Tamil Nadu Lockdown News: இன்றிலிருந்து கோயில்களை திறக்க அனுமதி.. மக்களுக்கு அனுமதி உண்டா இல்லையா? - விவரம் உள்ளே..!
வழிபாட்டு தலங்களை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
![Tamil Nadu Lockdown News: இன்றிலிருந்து கோயில்களை திறக்க அனுமதி.. மக்களுக்கு அனுமதி உண்டா இல்லையா? - விவரம் உள்ளே..! Temples Open in Tamilnadu from Today MK STALIN Tamil Nadu Lockdown News: இன்றிலிருந்து கோயில்களை திறக்க அனுமதி.. மக்களுக்கு அனுமதி உண்டா இல்லையா? - விவரம் உள்ளே..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/28/8e94bc01ba0ace20eac2f97747874da0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் இன்று, நாளை, ஞாயிறு ஆகிய தினங்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 7ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்து வந்தது.
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நேற்று ( 27-1-2022) அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாண்புமிகு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திருமா சுப்பிரமணியன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு, இ.ஆ.ப., மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையினால் கொரோனா நோய்த் தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளதாகவும், போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பினும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம். மாணவ மாணவியர்களின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி கீழ் கண்ட தளர்வுகள் விலக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும் இந்தக் கட்டுபாடுகள் 1- 2-22 முதல் 15-2-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தளர்வுகள்
1. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
3. மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
4. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை.
5. அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை.
6. உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
7. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
8. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
9. துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
10.கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சி கூடங்கள். விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
11.உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
12. அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
1 3. உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை.
14. அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.
15. அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
16. அனைத்து பொழுதுபோக்கு/கேளிக்கைப் பூங்காக்கள் (Entertainment/Amusement parks) நீர் விளையாட்டுகளைத் (Water sports) தவிர்த்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
கல்வி நிறுவனங்கள்
1. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.
2. தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்/ தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஊரடங்கு நீக்கம்:
* 28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது.
* வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கு கிடையாது.
தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)