Used Car Buying Tips: இன்னைக்கு தேதிக்கு செகண்ட் ஹேண்ட் கார் வாங்கலாமா? நல்லது, கெட்டது என்ன? லாபமா? நஷ்டமா?
Used Car Buying Guide: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இன்றைய சூழலில் பயன்படுத்திய காரை இரண்டாவது தரமாக வாங்குவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Used Car Buying Guide: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இன்றைய சூழலில் பயன்படுத்திய காரை இரண்டாவது தரமாக வாங்குவது லாபமா? நஷ்டமா? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
செகண்ட் ஹேண்ட் கார்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மின்சார கார்கள், உயர்தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் பயனாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அதேநேரம், கார்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாகன பிரியர்களிடையே இன்றளவும் ஒரு பிரபலமான கேள்வி நிலவி வருகிறது. அது, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட காரை இரண்டாவது தரத்தில் வாங்குவது சிறந்த முடிவா? என்பதே ஆகும். சரியான முறைகளை பின்பற்றினால், ”ஆம்” என்பதே இந்த கேள்விக்கு பதிலாகும்.
பயன்படுத்திய காரை வாங்குவது ஒருவருக்கு பெரும் தொகையை மிச்சப்படுத்தலாம், பெரும் மதிப்பை வழங்கலாம். அதேநேரம், சில ஆபத்துக்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. எனவே, 2025 காலகட்டத்திலும் ஏற்கனவே ஒருவர் பயன்படுத்திய காரை, இரண்டாவது தரத்தில் வாங்குவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து விரிவாக ஆராயலாம். இது செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவது குறித்த ஒரு புரிதலை வழங்கக் கூடும்.
செகண்ட் ஹேண்ட் கார் - நன்மைகள்
1. குறைந்த விலையில் மதிப்புமிக்க கார்
பயன்படுத்திய கார்கள் புதியதை காட்டிலும் மலிவான விலையில் கிடைக்கும். உதாரணமாக ஒரு புதிய ஹேட்ச்பேக்கை வாங்குவதற்காக நீங்கள் ஒதுக்கிய பட்ஜெட்டிலேயே, இரண்டாவது தரத்தில் டாப் எண்ட் செடான் அல்லது எஸ்யுவியை உங்களுக்கான சொந்தமான காராக மாற்றலாம். இதன் மூலம் குறைந்த செலவிலேயே அதிக அம்சங்கள் மற்றும் வசதிகள் கொண்ட கார் உங்கள் வசமாகும்.
2. குறைந்த காப்பீடு & வரி
பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு குறைந்த அளவிலான காப்பீட்டு பிரீமியம் மற்றும் சாலை வரியே வசூலிக்கப்படுகிறது. இது நீங்கள் மிகவும் நெருக்கடியான பட்ஜெட்டை கொண்டிருப்பவராக இருந்தால், காரை முழுமையாக சொந்தமாக்குவதற்கான செலவை உங்களுக்கு கணிசமாக குறைக்கிறது.
3. மெதுவான தேய்மானம்:
புதிய கார்களுக்கான மதிப்பு என்பது அதன் முதல் 2-3 வருடங்களிலேயே வெகுவாக குறைந்துவிடும். பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும்போது அதற்கான கூடுதல் மதிப்பிழப்பு என்பது அதன்பிறகு குறைவாகவே இருக்கும். அதன்படி, ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் செகண்ட் ஹேண்ட் காரை விற்றாலும், அதன் விலை வெகுவாக குறைய வாய்ப்பில்லை. அதனால், உங்களுக்கு பெரிய இழப்பும் இருக்காது.
4. EV & ஹைப்ரிட் வாகனங்களில் அதிக ஆப்ஷன்கள்:
முன்பு எப்போதும் இல்லாத அளவில் தற்போதைய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகப்படியான, பயன்படுத்தப்பட்ட மின்சார மற்றும் ஹைப்ரிட் கார்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதன் மூலம் அதிகபட்ச ஆரம்பகட்ட கொள்முதல் விலையை கருத்தில் கொள்ளாமல், மலிவு விலையிலேயே மின்சார காரை கூட சொந்தமாக்கி அதன் பயண அனுபவத்தை பெறலாம்.
செகண்ட் ஹேண்ட் கார் - சிக்கல்கள்
1. தெளிவில்லாத காரின் நிலை
ஏற்கனவே ஒருவரால் பயன்படுத்தப்பட்ட கார்கள் எப்போதும் நல்ல நிலையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சில வாகனங்களில் சேதங்கள் மற்றும் மெக்கானிக்கல் குறைபாடுகள் மறைக்கப்படலாம். எனவே எந்த ஒரு காரையும் இரண்டாம் தரத்தில் வாங்குவதற்கு முன்பும், ஆய்வு மற்றும் பராமரிப்பு தரவுகளை பரிசோதிக்க வேண்டியது அவசியமாகும்.
2. லிமிடெட் வாரண்டி
புதிய கார்களை போன்று, பயன்படுத்தப்பட்ட கார்கள் வாரண்டியுடன் வருவதில்லை. . சில சான்றளிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் உள்ளன. ஆனால், அவை விலை அதிகமாக இருக்கும்.
3. ஓல்ட் ஃபங்க்சன்ஸ்
சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய கார்கள் ADAS, கனெக்டட் தொழில்நுட்பம் மற்றும் உயர்தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் என ஏராளமான வசதிகளை பெறுகிறது. ஆனால், பயன்படுத்தப்பட்ட கார்கள் புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் பின் தங்கி இருக்கலாம்.
இறுதி தீர்ப்பு என்ன?
பட்ஜெட்டில் புத்தம் புது கார்களுக்கான ஏராளமான ஆப்ஷன்கள் இருக்கக் கூடிய 2025ம் ஆண்டில் கூட, பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது என்பது நல்ல முடிவாகவே உள்ளது. ஆனால், அதன் பலன் என்பது சரியான தேர்வையே பொறுத்தது. நன்கு பராமரிக்கப்பட்ட, காரின் பயன்பாட்டு வரலாறு எப்படி உள்ளது என்பதை அறிந்து, நம்பகமான இடம்/நபரிடமிருந்து வாங்குவதை கவனத்தில் கொள்ளுங்கள். செகண்ட் ஹேண்ட் எனப்படும் இரண்டாவது தர காரை வாங்குவது என்பது மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும். இதன் மூலம் மலிவு விலையில் வசதியான பயணத்தை பெறுவதோடு, கடினமாக உழைத்து சேமித்த பணத்தில் சில லட்சங்களை கூட சேமிக்க முடியும்.





















