Royal Enfield Himalayan 450: ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450 மாடல் மோட்டார்சைக்கிள்.. கசிந்த மொத்த தகவல்கள் இதோ..!
இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450 மோட்டார் சைக்கிளின் பல்வேறு விவரங்கள் சோதனை ஓட்டத்தின் மூலம் கசிந்துள்ளன.
இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450 மோட்டார் சைக்கிளின் பல்வேறு விவரங்கள் சோதனை ஓட்டத்தின் மூலம் கசிந்துள்ளன.
ராயல் என்ஃபீல்ட்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீட்ல் நிறுவனம் தனக்கான இடத்தை வலுவாக உறுதி செய்துள்ளது. அதை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் சீரான இடைவெளியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மிடில்வெயிட் செக்மெண்டில் தொடர்ந்து கோலோச்சி வருகிறது. அந்த வரிசையில் ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 மற்றும் ஹிமாலயன் 450 ஆகிய மோட்டார்சக்கிள்கள் அடுத்தடுத்து இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளன. இந்நிலையில், சோதனை ஓட்டத்தின் போது சிக்கிய ஹிமாலயன் 450 மாடல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிமாலயன் 450 வடிவமைப்பு:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 450 மாடல் வாகனம், தற்போதுள்ள 411cc ஹிமாலயன் மாடலிலிருந்து மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. தற்போதுள்ள இந்த அட்வென்ச்சர் பைக் மாடல் உள்ளூர் சந்தைகளில் விற்பனையில் அசத்தினாலும், சர்வதேச சந்தையில் எதிர்பார்த்த விற்பனையை எட்ட முடியவில்லை. புதிய வாகனம் அதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் நம்புகிறது. டியூல் ஏபிஎஸ் அம்சத்துடன், இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள மாடலை போன்று புதிய பைக்கிலும் கிரவுண்ட் கிளியரன்சாக 220 மீட்டராக உள்ளது.
புதிய அம்சங்கள்:
ஹிமாலயன் 450 மாடலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிலான பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக வட்டமான எல்.ஈ.டி., முகப்பு விளக்குகள் மற்றும் USD ப்ரண்ட் போர்க்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு, இதில் இடம்பெற்று இருப்பது லிக்விட் கூலிங் இன்ஜின் ஆகும். ரியர்-வியூ மிரர்கள், ஒரு பெரிய விண்ட்ஸ்கிரீன், உயர்த்தப்பட்ட ஃப்ரண்ட் பிரேக், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ரேக்குகள், வயர் ஸ்போக் வீல்கள், ஸ்பிளிட்-சீட்கள் மற்றும் அப்ஸ்வெப்ட் எக்ஸாஸ்ட் கேனிஸ்டர் ஆகியவை அடங்கும். தற்போது உள்ள 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கை காட்டிலும், புதிய மாடல் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் விவரம்:
தற்போதுள்ள ஹிமாலயன் மாடலில் 24.3 bhp மற்றும் 32 Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. ஆனால், புதிய ஹிமாலயன் மாடலில் வழங்கப்பட்டுள்ள இன்ஜின் 35 bhp மற்றும் 40 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் இணைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இது ஆன் ரோட் மற்றும் ஆஃப் ரோட் என இரண்டு பயணங்களிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை விவரம் என்ன?
ஹிமாலயன் 450 வாகனத்தின் சிறப்பம்சங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாவிட்டாலும், நவம்பர் 1ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அப்போது வாகனத்தின் விலை விவரங்கள் அறிவிக்கப்படும். அதேநேரம், இதன் விலை 2.7 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.