Tata Discount: ரூ.2 லட்சத்திற்கு தள்ளுபடிகளை அள்ளி வீசிய டாடா.. ப்ரீமியம் மாடல்களுக்கு அட்டகாசமான ஆஃபர்
Tata Discount: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவன கார்களுக்கு ஒட்டுமொத்தமாக, ரூ.2 லட்சம் வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Tata Discount: டாடா நிறுவன கார்களுக்கு செப்டம்பர் மாத இறுதி வரை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டாடா கார்களுக்கு சிறப்பு சலுகை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு, வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை ரூ.2 லட்சம் வரையிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதில் ஜிஎஸ்டி திருத்தம் தொடர்பான விலை குறைப்புடன், பணத் தள்ளுபடி, எக்சேஞ்ச் போனஸ் மற்றும் விழாக்கால சலுகை ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்பு சலுகையும் அடங்கும். ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாக டாடா கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.55 லட்சம் வரை விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மீட்டருக்கு குறைவான நீளம் மற்றும் 1200சிசி & 1500சிசி திறன் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் தற்போது 18 சதவிகித வரி அடுக்குக்குள் அடங்குவது குறிப்பிடத்தக்கது.
டாடாவின் எந்த காருக்கு எவ்வளவு சலுகை?
| மாடல் | குறைக்கப்பட்ட விலை | கூடுதல் தள்ளுபடி | மொத்த பலன் |
| டாடா டியாகோ | ரூ.75,000 வரை | ரூ. 45,000 வரை | ரூ.1.20 லட்சம் வரை |
| டாடா டைகோர் | ரூ.81,000 வரை | ரூ.30,000 வரை | ரூ. 1.11 லட்சம் வரை |
| டாடா பஞ்ச் | ரூ.1.08 லட்சம் வரை | ரூ. 50,000 வரை | ரூ. 1.58 லட்சம் வரை |
| டாடா ஆல்ட்ரோஸ் | ரூ.1.11 லட்சம் வரை | ரூ.65,000 வரை | ரூ. 1.76 லட்சம் வரை |
| டாடா நெக்ஸான் | ரூ.1.55 லட்சம் வரை | ரூ. 45, 000 வரை | ரூ. 2 லட்சம் வரை |
| டாடா கர்வ் | ரூ.67 ஆயிரம் வரை | ரூ. 40, 000 வரை | ரூ. 1.07 லட்சம் வரை |
| டாடா ஹாரியர் | ரூ.1.44 லட்சம் வரை | ரூ. 50,000 வரை | ரூ. 1.94 லட்சம் வரை |
| டாடா சஃபாரி | ரூ.1.48 லட்சம் வரை | ரூ. 50,000 வரை | ரூ. 1.98 லட்சம் வரை |
டாடாவின் சின்ன கார்களுக்கான சலுகைகள்:
டாடா டியாகோ காரை வாங்குபவர்கள் செப்டம்பர் 30ம் தேதி வரை, ரூ.1.20 லட்சம் வரை சலுகைகளைப் பெறலாம். இதில் ரூ.75,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலை குறைப்பு மற்றும் ரூ.45,000 வரை கூடுதல் சேமிப்பு ஆகியவை அடங்கும். ஜிஎஸ்டி திருத்தத்திற்குப் பிறகு டாடா டியாகோவின் விலை ரூ.4.57 லட்சத்தில் தொடங்குகிறது. டைகோர் காருக்கான ரூ.1.11 லட்சம் வரையிலான மொத்த சலுகையில், ரூ.81,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலை குறைப்பு மற்றும் ரூ.30,000 மதிப்புள்ள கூடுதல் சலுகைகள் அடங்கும்.
டாடா எஸ்யுவிக்களுக்கான சலுகைகள்:
கடந்த ஆண்டில் நாட்டின் அதிகம் விற்பனையான மாடல் என்ற பெருமையை பெற்ற டாடா பஞ்ச், 2025 ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காரணமாக ரூ.1.08 லட்சம் வரை விலை குறைப்பைப் பெற்றுள்ளது. அதோடு செப்டம்பர் 30ம் தேதி வரை அந்த காருக்கு கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் சலுகை வழங்குவதன் மூலம், பயனர்கள் ரூ.1.58 லட்சம் வரை சேமிக்கலாம். அதன்படி, இந்த மைக்ரோ-எஸ்யூவியின் விலை இப்போது ரூ.5.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. அதிகபட்சமாக டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் மாடல் மீது பயனர்கள் செப்டம்பர் 30ம் தேதி வரை ரூ.2 லட்சம் சேமிக்கலாம். இதில் ரூ.1.55 லட்சம் வரையிலான விலை குறைப்புடன், ரூ.45,000 வரையிலான கூடுதல் சலுகைகளும் அடங்கும். இதன்படி, காம்பாக்ட் SUV-யான நெக்ஸானின் தொடக்க விலை ரூ.7.31 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) குறைந்துள்ளது.
டாடா ப்ரீமியம் எஸ்யுவிக்களுக்கான சலுகைகள்:
டாடா கர்வ் மீது ஜிஎஸ்டி 2.0 விலை ரூ.67,000 வரை குறைப்பு மற்றும் ரூ.40,000 வரை கூடுதல் சலுகைகள் உட்பட குறைந்தபட்சம் ரூ.1.07 லட்சம் பணப்பலன் கிடைக்கிறது. பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் டீசல் எரிபொருள் வகைகளில் விற்பனையில் உள்ள ஒரே ஹேட்ச்பேக் மாடலான டாடா ஆல்ட்ரோஸ் மொத்த ரூ.1.76 லட்சம் வரை பணப்பலனை பெறுகிறது. எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.1.11 லட்சம் வரை குறைப்பு மற்றும் ரூ.65,000 வரை பல்வேறு சலுகைகள் காரணமாக, ஆல்ட்ராஸ் இப்போது இந்திய சந்தையில் ரூ.6.30 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
டாடாவின் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய எஸ்யூவிக்களின் விலை முறையே ரூ.1.44 லட்சம் மற்றும் ரூ.1.48 லட்சம் குறைப்பு காரணமாக, அவற்றின் தொடக்க விலை முறையே ரூ.13.99 லட்சம் மற்றும் ரூ.14.66 லட்சமாகக் குறைந்துள்ளது. கூடுதலாக, செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இரண்டு எஸ்யூவி மாடல்களையும் வாங்கும்போது ரூ.50,000 வரை கூடுதல் சலுகைகளை டாடா வழங்குகிறது. எனவே, ஹாரியர் மற்றும் சஃபாரி வாங்கும்போது வாடிக்கையாளர்கள் முறையே ரூ.1.94 லட்சம் மற்றும் ரூ.1.98 லட்சம் வரை பெரும் சேமிப்பைப் பெறலாம். ஜிஎஸ்டியில் எந்த மாற்றமும் இல்லாததால் மின்சார வாகனங்களின் விலைகள் முன்பு போலவே உள்ளன. அதாவது மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி அதே 5 சதவிகிதத்தில் தொடர்கிறது.





















