Mahindra New Launch: வேணுமா, நாங்க கொடுக்குறோம் - 3 புதிய எஸ்யுவிக்களை களமிறக்கும் மஹிந்திரா - என்ன எடிஷன் தெரியுமா?
Mahindra New SUV Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டில், 3 எஸ்யுவி கார் மாடல்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Mahindra New SUV Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி கார் பிரிவில் மஹிந்திரா நிறுவனம் கோலோச்சி வருவது குறிப்பிடத்தக்கது.
3 புதிய ICE எஸ்யுவிகளை களமிறக்கும் மஹிந்திரா:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி பிரிவில் மஹிந்திரா நிறுவனம், முன்னணி கார் உற்பத்தியாளராக திகழ்கிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, இன்ஜின் அடிப்படையிலான முக்கிய 3 புதிய எஸ்யுவிக்களை அடுத்த ஆண்டு களமிறக்க உள்ளதை உறுதி செய்துள்ளது. 2026ம் ஆண்டில் 7 புதிய தயாரிப்புகளை சந்தைப்படுத்த உள்ளதாக மஹிந்திரா அறிவித்தது. அதில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட 3 எஸ்யுவிகளும் வாடிக்கையாளர்களை கட்டாயம் தன் பக்கம் ஈர்க்கும் என மஹிந்திரா நம்புகிறது.
1. அடுத்த தலைமுறை மஹிந்திரா பொலேரோ:
25 ஆண்டுகளில் தீவிர அப்டேட்:
மஹிந்திரா நிறுவனம் சார்பில் அடுத்த ஆண்டு வெளியாகும் கார் மாடலில், குறிப்பாக இன்ஜின் அடிப்படையிலான காரில் அடுத்த தலைமுறை மஹிந்திரா பொலேரோ முக்கிய மாடலாக உள்ளது. கடந்த 2000ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல் கரடுமுரடான கட்டமைப்பு, மலிவு விலை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு காரணமாக, கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் கூட மிகவும் பிரபலமானதாக தசாபதங்களை கடந்து தொடர்கிறது. அறிமுகமான 25 ஆண்டுகளில் மஹிந்திரா பொலேரே காணும் மிகத்தீவிரமான அப்டேட்டாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
நோக்கம் என்ன?
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வடிவமைப்பை மாற்றி அமைப்பதோடு, நவீன பாதுகாப்பு மற்றும் உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளது. அடுத்த தலைமுரை பொலேரோ மாடலானது, வரும் ஆகஸ்ட் 15ம் தேதி மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ள புதிய பிளாட்ஃபார்ம் அடிப்படையில் உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரம், இந்த பிளாட்ஃபார்ம் அடிப்படையில் உருவாக்கப்படும் கார் 2027ல் தான் சந்தைக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய அம்சங்கள் என்ன?
வலுவான கட்டமைப்பு, மிகத்தீவிரமான வடிவமைப்பு, டச்-ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் USB டைப் C போர்ட்ஸ் மற்றும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றின் மூலம் அடுத்த தலைமுறை பொலேரோவானது தற்போதுள்ள எடிஷனை காட்டிலும் சிறந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது. இன்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தொடர்பான தகவல்கள் ஏதும் இல்லாத நிலையில், மூன்று வரிசை இருக்கை இதில் வழங்கப்படலாம்.
2. புதிய மஹிந்திரா தார்:
கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது தலைமுறை தார் மாடலானது அடுத்த ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் பெறுகிறது. மேம்படுத்தப்பட்ட எடிஷனானது வெளிப்புறத்தில் லேசான மாற்றங்களை எதிர்கொள்ளும். அதில் எல்இடி முகப்பு விளக்குகள், புதிய ரேடியேட்டர் கிரில், புதிய 18 இன்ச் அலாய் வீல்கள், ட்வீக்ட் எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் திருத்தப்பட்ட பம்பர்கள் அப்டேட் பெறலாம்.
உட்புறத்தில் ஸ்டீயரிங் வீலின் வடிவமைப்பு மற்றும் கலர் ஸ்கீம்கள் மாற்றப்படலாம். முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பெரிய டச்ஸ்க்ரீன் ன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் அப்டேட்டில் சன்ரூஃப் கூட வழங்கப்படலாம். 2 டோர்களை கொண்ட இந்த எஸ்யுவியை ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்த, எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இதிலும் இன்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது.
3. புதிய மஹிந்திரா XUV700:
மஹிந்திரா XUV500 மாடலின் வெற்றியாளராக கடந்த 2021ம் ஆண்டு புதிய மஹிந்திரா XUV700 மாடல் அறிமுகமானது. இந்த கார் மாடலும் அடுத்த ஆண்டில் ஃபேஸ்லிஃப்டை எதிர்கொள்ள உள்ளது. இந்த புதிய மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புற மாற்றத்தில் மஹிந்திராவின் XEV 9e கார் மாடலின் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, இணைக்கப்பட்ட முகப்பு மற்றும் டெயில் விளக்குகள், பெரிய 12.3 இன்ச் டச்-ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் டிஸ்பிளே, 12.3 இன்ச் பேசஞ்சர் டச்-ஸ்க்ரீன் ஆகியவை இடம்பெறலாம். இதிலும் இன்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது.




















