Revolt Motors: மீண்டும் தொடங்குகிறது ரெவோல்ட் RV400 இ-பைக்.. கூடுதல் விவரங்கள் உள்ளே..!
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் RV400 எனப்படும் மின்சார பைக்குகளின் முன்பதிவு மீண்டும் தொடங்க உள்ளது.
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் RV400 எனப்படும் மின்சார பைக்குகளின் முன்பதிவு இந்தியாவில் மீண்டும் நாளை முதல் நடைபெற உள்ளது.
ரெவோல்ட் மோட்டார்ஸ்
இந்தியாவில் அதிகரித்துள்ள மின்சார வாகனங்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு, தொடர்ந்து பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதுப்புது மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தான் ரெவோல்ட் மோட்டார்ஸ் எனும் நிறுவனமும் RV400 எனப்படும் மின்சார பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி, அதற்கான முன்பதிவையும் தொடங்கியது. இதனிடையே, ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தை ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனம் அண்மையில் முழுமையாக விலைக்கு வாங்கியது. இந்த விற்பனை நடவடிக்கை காரணமாக, முன்பதிவு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக மீண்டும் RV400 மின்சார பைக்குகளுக்கான முன்பதிவு, நாளை தொடங்க உள்ளது.
முன்பதிவும் தீவிரம்:
முதற்கட்டத்தை போன்று இரண்டாவது கட்டத்திலும் முன்பதிவுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என, ரெவோல்ட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. புதிய ரெவோல்ட் RV400 முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நாட்டில் 22 மாநிலங்களில் 35 டீலர்கள் இருப்பினும், ஆன்லைன் மூலமாகவே ரெவோல்ட் நிறுவனத்தின் முன்பதிவு முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகம் எப்போது?
மார்ச் 31ம் தேதி ரெவோல்ட் நிறுவன பைக் மாடலின் விநியோகம் தொடங்கப்பட உள்ள நிலையில், RV400 மாடல் பைக்கானது ஹரியானா மாநிலத்தின் மனேசார் பகுதியில் உள்ள ரெவோல்ட் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதோடு சப்ளை செயினில் ரத்தன் இந்தியா செய்த முதலீடு காரணமாக, அதன் உற்பத்தி அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.
பேட்டரி விவரங்கள்:
ரெவோல்ட் RV400 மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி, 5 கிலோவாட் பீக் பவர் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 54 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரம் ஆகு. eco, normal மற்றும் sport எனப்படும் பல்வேறு செயல்திறன்களை கொண்ட 3 வகையான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்கள்:
இந்த மின்சார பைக் யுஎஸ்டி ஃபோர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. இத்துடன் முன்புறம் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் CDS வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ரெவோல்ட் RV400 மாடல்- ரெவோல்ட், ரிபெல், ரேஜ் மற்றும் ரோர் என நான்கு வித சத்தங்களை வெளிப்படுத்துகிறது. எல்.ஈ.டி. முகப்பு விளக்குகள், டிஜிட்டல் கன்சோல், கீலெஸ் இக்னிஷன், மாற்றக்கூடிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. தற்போது ரெவோல்ட் RV400 விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.