Maruti Victoris SUV: கடைசி நேர ட்விஸ்ட்.. அது எஸ்குடோ எஸ்யுவி இல்லையாம் - புதிய பெயரை கசியவிட்ட மாருதி
Maruti Suzuki Victoris: மாருதி சுசூகி நாளை சந்தைப்படுத்த உள்ள புதிய எஸ்யுவியின் அதிகாரப்பூர்வ பெயர் தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

Maruti Suzuki Victoris: மாருதி சுசூகி நாளை சந்தைப்படுத்த உள்ள புதிய எஸ்யுவியின் அதிகாரப்பூர்வ பெயர் eஸ்குடோ இல்லை என கூறப்படுகிறது.
மாருதியின் புதிய எஸ்யுவி ”எஸ்குடோ” இல்லையாம்?
மாருதியின் புதிய எஸ்யுவி கார் மாடல் நாளை, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே அந்த கார் மாடலின் பெயர் இணையத்தில் கசிந்துள்ளது. உற்பத்தியின் போது Y17 என்ற குறியீட்டு பெயரை கொண்ட இந்த காருக்கு, விக்டோரிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இது எஸ்குடோ என்ற பெயரை பெறும் என தகவல் வெளியான நிலையில், மாருதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே விக்டோரிஸ் என பெயரை குறிப்பிட்டு நீக்கியது இணையத்தில் வைரலாகியுள்ளது. உடனடியாக அந்த பெயர் கூகுள் தேடலிலும் எதிரொலித்தது புதிய காம்பேக்ட் எஸ்யுவின் பெயர் விக்டோரிஸ் தானோ என நம்பும்படியாக உள்ளது.
மாருதியின் விக்டோரிஸ் எஸ்யுவி - வடிவமைப்பு விவரங்கள்
மாருதியின் அரேனா டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்பட உள்ள புதிய விக்டோரிஸ் எஸ்யுவி ஆனது, நிறுவனத்தின் ப்ரேஸ்ஸா மற்றும் க்ராண்ட் விட்டாரா கார் மாடல்களுக்கு நடுவே நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த காரானது மாருதியின் சர்வதேச சந்தைக்கான C- பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. க்ராண்ட் விட்டாரவிற்கு பயன்படுத்தப்பட்ட அதே கட்டமைப்பு ஸ்டைல் தான் இதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மானது உற்பத்தி செலவுகளை குறைப்பதோடு, ஏற்கனவே க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடரில் நல்ல பலனை தரும் பல அம்சங்களை அப்படியே விக்டோரிஸ் கார் மாடலில் வழங்கவும் உதவுகிறது.
வடிவமைப்பில், நீள அடிப்படையில் க்ராண்ட் விட்டாராவை காட்டிலும் சற்றே கூடுதலாக விக்டோரிஸ் 4 ஆயிரத்து 345 மில்லி மீட்டர் இருக்கக் கூடும். இதன் மூலம் இந்த காரானது ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு நேரடியாக போட்டியாளராகிறது. செல்டோஸ், குஷக் மற்றும் டைகன் ஆகிய கார் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் சந்தைக்கு வரவுள்ளதால், விக்டோரிஸ் கார் மாடலானது இடவசதி , அம்சங்கள் மற்றும் விலை ஆகியவற்றில் தனித்து நிற்க வேண்டியுள்ளது. கூடுதல் நீளமானது கூடுதலான பூட் ஸ்பேஸ் கொண்டு குடும்ப பயனாளர்களை இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதியின் விக்டோரிஸ் எஸ்யுவி - இன்ஜின் விவரங்கள்
மாருதியின் க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடரில் உள்ள இன்ஜின் ஆப்ஷனை தான், புதிய விக்டோரிஸ் எஸ்யுவியும் பின்பற்ற உள்ளது. அதன்படி, 103PS மற்றும் 139Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற உள்ளது. இதனுடன் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன், சுசூகி ஆல்க்ரிப் ஆல் வீல் ட்ரைவ் அம்சமும் வழங்கப்பட உள்ளது. 115.5PS ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் ஸ்ட்ராங்க் ஹைப்ரிட் இன்ஜின் ஆனது, eCVT கியர்பாக்ஸ் உடன் வருகிறது. மேலும் இந்த காருக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்காக சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்பட உள்ளது.
அரேனா வழங்கும் அட்வாண்டேஜ்
விலையுயர்ந்த கார்களுக்கான நெக்ஸா டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதன் காரணமாகவே, ஹுண்டாயின் க்ரேட்டாவிற்கு நிகராக க்ராண்ட் விட்டாராவின் விற்பனை பதிவாவதில்லை என நம்பப்படுகிறது. அந்த ஆபத்தை தவிர்ப்பதற்காகவே, நாடு முழுவதுமுள்ள மாருதியின் 3000 அரேனா டீலர்ஷிப்கள் மூலம் புதிய விக்டோரிஸ் கார் மாடல் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மிதமான பட்ஜெட்டில் நல்ல காரை வாங்க விரும்பும் பெரும்பாலான மக்களுக்கு, இந்த கார் மிக எளிமையான அணுகலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் மாருதியின் விக்டோரிஸ்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் கடுமையான போட்டி நிலவும் சூழலில் தான், மாருதியின் விக்டோரிஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பிரிவில் 37சதவிகித பங்களிப்புடன், ஹுண்டாயின் க்ரேட்டா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. கடந்த ஜனவரி தொடங்கி ஜுலை வரையிலான 7 மாதங்களில், இந்தியாவில் அதிகம் விற்பனையான காராகவும் க்ரேட்டா தொடர்கிறது. இந்நிலையில் மாருதியின் அரேனா அட்வாண்டேஜ், தீவிரமான விலை நிர்ணயம், பலதரப்பட்ட இன்ஜின் ஆப்ஷன்கள், ஆகியவை, விக்டோரிஸ் மாடலை க்ரேட்டாவிற்கு நிகரான போட்டியாளராக மாற்றுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த காரின் முழு விவரங்களும் நாளை, அதாவது செப்டம்பர் 3ம் தேதி அன்று மாருதி சுசூகி நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது.






















