Ford Chennai : மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் ஃபோர்டு .. திடீரென மனம்மாறிய ஃபோர்டு நிறுவனம்..
Maraimalai Nagar Chennai Ford : சென்னை மறைமலைநகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு நிறுவனத்தை விற்கும் முடிவை அந்த நிறுவனம் கைவிட்டுள்ளது..
![Ford Chennai : மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் ஃபோர்டு .. திடீரென மனம்மாறிய ஃபோர்டு நிறுவனம்.. chennai ford company has given up its decision to sell the Ford company that was operating in maraimalai nagar Chennai Ford Chennai : மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் ஃபோர்டு .. திடீரென மனம்மாறிய ஃபோர்டு நிறுவனம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/67781bbe0af5cba24093337ff51ad32d1687499103378666_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோடிக்கணக்கில் இழப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன . இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, போர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது. ஃபோர்டு தனது கடைசி காரை தயாரித்து, இனி இந்தியாவில் இருந்து வெளியேறுகிறோம் என அதிகாரம் பூர்வமாக அறிவித்தது.
அதேபோன்று சென்னை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் செட்டில்மெண்ட் அறிவித்தது. பெரும்பாலான ஊழியர்கள் செட்டில்மெண்ட் தொகையை பெற்ற நிலையில், சில ஊழியர்கள் அதைப் பெற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. ஃபோர்டு நிறுவனத்தின் மூடப்பட்ட குஜராத் தொழிற்சாலையை, டாடா குழுமம் 725.7 கோடி ரூபாய்க்கு ,கடந்த ஜனவரி மாதம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்
இந்தநிலையில், ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் மறைமலைநகர் தொழிற்சாலையை விற்க முடிவு செய்திருந்தது. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. ஜே.எஸ்.டபிள். யூ நிறுவனம் ஃபோர்டு தொழிற்சாலை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியது. இந்தநிலையில் சென்னை ஆலையை கிட்டத்தட்ட 830 கோடி ரூபாய்க்கு விற்பதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு இருந்தது என தகவல் வெளியாகி இருந்தது.
பின்வாங்கிய ஃபோர்டு நிறுவனம்
இந்நிலையில் தன் தொழிற்சாலையை விற்க விரும்பாததால் ஃபோர்டு நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. சென்னை மறைமலை நகரில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில், இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது. சென்னையில் உள்ள ஆலையை விற்பனை செய்ய ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளது.
பகிர்ந்துகொள்ள, வேறு எதுவும் இல்ல
இது குறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் சார்பில் வெளியான தகவலில், ”இந்தியாவில் எஞ்சியுள்ள உள்ள ஒரே தொழிற்சாலையை சமீபத்தில் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, ஃபோர்டு நிறுவனம் விற்க விரும்பவில்லை. சென்னையில் எங்கள் நிறுவனத்தின் உற்பத்திக்கான மாற்று வழியை நாங்கள் தொடர்ந்த ஆராய்ந்து வருகிறோம். மேலும் இது குறித்து பகிர்ந்து கொள்ள, வேறு எதுவும் இல்லை என தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம் சென்னை உற்பத்தியாலையை விற்பதிலிருந்து போன் நிறுவனம் பின்வாங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படுமா ?
தற்பொழுது இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வர துவங்கியுள்ளன. குறிப்பாக பல்வேறு இடங்களில் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு போர்ட் நிறுவனம் சென்னை உற்பத்தி ஆலையில் மின்சார வாகனங்களை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்கள் தயாரிப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இதற்கான சாத்திய கூறுகளை அதிகம் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)