Maruti 5 Seater SUV: விட்டா தின்றுவான், கிரேட்டாவை ஒழிச்சே ஆகணும் - மாருதி கையிலெடுத்த புதிய 5 சீட்டர் பிரமாஸ்திரம்
Maruti Escudo SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிரேட்டா கார் மாடலுக்கு போட்டியாக, மாருதியின் எஸ்குடோ 5 சீட்டர் கார் மாடல் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Maruti Escudo SUV: மாருதியின் எஸ்குடோ 5 சீட்டர் கார் மாடலின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மாருதி 5 சீட்டர் எஸ்யுவி Vs கிரேட்டா:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பன்னெடுங்காலமாக, ஒட்டுமொத்த கார் விற்பனையில் மாருதி சுசூகி நிறுவனம் கோலோச்சி வருகிறது. மலிவு விலை, எரிபொருள் செயல்திறன் மற்றும் நடைமுறைக்கு உகந்த வடிவமைப்பு ஆகியவை மாருதியின் விற்பனை மந்திரமாக உள்ளன. இந்த சூழலில் தான், இந்தியாவில் எஸ்யுவி பிரிவு வாகனங்கள் மீதான ஈர்ப்பு பொதுமக்களிடையே எகிறியுள்ளது. இதனை உணர்ந்து மாருதியும் பல எஸ்யுவிக்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால், எஸ்யுவி பிரிவில் எண்ட்ரி லெவல் எனப்படும் காம்பேக்ட் செக்மெண்டில், எதிர்பார்த்ததை போன்று மாருதியால் கோலோச்ச முடியவில்லை. காரணம், ஹுண்டாயின் கிரேட்டா அந்த இடத்தில் அசைக்க முடியாத விற்பனை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் தான் அதற்கு போட்டியாக, புதிய 5 சீட்டர் எஸ்யுவியை மாருதி களமிறக்க உள்ளது.
மாருதி எஸ்குடோ 5 சீட்டர் எஸ்யுவி:
மாருதியின் புதிய 5 சீட்டர் எஸ்யுவி ஆனது தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் தொடர்பாக தற்போது வரை மாருதி பெரிய தகவல்கள் எதையும் வெளியிடாவிட்டாலும், அது எஸ்குடோ என்ற பெயரை பெறும் என ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த காரானது மாருதியின் பிரேஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா கார் மாடல்களுக்கு இடையே நிலைநிறுத்தப்பட உள்ளது. கிராண்ட் விட்டாரா நெக்சா மையங்களில் விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய எஸ்குடோவானது அரேனா டீலர்களால் விற்பனை செய்யப்பட உள்ளது. மாருதியின் புதிய 5 சீட்டர் எஸ்யுவி ஆனது இந்திய சந்தையில் ஹுண்டாய் கிரேட்டா, கியோ செல்டோஸ் உள்ளிட்ட மிட்-சைஸ் எஸ்யுவிக்களுடன் இந்திய சந்தையில் போட்டியிட உள்ளது.
மாருதி எஸ்குடோ: வடிவமைப்பு விவரங்கள்
5 சீட்டர் கார் மாடலாக இருந்தாலும், எஸ்குடோவானது 4,345 மில்லி மீட்டர் நீளம் கொண்ட கிராண்ட் விட்டாரவை காட்டிலும் பெரிதாக இருக்கும் என கூறப்படுகிறது. நீளமான உடலமைப்பானது அதிகப்படியான பூட் ஸ்பேஸை கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறது. வடிவமைப்பு அடிப்படையில் பிரேஸ்ஸாவை காட்டிலும் பெரிதாக இருக்கும். கிராண்ட் விட்டார வடிவமைக்கப்பட்ட குளோபர் - சி பிளாட்ஃபார்மில் தான் புதிய எஸ்குடோவும் உருவாகிறது.
மாருதி எஸ்குடோ: இன்ஜின் விவரங்கள்
மாருதி எஸ்குடோவில் இடம்பெறக்கூடிய இன்ஜின் தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தற்போது வரை வெளியிடவில்லை. இருப்பினு, கிராண்ட் விட்டாராவில் இருக்கக் கூடிய இன்ஜின் புதிய காரில் இணைக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன்படி, 140bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய நேட்சுரல்லி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 116bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் வலுவான ஹைப்ரிட் ஆப்ஷன் வழங்கப்படலாம். சிஎன்ஜி ஆப்ஷனும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் விற்பனையின்போது கிடைக்கலாம். கூடுதலாக, ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம் இந்த காரில் இடம்பெறக்கூடும்.
மாருதி எஸ்குடோ: எதிர்பார்கக்கூடிய அம்சங்கள்?
மாருதி எஸ்குடோவின் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் டிசைனிங்கானது, கிராண்ட் விட்டாராவை பெரும்பாலும் பிரதிபலிக்கும். இருப்பினும், அழகு சார்ந்து சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம். உட்புற லே-அவுட் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களும், கிராண்ட் விட்டாராவிலிருந்து பகிரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட சில பிரீமியம் அம்சங்களை தவறவிடலாம் என கூறப்படுகிறது.
அதேநேரம், பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜர், ஹில் டிஸ்செண்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்கள் புதிய எஸ்குடோவில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி எஸ்குடோ: விலை, பாதுகாப்பு அம்சங்கள்
புதிய கிராண்ட் விட்டாரா NCAP-யின் பாதுகாப்பு பரிசோதனைக்கு தற்போது வரை உட்படுத்தப்படவில்லை. ஆனால், அது உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்ம் மற்றும் இடம்பெற்றுள்ள அம்சம்ங்கள் அடிப்படையில், நிச்சயம் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கிராண்ட் விட்டாராவில் 6 ஏர் பேக்குகள், EBD உடன் கூடிய ABS, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உடன் கூடிய எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், 360 டிகிரி கேமரா,டயர் பிரஷர் மானிட்டரிங், ஹில் டிஸ்செண்ட் கண்ட்ரோல் மற்றும் ISOFIX சைல்ட் சீல்ட் மவுண்ட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அப்படியே, மாருதியின் புத்ய எஸ்குடோவிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை, ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது கிரேட்டாவிற்கு நிகரான, போட்டித்தன்மை மிக்க விலையாக இருக்கும். இதன் மூலம், கிரேட்டாவின் இடத்தை பிடிக்க மாருதி திட்டமிட்டுள்ளது.





















