Electric Vehicle Sector: அடுத்தக்கட்டம் எலெக்ட்ரிக் தான்.! அடுத்த 5 ஆண்டில் ரூ.94000 கோடி முதலீடு : தமிழகத்துக்கு 34%!
எலெக்ட்ரிக் வாகன துறை தற்போது வளர்ந்து வருகிறது. இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்துவருகின்றன
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன துறையில் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.94000 கோடி முதலீடு வரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்துக்கு பெரும்பான்மையான அளவு, சுமார் 34 சதவீத முதலீடு வரும் என காலியர்ஸ் மற்றும் இண்டோஸ்பேஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றன.
இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனத்துறைக்கு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் துறையிலும் பெரும் வாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் வாகன துறை தற்போது வளர்ந்து வருகிறது. இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்துவருகின்றன.
2030-ம் ஆண்டுக்குள் பேட்டரி தயாரிப்பதற்கு மட்டும் 1300 ஏக்கர் நிலம் தேவைப்படும். தவிர 2025-ம் ஆண்டுக்குள் 26800 சார்ஜ் ஏற்றும் மையங்கள் இந்தியா முழுவதும் தேவைப்படும். இதற்காக 1.3 கோடி சதுர அடி உள்ள இடம் தேவைப்படும். சார்ஜ் ஏற்றும் மையங்கள் நகரபுரங்கள் புதிய பிஸினஸ் மாடலாக உருவாகி இருக்கிறது. முக்கிய பகுதிகளில் இதற்கான தேவை உருவாகி இருக்கிறது.
இதுவரை 15 இந்திய மாநிலங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என பிரத்யேகமான கொள்கைகளை உருவாக்கி இருக்கின்றன. மேலும் ஆறு மாநிலங்கள் இதற்கான கொள்கை உருவாக்கும் பணிகளில் உள்ளன. டெல்லி, மகராஷ்டிரா, குஜராத், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் தேவையை கருத்தில் கொண்டு பணியாற்றிவருகின்றன. உத்தரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் உற்பத்தியை மையமாக கொண்டு செயல்பட்டுவருகின்றன. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உற்பத்தி, உதிர்பாகங்கள், வேர் ஹவுஸ், சார்ஜ் ஏற்றும் மையங்கள், டீலர்ஷிப்கள் என அடுத்த சில ஆண்டுகளுக்கு பரபரப்பாகும்.
கணிக்கப்பட்டுள்ள முதலீட்டில் அதிகபட்சம் தமிழ்நாட்டுக்கு 34 சதவீதம் வரும் என தெரிகிறது. இதனை தொடர்ந்து ஆந்திராவுக்கு 12 சதவீதமும், ஹரியானாவுக்கு 9 சதவீத முதலீடும் செல்லும் என தெரிகிறது. பேட்டரி உற்பத்தியில் இந்த மூன்று மாநிலங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது ஓலா மற்றும் ஏதெர் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஆலையை வைத்துள்ளன. கார்பன் உமிழ்வில் போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 2070-ம் ஆண்டுக்குள் புஜ்ஜியம் கார்பன் உமிழ்வுக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இதனை நிறைவேற்ற வேண்டும் என்றால் போக்குவரத்தை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகும்.
இரண்டு ஆண்டுகளில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையான விலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். பல நிறுவனங்கள் ஆராய்ச்சியில் இருப்பதால் இரண்டு ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும் என தெரிவித்திருக்கிறார். பயணிகள் வாகனம் மட்டுமல்லாமல் சரக்கு போக்குவரத்து வாகனத்திலும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.