Srikalahasti Temple: காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசன நேரம் நீட்டிப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் இனி தினமும் காலை 6 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம்.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், கொரோனா 2வது அலையால் தொற்று பரவல் குறையாமல் மார்ச், மே மாதங்களில் அதிகமாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
வரலாற்று பக்கங்களின் பொக்கிஷம் முக்தியாலீஸ்வரா் கோயில்!
இந்நிலையில், பெரும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி சின்னாபின்னமான தென்மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தான் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
ஆந்திர மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. அங்கு ஊரடங்கு கடுமையானதை தொடர்ந்து, தொற்று பாதிப்பு குறைந்தது. இதனால், அம்மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்தது. அதில், கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி கூறுகையில், “மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தி, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக காலை 6 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை நேரத்தை நீட்டித்துள்ளது. இதன் காரணமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி தினமும் காலை 6 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம். ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பக்தர்கள் கலந்துகொள்ளலாம்” என்று கூறினார்.
கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதும், சாமியை தரிசனம் செய்வதற்கான நேரத்தை நீட்டிப்பது போன்ற அறிவிப்பால் பக்தர்கள் ஆனந்தத்துடன் உள்ளனர்.
ஜூன் 14 சபரிமலை கோயில் நடை திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி இல்லை!