Honda 0 α: தடாலடி என்ட்ரி..! ஹோண்டாவின் புதிய மின்சார கார் - ப்ரீமியம் லுக், 500 கிமீ ரேஞ்ச், ஹைடெக் கேஜ்ட்ஸ்
Honda 0 α EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டா நிறுவனம் தனது முதல் மின்சார காரை, வரும் 2027ம் ஆண்டு சதைப்படுத்த முடிவு செய்துள்ளது.

Honda 0 α EV: ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய 0 α (ஆல்ஃபா) மின்சார கார் மாடலின் புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.
ஹோண்டாவின் 0 α மின்சார கார்:
ஜப்பானில் நடைபெற்று வரும் கார் கண்காட்சியில் ஹோண்டா நிறுவனம் தனது புதிய, 0 α (ஆல்ஃபா) மின்சார காரின் மாதிரியை காட்சிப்படுத்தியுள்ளது. இது நிறுவனத்தின் புதிய தலைமுறை மின்சார எஸ்யுவிக்கள் எப்படி இருக்கும் என்பதை காட்டும் விதமாக அமைந்துள்ளது. அக்டோபர் 29ம் தேதி தொடங்கி, நவம்பர் 9ம் தேதி வரை, கண்காட்சியில் உள்ள ஹோண்டா அரங்கில் புதிய காரின் மாதிரி காட்சிப்படுத்தப்படுகிறது. ப்ராண்டின் முழு மின்சார மாடலான 0 சீரிஸில் இணையும் புதிய காராக இது அமைந்துள்ளது.
நகரத்திற்கு ஏற்ற டிசைன்:
ஹோண்டா நிறுவனத்தின் 0 சீரிஸில் ஏற்கனவே 0 சலூன் மற்றும் 0 எஸ்யுவி என இரண்டு கார்கள் இடம்பெற்றுள்ளன. இவை நடப்பாண்டிற்கான Consumer Electronics Show-வில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன. அந்த வரிசையில் இணைந்துள்ள புதிய 0 α மாடலானது, 0 சீரிஸின் என்ட்ரி லெவல் காராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், முதல் இரண்டு மாடல்களை போலில்லாமல், நகர்ப்புற ஓட்டுதலை அவுட்டோர் பல்துறைத்திறனுடன் இணைப்பதில் ஆல்ஃபா கவனம் செலுத்துகிறது. பிராண்டின் கருத்தின்படி படி நகரத்திலும் இயற்கை சூழலிலும் நிம்மதியாக உணர செய்யும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா 0 சீரிஸ் - வெளிப்புறம், உட்புற அம்சங்கள்:
ஹோண்டாவின் 0 சீரிஸ் மின்சார கார்களில் இடம்பெற உள்ள 7 மாடல்களில், முதலாவதாக ஆல்ஃபா சந்தைப்படுத்தப்பட உள்ளது. காட்சிப்படுத்தப்பட்டுள்ள எஸ்யுவி ஆனது வழக்கத்திற்கு மாறான டிசைனை கொண்டுள்ளது. பின்புறத்தில் உள்ள சதுர வடிவமானது, எம்பிவி போன்ற தோற்றத்தை வழங்குகிறது. இந்த வடிவமைப்பு உட்புற இடத்தை அதிகரிக்க வழிவகை செய்கிறது. பெரிய கண்ணாடி கூரை பார்வைத்திறனை மேம்படுத்துகிறது. உடல் வேலைப்பாடு நேர்த்தியாக உள்ளது. ஏரோடைனமிக்கல் செயல்திறனுக்காக கூர்மையான கோடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வடிவமைப்பு சிறப்பம்சங்கள் U- வடிவ டெயில்-லேம்ப்கள் மற்றும் காருக்கு அடுக்கு விளைவை அளிக்கும் முன் மற்றும் பின்புற பம்பர்கள் ஆகும்.
ஹோண்டாவின் அறிவிப்பின்படி, நிறுவனத்தின் அனைத்து 0 சீரிஸ் மின்சார கார்களும், மென்பொருளால் வரையறுக்கப்பட்ட வாகனங்களாக (SDVs) உருவாக்கப்படுகின்றன. இது லெவல் 3 தானியங்கி ஓட்டுநர் போன்ற தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும், மேலும் ஹோண்டா நிறுவனம் ASIMO OS எனப்படும் புத்தம் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டமை உருவாக்கியுள்ளது. இது 0 சீரிஸ் மின்சார வாகனங்களின் வரையறுக்கும் அம்சமாக இருக்கும். இது வாகன அமைப்புகள், ஓட்டுநர் உதவிகள் மற்றும் காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் ஆகியவற்றிற்கான ECUகளை நிர்வகிக்கும் மற்றும் ஓவர் தி ஏர் அப்டேட்களை ஆதரிக்கும்.
ஹோண்டா 0 சீரிஸ் - தொழில்நுட்ப அம்சங்கள்:
0 சீரிஸ் ஆல்ஃபா மாடலிந்தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்கள் எதையும் ஹோண்டா நிறுவனம் தற்போது வரை வெளியிடவில்லை. அதேநேரம், இந்த கார் ரியர் வீல் ட்ரைவ் அல்லது ஆல் வீல் ட்ரைவ் அம்சத்தில் சந்தைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்த காரில், மிக மெல்லிய மற்றும் இலகுரக பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. தகவல்களின்படி இந்த கார், 80kWh முதல் 100kWh வரையிலான இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வரும் என்றும், அதிகபட்சமாக சுமார் 500 கிமீ வரை ரேஞ்ச் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் விற்பனைக்கு வருவது எப்போது?
புதிய ஆல்ஃபா கார் மாடலின் உற்பத்தி எடிஷனை 2027 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் விற்பனைக்கு கொண்டு வர ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அதன் முதன்மை வெளியீட்டு சந்தைகளில் ஜப்பான் மற்றும் இந்தியாவும் அடங்கும். மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் இடம்பெறக்கூடிய இந்த காரானது, உள்நாட்டு சந்தையில் மாருதி நிறுவனமிடமிருந்து விரைவில் வெளியாக உள்ள, எ-விட்டாராவுடன் போட்டியிட உள்ளது. அதேநேரம், இந்த கார் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவதால், விலையானது போட்டித்தன்மையுடன் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.





















