தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
கும்பகோணம் நகரில் உள்ள நாகேஸ்வரன், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர் ஆகிய 3 சிவாலயங்களிலும் பங்குனி உத்திர விழா அந்தந்த கோயில்களில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ள குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். நரகாசுரன், சூரியன் முதலானோர் வழிபட்ட தலமென்பது ஐதிகம். சூரியன் வழிபட்ட இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளில் சூரிய கிரகணங்கள் மூலவரின்மீது நேராக விழுவதைக் காணமுடியும். இறைவன் நாகேசுவரர், இறைவி பெரியநாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 27ஆவது சிவத்தலமாகும்.
தமிழகத்தில் உள்ள நாகர் கோயில்களில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். அமுத குடத்துக்கு அருச்சித்த வில்வம் விழுந்த இடத்தில் சிவக்குறியொன்று தோன்றியது. அத்தலம் வில்வவனேசம் எனப்பெயர் பெற்றது. இத்தலம் நாகேசம் என்றழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் உள்ள மிகத் தொன்மையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இங்கு நாகராசன் பூசித்தால் இறைவன் நாகேசப்பெருமானாகத் திகழ்கின்றார். திருநாவுக்கரசர் இத்தலப் பெருமானைப் பாடும்போது குடந்தைக் கீழ்க்கோட்டம் என்கிறார். கும்பகோணம் பாஸ்கரசேத்திரம் என்று பெயர் பெற்றதற்கு இத்தலமே சான்றாகும்.
இத்தலத்து இறைவன் நாகேஸ்வரர். வில்வத்தில் இருந்து தோன்றியதால் வில்வனேசர் என்றும், ஆதிசேடனுக்கு அருள் செய்ததால் நாகேசுவரர் என்றும், பாதாளத்தில் இருப்பதால் பாதாள லிங்கேசர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி அம்மை. ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கி உள்ளது. உள்ளே இடப்பக்கம் நந்தவனம், சிங்கமுக தீர்த்தக் கிணறு உள்ளது. வலப்பக்கம் பெரியநாயகி சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. உள்ளே சென்றால் இடது பக்கம் பதினாறு கால் மண்டபமும் வலது பக்கம் நடராஜ சபையும் உள்ளன.
நடராஜ மண்டபம் ரத அமைப்பில் உள்ளது. இரு புறங்களிலும் உள்ள கல் தேர் சக்கரம் உள்ளது. இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத் தேர்மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயர் ஆனந்தத் தாண்டவ நடராஜ சபை. இங்கு சிவகாமியம்மை நடனத்திற்குத் தாளம் போடும் பாவத்திலும், மகாவிஷ்ணு குழலூதும் பாவத்திலும் உள்ளனர். இது போன்ற சிறப்பு பெற்ற கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணம் நகரில் உள்ள நாகேஸ்வரன், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர் ஆகிய 3 சிவாலயங்களிலும் பங்குனி உத்திர விழா அந்தந்த கோயில்களில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது உற்சவ பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தனர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவின் சிறப்பாக வரும் 13ஆம் தேதி ஓலை சப்பரமும், 15-ம் தேதி இரவு திருக்கல்யாணமும், 17ஆம் தேதி தேரோட்டமும், 18 ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழாவன்று மகாமகம் குளத்தில் நாகேஸ்வரர், கம்பட்ட விஸ்வநாத சுவாமி கோயில்களின் சார்பில் பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரி வைபவமும் நடைபெறுகிறது. இதே போல் கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலின் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெறுகிறது.
திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம் நடைபெற்றது. திருபுவனத்திலுள்ள தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத கம்பஹரேஸ்வரர் வருடந்தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு காலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து 19 ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலா புறப்பாடு நடைபெறுகின்றது. முக்கிய விழாவான திருத்தேரோட்டம் வரும் 17 ஆம் தேதி காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகின்றது. 18 ஆம் தேதி காலை காவிரிஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)