Maruti Suzuki Jimny : தயங்கும் மஹிந்த்ரா..! இறங்கி அடிக்கும் மாருதி..! ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்..!
2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்த ஜிம்னி என்ற எஸ்யூவியை அடுத்தாண்டு மாருதி சுசூகி களமிறக்க திட்டமிட்டுள்ளது.
![Maruti Suzuki Jimny : தயங்கும் மஹிந்த்ரா..! இறங்கி அடிக்கும் மாருதி..! ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்..! Maruti Suzuki Jimny 5 Door competes with mahindra thar Check Expected Specification other details Maruti Suzuki Jimny : தயங்கும் மஹிந்த்ரா..! இறங்கி அடிக்கும் மாருதி..! ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/08/3cf6d5654dcbfe9fd7db2da23fd3d7781657268037_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மஹிந்திரா தார் போல 3 கதவுகள் மட்டுமே கொண்ட ஜிம்னி மாடலைத்தான் காட்சிப்படுத்தியிருந்தது மாருதி சுசூகி. ஆனால், இப்போது வெளிவந்துள்ள ஸ்பை போட்டோக்களை பார்க்கும்போது இது 5 கதவுகள் கொண்ட எஸ்யூவியாக விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிம்னியை தீவிரமாக ரோட் டெஸ்ட் செய்து வருகிறது மாருதி, இந்த ஸ்பை போட்டோக்கள் ஐரோப்பாவில் எடுக்கப்பட்டிருந்தாலும், தயாரிக்கப்படுவது இங்கு தான். இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக இருக்கும் இந்த 5 கதவுகள் கொண்ட ஜிம்னி ஒரு உலகளாவிய மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுமைக்கும் இங்கு இருந்துதான் ஏற்றுமதியும் செய்யப்பட இருக்கிறது.
என்னென்ன வசதிகள் :
ஸ்பை போட்டோக்களில் ஜிம்னி ஐந்து கதவுகளுக்கு ஏற்றபடி நீண்டிருக்கிறது. ஆக இடவசதிக்கு குறைவிருக்காது. உள்ளே மடித்துக் கொள்ளும்படியான மூன்றாவது வரிசை இருக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசூகி மற்றும் அதன் இந்திய கூட்டாளியான டொயோட்டா கார்களில் வரும் 9" இன்ச் டச் ஸ்கிரீன், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட சில சிறப்பம்சங்கள் ஜிம்னியில் இடம்பெறக்கூடும்.
நீள அகலங்களை பொறுத்தவரை முன்பே கூறியது போல 3-கதவு ஜிம்னியை விட இது 300 மிமீ நீளமானது. இந்த 5-கதவு எஸ்யூவியின் நீளம் 3,850 மிமீ, அகலம் 1,645 மிமீ மற்றும் உயரம் 1,730 மிமீ. இதன் வீல்பேஸ் 2,550 மிமீ. கிரவுண்ட் கிளியரன்ஸ் 210 மிமீ. மொத்த எடை 1,190 கிலோ.
புதிய அம்சங்கள் :
மாருதி சுசூகி ஜிம்னியை K15C DualJet இஞ்சினுடன் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய எஞ்சின் 103hp ஆற்றலையும் 137nm டார்க்கையும் வழங்குகிறது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம். 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் உண்டு. எரிபொருளை சேமிக்க இந்த K15C DualJet எஞ்சின் சுசூகியின் mild-hybrid தொழில்நுட்பத்துடன் வரலாம்.
ஜிம்னி நான்கு மீட்டருக்கும் குறைவான நீளத்தை கொண்டிருந்தாலும் 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டிருப்பதால், இந்தியாவில் காம்பேக்ட் கார்களுக்கான வரிச்சலுகை இதற்கு கிடைக்காது. இருப்பினும் சுசூகியின் சிறிய 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சினைப் ஜிம்னியில் பயன்படுத்த முடிவு செய்தால், வரிச்சலுகை கிடைக்கப்பெறும். மேலும் இது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், மஹிந்த்ரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்காவை விட குறைந்த விலைக்கு விற்பனைக்கு வரும்.
5-கதவு மஹிந்திரா தார் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு, அடுத்த ஆண்டு புத்தாண்டு பரிசாக ஜிம்னியை களமிறக்குகிறது மாருதி சுசூகி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)