இதுக்கு எதுக்குயா ரூ.23 லட்சம்? டாடா ஹாரியர் EV-யை தலையில் தட்டிய ஆல்டோ கே10 ? லாஸ்ட்ல ட்விஸ்ட்
Tata Harrier EV: இந்திய சந்தையில் எந்த காரும் செய்யாததை ஹாரியர் மின்சார எடிஷன் செய்யும் என்ற டாடாவின் விளம்பரத்திற்கு, ஆல்டோ கே10 கார் மாடல் சவால் விடுத்துள்ளது.

Tata Harrier EV: கேரளாவில் உள்ள 3 ஆயிரத்து 937 அடி உயரமுள்ள பாறையின் மீது, ஆல்டோ கே10 காரை ஏற்றி அப்பகுதி இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.
டாடா ஹாரியர் மின்சார எடிஷன்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக டாடா உள்ளது. அண்மையில் இந்நிறுவனம் தனது ஹாரியர் மாடலின் மின்சார எடிஷனை அறிமுகப்படுத்தியது. 4 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் ஆன் ரோட் விலை சென்னையில் ரூ.22.96 லட்சம் தொடங்கி ரூ.27.05 லட்சம் வரை நீள்கிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 500 கிலோ மீட்டர் தூரம் வரையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமான அம்சங்கள் நிறைந்த பிரீமியம் காராக திகழ்வதால், டாடா ஹாரியரின் அம்சங்களை குறிப்பிட்டு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதற்கு சவால் விடுக்கும் விதமாக கேரள இளைஞர்கள் செய்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
டாடா ஹாரியர் EV விளம்பரம்:
டாடா நிறுவனத்தின் விளம்பரத்தில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், 3 ஆயிரத்து 937 அடி உயரம் உள்ள எலிபெண்ட் ராக் மீது ஹாரியர் EV ஏறுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மிகவும் செங்குத்தாக அமைந்துள்ள அந்த பாறையின்மீது கார் ஏறுவது என்பது சாத்தியமில்லாதது என ஒருவர் தெரிவிக்கிறார். அதற்கு டாடா சார்பிலான பதிலாக, “சிறிய சறுக்கல் ஏற்பட்டாலும் நீங்கள் இல்லாமல் போவீர்கள். தற்போது வரை இதை யாரும் செய்ததில்லை. எந்த காருக்கும் இதை முயற்சிக்கும் தைரியமும் இல்லை. நாங்கள் சாலையை பின்பற்றுவதில்லை அதனை அழிக்கிறோம் என கூறி, காரில் உள்ள தொழில்நுட்ப அம்சங்களின் உதவியின் மூலம் வெற்றிகரமாக பாறையின் உச்சியை ஹாரியர் EV எட்டியபடி” அந்த விளம்பரம் முடிவடைகிறது.
ஹாரியரின் பாதுகாப்பு அம்சங்கள்:
டாடாவின் விளம்பரம் கவனத்தை ஈர்த்ததோடு, இது எப்படி சாத்தியம் எனவும் பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் ஹாரியர் மின்சார எடிஷனில் உள்ள உயர் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் தான். அதன்படி, 7 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் பிரேக், வைப்பிங் ஃபங்சனுடன் கூடிய ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக, ஹில் ஹோல்ட் & டிசெண்ட் கண்ட்ரோல், ரோல் ஓவர் மிடிகேஷன், ட்ரான்ஸ்பரன் மோட் உடன்கூடிய 360 கேமரா போன்ற லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
சாத்தியமானது எப்படி?
இதுபோக மோசமான சாலைகளிலும் வலுவான செயல்திறனை வெளிப்படுத்த ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம் மற்றும் 205 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது. நார்மல், ராக் கிராவ்ல் மற்றும் மணல் என 6 விதமான நிலப்பரப்புகளில் இயக்குவதற்கு ஏற்ற ட்ரைவ் மோட்களை பெற்றுள்ளது. தேவையான நேரத்தில் அதிகப்படியான ஆற்றலை வெளிப்படுத்த பூஸ்ட் மோடும் அமைந்துள்ளது. இப்படி உயர் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தையும் கொண்டே, 34 டிகிரி சாய்வான பாறையில் கூட ஏறி ஹாரியர் மின்சார கார் எலிபெண்ட் ராக்கின் மீது ஏறி அசத்தியுள்ளது.
மாஸ் காட்டிய ஆல்டோ கே10?
டாடா ஹாரியர் மின்சார காரின் விளம்பரம் வைரலான நிலையில், கேரளாவைச் சேர்ந்த சில இளைஞர்கள் மலிவு விலை கார்களையே எலிபெண்ட் ராக்கின் மீது ஏற்றியதாக வெளியான வீடியோ பேசுபொருளாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு உயரமான பாறையின் மீது ஆல்டோ, இன்னோவா உள்ளிட்ட 3 கார்கள் அநாயசமாக ஏறியுள்ளன. இதனை பகிர்ந்து, சுமார் 5 லட்சத்திற்கு கிடைக்கும் ஆல்டோ காரே அந்த பாறையை ஏறுகிறது, இதற்காகவே ரூ.23 லட்சம் செலவு செய்து ஹாரியர் மின்சார காரை வாங்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பினர்.
உண்மை என்ன?
ஆனால், உண்மையில் ஆல்டோ கே10 உள்ளிட்ட கார்கள் ஏறியது எலிபெண்ட் ராக்கே கிடையாது என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. அந்த வீடியோவில் இடம்பெற்று இருப்பது கேரளாவின் பழனி என கூறப்படும், உரவப்பர மலைக்கோயில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் உறுதியாகியுள்ளது. மேலும், இது பழைய வீடியோ என்பதையும், வேண்டுமென்றே சிலர் தற்போது எடிட் செய்து பரப்பி வருவதாகவும், ஆட்டோமொபைல் ரிவியூவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து டாடா ஹாரியரை விமரிசித்து பதிவு செய்து வந்தவர்கள்,அந்த வீடியோவை தங்களது சமூக வலைதள கணக்குகளில் இருந்து டெலிட் செய்து வருகின்றனர். ஆல்டோ கே10 போன்ற மிகவும் மலிவு விலை மற்றும் பாதுகாப்பு இல்லாத அம்சங்கள் நிறைந்த காரால், எலிபெண்ட் ராக்கை ஏறுவது என்பது சாத்தியமற்றது என்பது ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.





















