Kia Syros EV: என்னடா நெக்ஸான், XUV400 - கியா களமிறக்கும் புதிய மின்சார எஸ்யுவி - மிட் செக்மெண்டில் 455 கிமீ ரேஞ்ச்
Kia Syros EV: இந்திய ஆட்டோஒமொபைல் சந்தையில் நெக்ஸான் மற்றும் XUV400 மாடல்களுக்கு போட்டியாக, கியா புதிய மின்சார சிரோஸ் கார் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது.

Kia Syros EV: கியாவின் புதிய சிரோஸ் மின்சார கார் மாடலானது, 455 கிமீ தூரம் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது.
கியாவின் புதிய சிரோஸ் மின்சார வாகனம்:
மின்சார வாகனங்கள் எதிர்காலத்திற்கானது என்ற கருத்து இனி உண்மையாக இருக்காது. காரணம் அவை ஏற்கனவே இந்திய மட்டுமின்றி சர்வதேச சாலைகளையும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன. இதனை உணர்ந்து ஒவ்வோரு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமும்,மின்சார கார் மாடல்களை சந்தைப்படுத்த அதிக தீவிரம் காட்டி வருகின்றன. கியா நிறுவனமும் இந்த போட்டியில் இணைந்து, அடுத்தடுத்து இரண்டு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக, தனது இன்வஸ்டர்ஸ் டே 2025 நிகழ்ச்சியில் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு மின்சார வாகனங்களில் சிரோஸ் மாடல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடாவின் நெக்ஸான் மற்றும் மஹிந்திராவின் XUV400 ஆகிய மின்சார கார் மாடல்களுடன் நேரடியாக போட்டியிட உள்ளது. இந்த கார் மாடலில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம் என்பதையும், எஸ்யுவியை விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்குமா? என்பதையும் இந்த தொகுப்பில் அறியலாம்.
கியா சிரோஸ் EV - பேட்டரி விவரங்கள்:
கியாவின் சிரோஸ் மின்சார வாகனமானது ஹுண்டாயின் இன்ஸ்டர் மின்சார வாகனங்களுக்கான K1 பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, இதுவும் அதேமாதிரியான பேட்டரி ஆப்ஷன்களை கொண்டிருக்கக் கூடும். அதாவது 42 KWh மற்றும் 49 KWh ஆகிய ஆப்ஷன்களில் பேட்டரிகள் வழங்கப்படலாம். இந்த பேட்டரிகளை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 முதல் 455 கிமீ தூரம் வரை இடைநிற்றலின்றி பயணிக்கக் கூடும். மிட்-செக்மெண்ட் மின்சார வாகனத்திற்கு இந்த ரேஞ்ச் என்பது மிகவும் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகும்.
கியா சிரோஸ் EV - வடிவமைப்பு விவரங்கள்:
வடிவமைப்பு அடிப்படையில் இது தற்போது விற்பனையில் உள்ள பெட்ரோல்- டீசல் எடிஷனை போன்றே இருக்கும் என்றும், அதேநேரம் மின்சார எடிஷனிற்கான சில சிறப்பு அம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட அலாய் வீல்கள், டிஜிட்டல் கிராபிக்ஸ் உடன் கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் ட்ரிம் ஆப்ஷனகள் வழங்கப்படலாம். இவற்றை தவிர வடிவமைப்பு ரீதியில் இன்ஜின் எடிஷனில் இருந்து பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதும் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கியா நிறுவனம் சார்பில் இந்தியாவில் கிடைக்க உள்ள மிகச்சிறிய எஸ்யுவியாக சிரோஸ் இருக்கும்.
கியா சிரோஸ் EV - வசதிகள்:
- டூயல் 12.3 இன்ச் டிஸ்பிளேஸ்
- 5 இன்ச் கிளைமேட் கண்ட்ரோல் ஸ்க்ரீன்
- பனோரமிக் சன்ரூஃப்
- ஸ்லைடிங் & வெண்டிலேடட் செகண்ட் ரோ சீட்ஸ்
- 360 டிகிரி கேமரா
- லெவல் 2 ADAS சிஸ்டம்
- 8 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டோன்சவுண்ட் சிஸ்டம்
கியா சிரோஸ் EV - விலை விவரங்கள்:
சிரோஸின் தற்போதைய இன்ஜின் எடிஷனின் விலையானது 9.50 முதல் 17.80 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. மின்சார எடிஷனில் பேட்டரி மற்றும் புதிய தொழில்நுட்ப அம்சங்களை இணைப்பதன் மூலம், இதன் விலை சற்றே அதிகமாக இருக்கக் கூடும். அதன்படி, மின்சார எடிஷன் கியா சிரோஸின் தொடக்க விலை 14 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்படலாம். அடுத்த ஆண்டின் மத்தியில் இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டியாளர்களாக கருதப்படும் டாடா நெக்ஸான் மின்சார எடிஷனின் விலை 14.79 லட்சம் முதல் 16.99 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. XUV400 கார் மாடலின் விலை 16.74 லட்சம் முதல் 17.69 லட்சம் வரை நீள்வது குறிப்பிடத்தக்கது. இவற்றை காட்டிலும், குறைந்த விலையில் கிடைக்கக் கூடும் என்பதால், கியா சிரோஸ் மின்சார எடிஷன் மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்டில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
கியா சிரோஸ் - ICE எடிஷன்:
கியா சிரோஸின் இன்ஜின் எடிஷனானது கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களில் மொத்தமாக, 6 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் மாடலனாது சராசரியாக லிட்டருக்கு 17 முதல் 21 கிமீ மைலேஜ் வழங்குகிறது. சிரோஸ் இன்ஜின் எடிஷனானது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகி பிரேஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO, மற்றும் ஸ்கோடா கைலாக் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.





















