Kia Clavis: இனி இது தான் டாப்..! கியாவின் புதிய கார் மாடல் - ADAS கன்ஃபார்ம், விலை, அம்சங்கள்?
Kia Clavis: கியா நிறுவனத்தின் புதிய கார் மாடலான கிளாவிஸ், வரும் 8ம் தேதி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Kia Clavis: கியா நிறுவனத்தின் புதிய கார் மாடலான கிளாவிஸின் வெளியீட்டை முன்னிட்டு, அதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
கியா கிளாவிஸ்
கியா நிறுவனம் தனது புதிய மல்டி பேசஞ்சர் வாகனமான (MPV), கிளாவிஸ் மாடலை வரும் 8ம் தேதி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதனை முன்னிட்டு அதன் சிறிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் பிரபலமான கார் மாடலான காரென்ஸின் பிரீமியம் எடிஷனாக புதிய கிளாவிஸ் காட்சியளிக்கிறது. மேலும், வெளிப்புற தோற்றத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கிய மேம்படுத்தல்களையும் டீசர் காட்சிப்படுத்துகிறது. மேலும், கிளாவிஸ் கார் மாடலில் இடம்பெற்றுள்ள பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கிளாவிஸ் வடிவமைப்பு விவரங்கள்:
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்புற பகுதியை கிளாவிஸ் கொண்டுள்ளது. பகல் நேரங்களில் ஒளிரக்கூடிய LED விளக்குகள் இதில் இடம்பெற்றுள்ளன. புதிய வடிவில் பூம்ராங் பாணியில் வடிவமைக்கப்பட்ட LED முகப்பு விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பல தகவல்கள் இன்னும் ரகசியமாக உள்ள நிலையில், முகப்பு,பின்புற பம்பர் மற்றும் புதிய அலாய் வீல் வடிவமைப்புகள் மூலமாக தற்போதைய காரென் மாடலிலிருந்து கிளாவிஸ் வேறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட இந்த கார், விரைவில் அதன் மின்சார எடிஷனையும் சந்தைக்கு கொண்டு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ADAS கன்ஃபார்ம்:
டீசரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி புதிய கிளாவிஸ் கார் மாடலில் ADAS தொழில்நுட்பம் இடம்பெற்று இருப்பதை உறுதி செய்துள்ளது. லெவல் 2 ADAS மூலம் லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மோதல் எச்சரிக்கை, லேன் புறப்பாடு எச்சரிக்கை, லேன் ஃபாலோவிங் அசிஸ்ட், ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்டாப் அண்ட் கோ, முன்னே உள்ள வாகனத்தின் புறப்பாடு எச்சரிக்கை என பலவற்றை சென்சார்கள் மூலம் உணரலாம். ADAS என்பது ஓட்டுநர்களுக்கு உதவ சென்சார்கள், கேமராக்கள் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் வாகனப் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும்.
தொழில்நுட்ப அம்சங்கள்:
காரென்ஸ் கார் மாடலுக்கு இணையாக விற்க திட்டமிட்டுள்ளதாகவும், அதேநேரம் மடல் அடிப்படையில் அதைவிட மேலே கிளாவிஸ் மாடலை நிலைநிறுத்த கியா திட்டமிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இதனை பிரீமியம் காராக வழங்க திருத்தப்பட்ட சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, புதிய ட்ரிம் மெட்டீரியல், வயர்லஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ கனெக்டிவிடி அடங்கிய செல்டோஸ் மாடலில் இருப்பதை போன்ற இன்ஸ்ட்ரூமெண்டல் கன்சோல் ஆகியவை மேம்படுத்தப்பட்ட கிளாவிஸில் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக 360 டிகிரி கேமரா, ட்ரைவ் மோட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹீடட் மற்றும் வெண்டிலேட்டர்கள் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறலாம்.
இன்ஜின் விவரங்கள்:
வெளிப்புற தோற்றம் மற்றும் இடம்பெறக்கூடிய தொழில்நுட்ப அம்சங்கள் மேம்படுத்தப்பட்டாலும், கிளாவிஸின் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் காரென் மாடலில் இருப்பதை போன்றே தொடரும் என கூறப்படுகிறது. அதன்படி காரெனில் தற்போது உள்ள, 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கிளாவிஸ் மாடலில் தொடரும், அவற்றில் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல், சிக்ஸ் ஸ்பீட் iMT, சிக்ஸ் ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் ஆகிய ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.
விலை விவரங்கள்:
கிளாவிஸ் கார் மாடலின் விலை தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், கூடுதல் பிரீமியம் அம்சங்கள் காரணமாக இதன் விலை காரென் கார் மாடலை விட அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் காரென் மாடலின் விலை ரூ.10.60 லட்சம் முதல் ரூ.19.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்படுகிறது. புதிய வடிவமைப்பு மற்றும் கூடுதல் அம்சங்களுடன், கிளாவிஸ் உயர்நிலை MPVகள் அல்லது நடுத்தர அளவிலான SUVகளை விரும்புபவர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். அதன்படி, தற்போது இந்திய சந்தையில் உள்ள டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர், மஹிந்திரா XUV3XO., டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யு மற்றும் மாருதி சுசுகி பிரெஸ்ஸாவுடன் புதிய கிளாவிஸ் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















