Budget Automatic Cars: யாருப்பா கியர்லா போட்டுக்கிட்டு, ரூ.7 லட்சத்துக்கே ஆட்டோமேடிக் கார்கள் - இந்த பிராண்டிலா?
Budget Automatic Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.7 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஆட்டோமேடிக் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Budget Automatic Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.7 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஆட்டோமேடிக் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில் ஆட்டோமேடிக் கார்கள்:
சொந்தமாக வாங்கும் முதல் கார் என்பது பயனர்களுக்கு எப்போதுமே சிறப்பானது தான். முதல்முறையாக கார் வாங்குபவர்கள் ஆட்டோமேடிக் காரை தேர்வு செய்வது என்பது நல்ல முடிவாக இருக்கும். காரணம் அவை ஓட்டுவதற்கு குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் எளிதானதாக விளங்குகிறது. கார் ஓட்டுவதன் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களுக்கு, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏராளமான ஆட்டோமேடிக் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அதுவும் வெறும் ரூ.7 லட்சம் என்ற பட்ஜெட் விலையில் கிடைப்பது பயனர்களுக்கு, குறைந்த விலையில் முதல் காரை சொந்தமாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இவை மலிவானது என எண்ண வேண்டியதில்லை, கணிசமான மைலேஜ், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாக உள்ளன. எனவே, நீங்கள் முதல்முறையாக கார் வாங்க விருபுபவராக இருந்தால், உங்களுக்கான பட்ஜெட் ஆட்டோமேடிக் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. மாருதி சுசூகி ஆல்டோ K10
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் ஆட்டோமேடிக் கார்களின் பட்டியலில், மாருதியின் ஆல்டோ K10 மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் காராக உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது,மென்மையான ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனை கொண்டு பயணத்தை சொகுசாக மாற்றுகிறது. கம்பேக்ட் சைஸில் இருப்பதால், இதனை பார்க் செய்வதும் எளிதாக உள்ளது. சராசரியாக லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். நகர்ப்புறங்களில் தினசரி பயன்பாட்டிற்கு சிறந்த தேர்வாக இருப்பதோடு, பராமரிப்பதற்கான செலவும் மிகவும் குறைவாகும். இந்த காரின் எக்ஸ் ஷோரும் விலை சென்னையில் 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகும். இந்திய சந்தையில் இவ்வளவு மலிவு விலையில் கிடைத்து, 6 ஏர் பேக்குகளை கொண்ட ஒரே காராக ஆல்டோ கே10 திகழ்கிறது.
2. ரெனால்ட் க்விட்
ரெனால்ட் க்விட் கார் மாடலானது எஸ்யுவிக்கு ஈடான அனைத்து அம்சங்களையும், போதுமான இடவசதியையும் கொண்டுள்ளது. காண்போரை இதென்ன குட்டி எஸ்யுவியா என காண்போரை ஆச்சரியப்படுத்துகிரது என்பதில் மாற்று கருத்து இல்லை. இதில் உள்ள 1.0 லிட்டர் இன்ஜின் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 8 இன்ச் டச் ஸ்க்ரீன், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்கள், இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் எண்ட் வேரியண்டாக க்விட்டை உணர செய்கிறது. டிசைன் அடிப்படையிலும் கவனத்தை ஈர்க்கும் இந்த காரானது,புதிய பயனர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏதுவாக உள்ளது. இந்த காரின் எக்ஸ் - ஷோரும் விலை 5 லட்சத்து 54 ஆயிரம் மட்டுமே ஆகும். இது பெட்ரோல் இன்ஜினில் லிட்டருக்கு சுமார் 22 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
3. மாருதி சுசூகி எஸ்-பிரெஸ்ஸோ
பட்ஜெட் விலையில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் டால் பாய் தோற்றத்தை கொண்ட காரை வாங்க விரும்புவோருக்கு, மாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ ஒரு நல்ல தேர்வாக இருக்கும். எதிர்காலத்திற்கான தோற்றத்தை கொண்ட இந்த காரில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் கூட இதனை கையாளவது மிகவும் எளிதானதாக உள்ளது. அடிப்படையிலான நவீன அம்சங்களுடன், குறிப்பிட்ட கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டு மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த காராக இருக்கும். முதல்முறையாக கார் ஓட்டுபவர்களுக்கு நம்பகத்தன்மையை வழங்கும். இந்த காரின் ஆட்டோமேடிக் எடிஷனின் எக்ஸ் ஷோரூம் விலை சென்னையில் 5 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகும். இது லிட்டருக்கு சராசரியாக 25 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
4. டாடா டியாகோ:
புதிய டாடா டியாகோவானது வலுவான மற்றும் தரமான கட்டமைப்பை கொண்டுள்ளதோடு, பாதுகாப்பு சோதனைகளில் 4 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் பாதுகாப்பில் அசத்தும் கார் மாடலாகவும் திகழ்கிறது. இதன் டாப் என்ட் வேரியண்ட்களின் விலை, 7 லட்ச ரூபாயை கடந்தாலும் அடிப்படை வேரியண்ட்களின் விலை குறைந்த விலையில் கிடைக்கிறது. சென்னையில் இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 6 லட்சத்து 80 ஆயிரத்திலிருந்தே தொடங்குகிறது. மேலும், லிட்டருக்கு 19 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
பட்ஜெட்டில் எந்த ஆட்டோமேடிக் கார் பெஸ்ட்?
மேற்குறிப்பிடப்பட்ட பெரும்பாலான கார்கள் அளவில் சிறியதாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலில் கையாள்வது எளிதாக உள்ளது. நகர்ப்புறங்களில் தினசரி பயன்பாட்டிற்கும், சிறிய குடும்பங்கள் ஒன்றாக பயணிக்கவும் சிறந்த தேர்வுகளாக உள்ளன. இந்த பட்டியலில் பாதுகாப்பு அடிப்படையில் டியாகோ முதன்மையான தேர்வாகவும், மைலேஜ் அடிப்படையில் எஸ்-பிரெஸ்ஸோ முதன்மையான தேர்வாகவும், பட்ஜெட் அடிப்படையில் க்விட் முதன்மையான தேர்வாகவும் உள்ளது.





















