Maruti Suzuki: மாருதி சுசுகி கார் புக் செய்தீர்களா? டெலிவரிக்கு காத்திருங்கள்... காரணம் இதுதான்!
மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதால் பண்டிகை காலத்தை ஒட்டி மாருதி நிறுவன கார்களை முன்பதிவு செய்தவர்கள் டெலிவரிக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதால் பண்டிகை காலத்தை ஒட்டி மாருதி நிறுவன கார்களை முன்பதிவு செய்தவர்கள் டெலிவரிக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மாருது சுசுகி, கார் உற்பத்தி நிறுவனம் நம் நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம். ஆனால், இந்த மாதம் இந்த நிறுவனம் வழக்கத்தைவிட 50 முதல் 60 ஆயிரம் கார்களைக் குறைவாக உற்பத்தி செய்திருக்கிறது. இது நிறுவனத்தின் வருவாயில் ரூ.2500 கோடி முதல் ரூ.3000 கோடி வரை பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
செமிகன்டக்டர்கள் எனப்படும் குறைக்கடத்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலேயே உற்பத்தி குறைந்துள்ளதாகத் தெரிகிறது. உலகம் முழுவதுமே செமிகன்டக்டர்கள் எனப்படும் குறைக்கடத்திகளுக்கு தட்டப்பாடு நிலவுவதால் இன்னும் சில காலத்திற்கு உற்பத்தி சிக்கல் நிலவும் எனக் கூறப்படுகிறது.
பண்டிகை காலம் நெருங்குவதால், மக்கள் புதிதாக கார் வாங்க முற்படுவார்கள். ஆனால், இந்த நேரத்தில் கார் உற்பத்தி குறைவது என்பது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
மாருதி சுசுகியின் மனேசர் தொழிற்சாலையில் ஆகஸ்ட் மாதம் 45,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்திருக்கிறது. ஆனால், ஆகஸ்டில் மனேசர் தொழிற்சாலையில் 65,000 கார்கள் உற்பத்தி ஆகியிருக்க வேண்டும். குருகிராம் தொழிற்சாலையில் மாருதி சுசுகியின் சிரிய ரக கார்கள் உற்பத்தி ஆகின்றன. இங்கு உற்பத்தி தாக்கம் சற்று குறைவாக உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனமானது 2021 மே மாதம் 170,719 கார்களையும், ஜூன் மாதத்தில் 165,576 கார்களையும் உற்பத்தி செய்துள்ளது. இது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உற்பத்தியை 5,37,174 என்றளவுக்கு உயர்த்தி உள்ளது. ஆனால், அடுத்து வரும் ஜூலை காலாண்டில் மாருதி நிறுவனம் 1,50,000 கார்களை குறைவாக உற்பத்தி செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜூன் காலாண்டு உற்பத்தி அறிக்கையை நிறுவனம் வெளியிட்ட போது நாடு முழுவதும் இருந்து மாருது சுசுகி கார்களுக்கு 170,000 முன்பதிவு வந்திருந்தன. இந்நிலையில் உற்பத்தி குறைவால், விற்பனை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கார் உற்பத்திக்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையேற்றத்தால், கடந்த சில மாதங்களில் பல்வேறு கார் நிறுவனங்களும் 3 முறை கார் விலையை உயர்த்திவிட்டது. செமிகன்டக்டர்கள் எனப்படும் குறைக்கடத்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பரவலாக பல் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் லாபத்தை அசைத்துப் பார்க்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், மாருதி சுசுகி வாடிக்கையாளர்களும் தாங்கள் புக் செய்த காரின் டெலிவரியைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. குறிப்பிடப்பட்ட நாளைக் காட்டிலும் மிகவும் தாமதமாகவே கார் கிடைக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களின் மனநிலையை அதற்குத் தயார்படுத்திக் கொள்வது நலம்.