Hero Glamour 125: ஒரு லிட்டருக்கு 63 கிலோ மீட்டர் பயணம்.. ஹீரோவின் புதிய கிளாமர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்..
ஹீரோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய கிளாமர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹீரோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய கிளாமர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹீரோ நிறுவனம்:
பல்வேறு சொகுசு வசதிகளுடன் ஏராளமான இருசக்கர வாகனங்கள் இந்திய ஆட்டோமொபைல் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், நடுத்தர வர்கத்தினருக்கான மோட்டார் சைக்கிளை வழங்குவதில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், எண்ட்ரி லெவல் மோட்டார் சைக்கிளை வழங்குவதில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அந்த வகையில் தான், புதியதாக தற்போது மேம்படுத்தப்பட்ட கிளாமர் 125 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கிளாமர் 125 மோட்டார்சைக்கிள்:
இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த கிளாமர் மோட்டார்சைக்கிள், 2020 வாக்கில் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய கிளாமர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாகனத்தின் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்களும், கூடுதலாக ஒரு சில புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
விலை விவரங்கள்:
கிளாமர் 125 மோட்டார்சைக்கிள் டிரம் மற்றும், டிஸ்க் என்ற இரண்டு வேரியண்ட்களில், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, டிரம் வேரியண்ட் விலை 82 ஆயிரத்து 348 ரூபாயாகவும், டிஸ்க் வேரியண்ட் விலை 86 ஆயிரத்து 348 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேண்டி பிளேசிங் ரெட், டெக்னோ ப்ளூ - பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் பிளாக் என மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஜின் நிலவரம்:
புதிய ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிள் BS6 P2, E20 and OBD-II விதிகளுக்கு உட்பட்டு ஏர்-கூல்டு 124.7 சிசி, சிங்கில் சிலிண்டர் இன்ஜினை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 10.5 ஹெச்.பி. பவர் மற்றும் 10.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள i3S tech (stop/start) தொழில்நுட்பம் லிட்டருக்கு 63 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உதவுகிறது. இதனால் புதிய கிளாமர் வாகனமானது இந்திய சந்தையில் Honda SP 125 மற்றும் Bajaj CT 125X ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பசம்சங்கள்:
புதிய கிளாமர் மோட்டார் சைக்கிளில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. கிளாமர் மோட்டார்சைக்கிளில் 240mm டிஸ்க் அல்லது 130mm டிரம் பிரேக், 130mm டிரம் பிரேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய கிளாமர் மோட்டார்சைக்கிள் எளிமையான கம்யுட்டர் மாடல் ஆகும். மிக முக்கிய மாற்றமாக இந்த மாடலில் புதிய முழுமையாக டிஜிட்டல் டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. அதில் நிகழ் நேர மைலேஜ் மற்றும் எரிபொருள் இருப்பு ஆகியவை தொடர்பான விவரங்கள் காட்சிப்படுத்தப்படும். யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இருக்கையின் உயரம் முந்தைய மாடலை காட்டிலும் 8 மில்லி மீடர் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.