October Launching Cars: தீபாவளி சம்பவங்கள்.. அக்டோபரில் அறிமுகமாகும் புதிய கார்கள், எஸ்யுவி தொடங்கி செடான் வரை
October Launching Cars: தீபாவளியை ஒட்டி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் அக்டோபர் மாதம் அறிமுகமாக உள்ள கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

October Launching Cars: தீபாவளியை ஒட்டி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் அக்டோபர் மாதம் அறிமுகமாக உள்ள புதிய கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அக்டோபரில் அறிமுகமாக உள்ள கார்கள்:
விழாக்காலம் தீவிரமடைந்து இருப்பதை ஒட்டி, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அக்டோபர் மாதம் உற்சாகமானதாக மாற உள்ளது. பல முன்னணி உற்பத்தி நிறுவனங்கள், தங்களது புதிய கார்களை சந்தைப்படுத்த முனைப்பு காட்டுவதே இதற்கு காரணமாகும். எஸ்யுவி தொடங்கி அதிக திறன் கொண்ட செடான் வரையிலான மாடல்கள் அறிமுகப்படுத்த உள்ளன. அந்த வகையில் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ள கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. மஹிந்த்ரா தார் ஃபேஸ்லிஃப்ட்
மேம்படுத்தப்பட்ட தார் 3 டோர் எடிஷனானது, வரும் அக்டோபர் 2ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது. தனது அடையாளமான கரடுமுரடான தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ளும் இந்த காரானது, அதிலேயே சில அப்க்ரேட்களையும் பெற்றுள்ளது. புதிய 4X2 ரியர் வீல் வேரியண்ட்ஸ் அலாய் வீல்களை பெற உள்ளது. புதிய ரியர் கேமரா ரிவர்ஸ் எடுப்பதை எளிதாக்க உதவும். இந்த எஸ்யுவியில் கூடுதலாக ரியர் வைபர் மற்றும் டிஃபாகரும் வழங்கப்பட உள்ளது. உட்புறத்தில் ஸ்டியரிங் வீலில் ட்வின் பீக்ஸ் லோகோ இடம்பெற உள்ளது.
2. மஹிந்த்ரா பொலேரோ ஃபேஸ்லிப்ஃட்
மஹிந்த்ரா நிறுவனத்தின் மற்றொரு எஸ்யுவி ஆன பொலேரோ, அக்டோபர் 6ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் தனது வலுவான தோற்றம், பாக்ஸி அமைப்பு ஆகியவற்றை அப்படியே தக்கவைத்துக்கொண்டாலும், கருப்பு நிற வெளிப்புற ஃபினிஷிங், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், மேம்படுத்தப்பட்ட சக்கரங்கள் போன்ற புதிய அம்சங்களையும் பெற்றுள்ளது. உட்புறத்தில், ப்ளூடூத் உடன் கூடிய புதிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது. இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி, 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷனை தொடர உள்ளது.
3. மஹிந்த்ரா பொலேரோ நியோ ஃபேஸ்லிப்ஃட்
மஹிந்த்ரா பொலேரோவின் அப்க்ரேடட் எடிஷனான பொலேரோ நியோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும், அதே அக்டோபர் 6ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதில் புதியதாக பெரிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீனை பெறுவதோடு, முன்புற க்ரில்லும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினை அப்படியே தக்கவைத்துக் கொள்கிறது. வலுவான அதேநேரம் பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஒரு காரை விரும்புபவர்களுக்கு பொலேரோ நியோ ஒரு நல்ல தேர்வாக இருந்து இருக்கும்.
4. மினி கன்ட்ரிமேன் JCW
மினி கன்ட்ரிமேன் ஜான் கூபர் வர்க்ஸ் கார் மாடலானது, வரும் அக்டோபர் 14ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கன்ட்ரிமேன் எஸ்யுவியின் அதிக செயல்திறன் கொண்ட எடிஷன் இதுவாகும். 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் இன்ஜின் மூலம், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை இந்த கார் வெறும் 5.4 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது. அதோடு, ஸ்போர்ட்டியர் டிசைன், ப்ளாக்ட்-அவுட் ஃப்ரண்ட் க்ரில், பெரிய ஏர்-இண்டேக்ஸ், ரெட் ப்ரேக் கேலிபெர்ஸ் ஆகியவற்றை பெற்றுள்ளது. உட்புறத்தில், ஸ்போர்ட்டி அம்சங்கள் மற்றும் ரெட் அக்செண்ட்களை கொண்டுள்ளது.
5. ஸ்கோடா ஆக்டேவியா RS
ஸ்கோடா நிறுவனம் தனது ஆக்டேவியா RS கார் மாடலின் நவீன எடிஷனை, வரும் அக்டோபர் 17ம் தேதி சந்தைப்படுத்த உள்ளது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ள இந்த காரானது, பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.4 விநாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் ரியர் டிஃப்யூசர் மூலம் ஆக்டேவியா RS-ன் வெளிப்புறம் ஸ்போர்ட்டியர் தோற்றத்தை கொண்டுள்ளது. உட்புறத்தில் பெரிய 13 இன்ச் ஸ்க்ரீன், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், சுமார் 10 ஏர்பேக்குகள் ஆகிய அம்சங்கள் நிறைந்துள்ளன. அதிகப்படியான தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த அதிவேக காரை விரும்புவோருக்கு ஸ்கோடாவின் ஆக்டேவியா RS ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
6. ஹுண்டாய் வென்யு
ஹுண்டாயின் புதிய தலைமுறை வென்யு கார் மாடலானது வரும் அக்டோபர் 24ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. முற்றிலும் புதிய டிசைன் மொழியை கொண்டிருக்கும் இந்த காரானது, வெளிப்புறத்தில் பம்பர்கள், முகப்பு விளக்குகள், டெயில் லேம்ப்கள், அலாய் வீல்கள் மற்றும் முன்புற க்ரில் ஆகியவை முற்றிலுமாக புதியதாக மாற்றப்பட உள்ளன. முழுவதுமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டை பெறும் என கூறப்படுகிறது. அதில் பெரிய டச்ஸ்க்ரீன், மேம்படுத்தப்பட்ட ஆடியோ சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் இடம்பெறக் கூடும். இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆகிய அம்சங்களில் பெரிய மாற்றங்கள் இருக்காது.
இதுபோக, டாடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய மின்சார காரான சியாரா மற்றும் மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட எடிஷனான ஸ்கார்ப்பியோ காரும் கூட அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தற்போது வரை இல்லை.





















