Tata Nexon Rival: பட்டையை கிளப்பும் நெக்ஸான் - முடிவு கட்ட துடிக்கும் 4 புதிய SUV-க்கள் - X தொடங்கி Tera வரை
Tata Nexon Rival: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள டாடாவின் நெக்ஸானுக்கு போட்டியாக, அடுத்தடுத்து 4 புதிய எஸ்யுவிக்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன.

Tata Nexon Rival: டாடாவின் நெக்ஸானுக்கு போட்டியாக அறிமுகமாக உள்ள 4 புதிய எஸ்யுவிக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பட்டையை கிளப்பும் டாடா நெக்ஸான்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நீண்ட காலமாக ஆதிக்கும் செலுத்தும் கார் மாடல்களை பட்டியலிட்டால், அதில் டாடாவின் நெக்ஸானுக்கு தவிர்க்க முடியாத இடம் உள்ளது. அதன் ஸ்டைல், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றால், மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் நெக்ஸான் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் நெக்ஸான் காரின் 22 ஆயிரத்து 500 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், இதுவரை எந்தவொரு கார் மாடலும் ஒரு மாதத்தில் இந்த அளவிற்கு விற்பனையை பதிவு செய்ததில்லை. இந்நிலையில் தான், அதனுடன் நேரடியாக மோதும் விதமாக முன்னணி நிறுவனங்கள் புதிய கார் மாடல்களை சந்தைப்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில் அறிமுகமாக உள்ள 4 கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
நெக்ஸானுக்கு போட்டியாக புதிய எஸ்யுவிக்கள்:
1. ஹுண்டாய் வென்யு ஃபேஸ்லிஃப்ட்
இந்த பட்டியலில் முதலாவதாக இடம்பெற்றுள்ள வென்யு காரின், மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் வரும் நவம்பர் 4ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்த காரானது காலம் கடந்ததாக இருந்தாலும், அதன் பிரபலம் இன்றும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதன் விற்பனையை ஊக்கப்படுத்தும் விதமாக எஸ்யுவிக்கு புதிய டிசைன், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வென்யு மீதான மதிப்பு மீண்டும் அதிகரிக்கும் என ஹுண்டாய் நம்புகிறது.
க்ரேட்டாவின் தாக்கத்திலிருந்து வென்யுவிற்கான புதிய டிசைன் பின்பற்றப்பட்டுள்ளது. இதில் புதியதாக டூயல் கனெக்டட் கர்வ்ட் ஸ்க்ரீன்கள், 360 டிகிரி கேமரா, டூயல் ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், வெண்டிலேடட் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்கள் இடம்பெற உள்ளன. இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
2. மஹிந்த்ரா விஷியன் எக்ஸ்
மஹிந்த்ரா விஷியன் எக்ஸ் கார் மாடலானது நெக்ஸானுக்கு கடுமையான போட்டியாளராக உருவெடுக்க உள்ளது. நிறுவனத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அது XUV 3X0-வின் புதிய எடிஷனாக இருக்கும் என நம்பப்படுகிறது. வரும் 2028ம் ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இது மஹிந்த்ரா நிறுவனத்தின் முகவும் மேம்படுத்தப்பட்ட எஸ்யுவி ஆக வர்ணிக்கப்படுகிறது. எதிர்காலத்தன்மையை கொண்ட வடிவமைப்பை பெற்றுள்ளது. அம்சங்கள் அடிப்படையில், கர்வ்ட் டூயல் ஸ்க்ரீன் செட்-அப், 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல், பெரிய செண்டர் கன்சோல், ட்ரிபிள் டோன் டேஷ்போர்ட் மற்றும் ஸ்போர்ட்டியான இருக்கைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த அம்சங்களானது காருக்கு மாடர்ன் மட்டுமின்றி ப்ரீமியம் உணர்வையும் தருகிறது.
3. மாருதி ப்ரேஸ்ஸா ஹைப்ரிட்
மாருதியின் ப்ரேஸ்ஸா ஏற்கனவே நெக்ஸானுக்கு வலுவாக போட்டியளித்து வரும் நிலையில், அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. அதன்படி, விரைவில் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனுடன் ப்ரேஸ்ஸா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் காரின் மைலேஜ் அதிகரிப்பதோடு மட்டுமின்றி, புதிய வரி சலுகைகளால் விலையும் எளிதில் அணுகக் கூடியதாக இருக்கும்.
வடிவமைப்பு மற்றும் அம்சங்களில் பெரிய மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் இணைப்பு காரை மேலும் பிரபலமாக்கும் என நம்பப்படுகிறது. 2026ம் ஆண்டின் இறுதியில் இந்த கார் சந்தைப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், அது நெக்ஸானுக்கு மிகப்பெரிய போட்டியாளராக மாறக்கூடும்.
4. ஃபோக்ஸ்வாகன் டெரா
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் எஸ்யுவி ஆக அறிமுகமாக, டெரா மாடல் தயாராகி வருகிறது. ஸ்கோடா கைலாக்கின் பெரும் வெற்றியை தொடர்ந்து, ஃபோக்ஸ்வாகன் தனது முழு கவனத்தையும் டெரா மீது செலுத்தியுள்ளது. சர்வதேச சந்தைகளில் இந்த கார் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியாவிற்கு தேதி தற்போது வரை ரகசியமாகவே உள்ளது. அம்சங்களை பற்றி பேசினால், 10 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, ADAS, ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய ப்ரீமியம் அம்சங்களை டெரா கார் மாடல் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
விலை விவரங்கள்:
நாட்டிலேயே அதிக வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் கார் என்ற பெருமையை நெக்ஸான் தான் கொண்டுள்ளது. சென்னையில் அதன் ஆன் ரோட் விலை ரூ.8.75 லட்சத்தில் தொடங்கி, ரூ.17.48 லட்சம் வரை நீள்கிறது. இதற்கு ஏற்றார்போலவே, மேற்குறிப்பிடப்பட்ட நான்கு புதிய மாடல்களின் விலையும், மிகவும் போட்டித்தன்மை மிக்கதாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















