Fast Track Cabs: கார்ப்பரேட்டுகளைத் தாண்டி நிற்கும் தமிழக நிறுவனம்; ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸியின் 23ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்
தமிழர்களால் தொடங்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கால் டாக்ஸி சேவைகளை விஞ்சி நிற்கிறது ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸி நிறுவனம்.
தமிழர்களால் தொடங்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கால் டாக்ஸி சேவைகளை விஞ்சி நிற்கிறது ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸி நிறுவனம். இதன் 23ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் செயல்பட்டு வரும் வாகன சேவைகளில் ஒன்று ஃபாஸ்ட் ட்ராக். இந்த நிறுவனம் உள்ளூர்களிலும் வெளி மாவட்டங்களுக்குச் செல்லவும் வாடகை அடிப்படையில் கார்களை இயக்கி வருகிறது.
ஃபாஸ்ட் ட்ராக்கில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வண்டிகளை இயக்கி வருகின்றனர். 2000ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் சேவையை சுமார் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
நட்டத்தைத் தாண்டி மீண்டெழுந்த நிறுவனம்
23 ஆண்டுகளுக்கு முன்பு பிரபு, ரெட்சன் அம்பிகாபதி, தமிழரசு உள்ளிட்ட நண்பர்கள் பலரால் 2000ஆவது ஆண்டில் ஃபாஸ்ட் ட்ராக் கால் டாக்ஸி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பித்த சில மாதங்களிலேயே மக்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றது. லாபத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. எனினும் கார்கள் பராமரிப்பு, அதிகரித்த ஓட்டுநர்கள் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனம் நட்டமடையத் தொடங்கியது.
நண்பர்கள் சிலர் விலக, புதியவர்கள் சிலர் இணைய ஆரம்பித்தனர். ஓட்டுநர்களின் வசமே காரைக் கொடுத்துவிட்டு, லாபத்தில் ஒரு தொகையை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிவெடுத்தது ஃபாஸ்ட் ட்ராக். ஓட்டுநர்களும் ஒப்புக்கொள்ள மெல்ல மெல்ல நட்டத்தில் இருந்து ஃபாஸ்ட் ட்ராக் மீண்டது.
இந்நிலையில் இதன் 23ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான ரெட்சன் அம்பிகாபதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''நாம் இந்த நிலைக்கு வர ஓட்டுநர்களும் ஊழியர்களுமே முதன்மைக் காரணம். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், ஓட்டுநர்களையே உரிமையாளர் ஆக்கினோம்.
தினந்தோறும் எந்த பிக்கப்பையும் ரத்து செய்யாமல், ஓட்டுநர்கள் நம்மிடம் வண்டி ஓட்டினால் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். நேர்த்தியான சீருடை, பிசினஸ் கிளாஸ் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர முடியும்.
கட்டணத்தைச் சரிபாருங்கள்
1 கார் வைத்திருந்தவர்களை, 100 கார்கள் நிர்வகித்து ஓட்டுபவர்களாக மாற்றி இருக்கிறோம். கொரோனா தொற்று எல்லாவற்றையும் புரட்டிப் போட்டாலும் இப்போது மீண்டெழுந்து வருகிறோம். ஃபாஸ்ட் ட்ராக் செயலி மூலமாகவும் இப்போது புக்கிங் செய்து வருகிறோம்.
பன்னாட்டு நிறுவனம் என்றால் கட்டணம் குறைவு என்ற எண்ணம் நிறைய மக்களிடம் இருக்கிறது. ஆனால் நம்முடைய கட்டணத்தைப் பார்த்துவிட்டு முடிவெடுங்கள்'' என்று ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனர் ரெட்சன் அம்பிகாபதி தெரிவித்தார்.