Tata Sierra: ரூமார்ஸ்லாம் போதும்.. டீசரை இறக்கிய டாடா - சியாராவில் கொட்டிக் கிடக்கும் அப்க்ரேட்ஸ், மைலேஜ்
Tata Sierra: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள சியாரா காரின் டீசரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Tata Sierra: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சியாரா மாடலின் டீசர், காரில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
டாடா சியாரா கார் டீசர்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் டாடா சியாரா கார் மாடல் மீண்டும் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் தான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில், காருக்கான டீசர் ஒன்றை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. குறிப்பாக காரின் டேஷ்போர்ட் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வதந்தியாக வெளியான பல தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
உறுதியானது 3 டச் ஸ்க்ரீன்கள்
சியாராவின் டீசரானது காரின் டேஷ்போர்டை மிகவும் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, சாலை சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்ததைபோன்றே, 3 டச்-ஸ்க்ரீன் அமைப்பு இடம்பெற்றுள்ளது. அதில் இரண்டு இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன்களாக பயன்படுத்தப்பட உள்ளன. அவற்றின் செயல்பாடு உள்ளிட்ட மற்ற அம்சங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இல்லை.
டாடா கர்வ்வில் இருப்பதை போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பயனர் இடைமுகம், இதில் அப்படியே இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. லிட்டருக்கு 17 கிலோ மீட்டர் மற்றும் அரை டேங்கிற்கும் குறைவான எரிபொருள் உடன் இன்னும் 330 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் எனவும் டீசரில் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோவில் இடம்பெற்று இருப்பது டீசல் எடிஷன் என நம்பப்படுகிறது.
சியாராவில் ADAS தொழில்நுட்பம்:
டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளேவை உன்னிப்பாக கவனித்தால், லேன் டிபார்ட்சர் வார்னிங் சிம்பலை காண முடியும். இதன் மூலம் சியாராவின் உற்பத்தி எடிஷனில் பாதுகாப்பை மேம்படுத்தக் கூடிய ADAS தொழில்நுட்பம் இருப்பதும் உறுதியாகியுள்ளது. டிரைவருக்கு முன்னால் டேஷ்போர்டுக்கு மேலே ஒரு நீண்ட பேனல் உள்ளது;.அது ஒரு ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD) ஆக இருக்கலாம், ஆனால் அதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இருப்பினும், அது உண்மையில் HUD என்றால், இந்த அம்சத்தைப் பெற்ற முதல் டாடா காராக சியாரா இருக்கும்.
சியாராவில் கர்வ் டச்
மேலும் இந்த டீசரானது கர்வில் இருப்பதை போன்றே, டச் அடிப்படையிலான ஏசி கன்ட்ரோல் பேனலை புதிய சியாரா கொண்டுள்ளது. அதில் பவர்ட் டெயில்கேட் மற்றும் 360 டிகிரி கேமராவிற்கான பட்டன்கள் இருப்பதை போன்று தோன்றுகிறது. இரண்டு வித்தியாசமான வெப்பநிலை கண்ட்ரோல் ஆப்ஷன் இருப்பதால், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி வழங்கப்படக்கூடும். கர்வ்வில் இருந்த அதே HVAC கன்ட்ரோல் பேனலை அணுக, ஓட்டுனர் சாலையின் மீதான கவனத்தை குறைத்து பட்டன்களை அணுக வேண்டி இருந்தது. அதே அமைப்பு சியாராவிலும் இருந்தால், நிச்சயமாக மேற்குறிப்பிடப்பட்ட குறை பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும் என நம்பப்படுகிறது.
4 ஸ்போக் ஸ்டியரிங்:
டாடாவின் ஒளிரும் லோகோ, தொடுவதன் மூலம் ஒளிரச்செய்யக்கூடிய பட்டன்கள், ஆட்டோ டிம்மிங் இன்டீரியர் ரியர் வியூ மிரர் உடன் கூடிய 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் சியாராவில் வழங்கப்பட்டுள்ளது. டீசர் மூலம் இந்த காரானது க்ரே மற்றும் ப்ளாக் நிறம் கலந்த டூயல் டோன் தீம் கேபின் தீமை பெறுவதை அறிய முடிகிறது. இதே நடைமுறை கர்வ்விலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சியாரா - உறுதிப்படுத்தப்பட்ட மற்ற அம்சங்கள்
முன்னதாக வெளியான மற்றொரு டீசரில் சியாராவில் பனோரமிக் சன்ரூஃப், முன் மற்றும் பின்புற பார்கிங் சென்சார்கள், பின்புற விண்டோக்களுக்கு சன்ப்ளைண்ட்ஸ் ஆகியவை இருந்தது உறுதி செய்யப்பட்டது. கூடுதலாக வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜர், 6 ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக் ஆகிய அம்சங்களும் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சியாரா - பவர்ட்ரெயின்
நவம்பர் 25ம் தேதி அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்பட உள்ள புதிய சியாராவில், வழங்கப்பட உள்ள இன்ஜின் ஆப்ஷன்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தற்போது வரை இல்லை. இருப்பினும், கர்வ் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் இதில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அனைத்து இயந்திரங்களிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம். சியாரா முற்றிலுமான மின்சார எடிஷனாகவும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதிலும் கர்வ் காரின் மின்சார எடிஷனில் இருப்பதை போன்ற 55KWh மற்றும் ஹாரியர் மின்சார எடிஷனில் இருப்பதை போன்ற 65KWh பேட்டரி பேக்கை புதிய காரில் டாடா வழங்கும் என தெரிகிறது.
சியாரா போட்டியாளர்கள்
மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்டில் களமிறங்கும் இன்ஜின் அடிப்படையிலான டாடா சியராவானது, ஹூண்டாய் க்ரேட்டா, மாருதி சுசுகி விக்டோரிஸ் , மாருதி சுசுகி க்ராண்ட் விட்டாரா , டொயோட்டா ஹைரைடர் மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. அதேநேரம் சியராவின் EV எடிஷனானது ஹூண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக், மஹிந்திரா BE 6 , MG ZS EV மற்றும் வரவிருக்கும் மாருதி சுசுகி e விட்டாராவுடன் போட்டியிடும்.





















