Bajaj pulsar 220F: மீண்டும் வந்தது பல்சர் 220F.. பஜாஜ் நிறுவனம் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்
பஜாஜ் பல்சர் 220F மோட்டர் சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 220F மோட்டர் சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்சர் 220F
பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் 2202F மாடல் விற்பனை இந்திய சந்தையில் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. குறிப்பாக புதிய பல்சர் N250 மற்றும் F250 அறிமுகம் செய்யப்பட்ட சிறிது காலத்திற்கு பிறகு, பல்சர் 220F மாடல் மோட்டார் சைக்கிள் கடந்த ஆண்டு சந்தையில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும், சந்தையில் அந்த மாடலுக்கு தொடர்ந்த அதிக தேவையை உணர்ந்த பிறகு, பஜாஜ் நிறுவனம் அமைதியாக வெளிப்புற தோற்றத்தை மேம்படுத்தி, புதிய வண்ணங்கள் மற்றும் கார்பன் எடிஷன் மாடலுடன் பைக்கை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. பஜாஜ் பல்சர் 220F இப்போது உற்பத்தியில் உள்ளது, இதனிடையே, இந்த மாடலுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ள நிலையில், டீலர்கள் முன்பதிவை ஏற்று வருகின்றனர். முற்றிலும் புதிய மாடல் என்ற போதிலும் இதன் டிசைன் அதன் முந்தைய வெர்ஷனை போன்ற தோற்றத்தையே கொண்டுள்ளது.
இன்ஜின் விவரம்:
பல்சர் 220F மாடலில் 220சிசி சிங்கிள்-சேம்பர் ஆயில்-கூல்டு ஃப்யூவல்-இன்ஃப்யூஸ்டு மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 20.11 ஹெச்பி பவர், 18.55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. 2023 பஜாஜ் பல்சர் மாடலில் ஒற்றை மாற்றமாக OBD-2 விதிகளுக்கு பொருந்தும் இன்ஜின் உள்ளது. இது ரியல்-டைமில் காற்று மாசு ஏற்படுவதை டிராக் செய்கிறது.
விலை விவரம்:
விலை நிர்ணயம் தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்திய சந்தையில் 2023 பஜாஜ் பல்சர் 220F மாடலின் விலை 1 லட்சத்து 37 ஆயிரத்து 126 ரூபாய், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது முந்தைய பல்சர் 220F வெர்ஷனை விட 3 ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகமாகும்.
சிறப்பம்சங்கள்:
பஜாஜ் பல்சர் 220F மாடலில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ரியர் ஷாக்குகள் உள்ளன. இந்த மாடலில் எல்.ஈ.டி ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், டிஆர்எல்கள், பல்பு இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் ஹார்டுவேரை பொருத்தவரை முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அனலாக் டக்கோமீட்டர், டிஜிட்டல் ஸ்கிரீன் இடம்பெற்று உள்ளன.
மாற்றம் இல்லை:
இவைதவிர 2023 மாடலின் முன்புறம் மெல்லிய தோற்றம், கூர்மையான சைடு பேனல்கள் உள்ளன. இத்துடன் க்ளிப் ஆன் ஹேண்டில்பார்கள், ஸ்ப்லிட் சீட்கள், 2 பீஸ் கிராப் ரெயில் உள்ளிட்டவையும் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே வழங்கப்பட்டு உள்ளன.