியரில் பயன்படுத்தப்படும், 2.0 லிட்டர் க்ரையோடெக் இன்ஜினை கடன் வாங்கலாம். இவை முறையே 170 PS & 280 Nm மற்றும் 170 PS & 350 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.
மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறுவதோடு, உயர் ரக வேரியண்ட்களில் ஆல் வீல் ட்ரைவ் அம்சமும் வழங்கப்படலாம். கூடுதலாக முற்றிலுமாக மின்சார எடிஷன் சியாராவும் தயாராகி வருகிறது. அது ஹாரியர் மின்சார எடிஷனை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டாடா சியாரா - விலை, வெளியீடு எப்போது?
அடிக்கடி சியாரா காரின் சாலை சோதனைகளை காண்பதன் மூலம், இந்த காரை சந்தைப்படுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் டாடா இருப்பதை உணர முடிகிறது. அதன்படி, நவம்பர் மாதம் இந்த கார் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. அப்படி வந்தால் உள்நாட்டு சந்தையில் ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிட வேண்டியிருக்கும். அதேநேரம், பழைய டிசைனின் தாக்கம், மேம்படுத்தப்பட்ட உட்புறம் மற்றும் பலதரப்பட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் மூலம் சியாரா தனித்துவமாக தெரியும் என கூறப்படுகிறது. இந்த காரின் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.





















