57 நாளில் 5 கோடியை தாண்டிய பழனி கோயில் உண்டியல் காணிக்கை
பழனி மலைக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உண்டியல்கள் நிறைந்த நிலையில், இரண்டு நாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் உண்டியல் காணிக்கை 57 நாட்களில் ரூ.5 கோடியை தாண்டியது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள், பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் காணிக்கை செலுத்தியதால் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. கல்லூரி மாணவியர், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
இதில் கடந்த 57 நாட்கள் பக்தர்கள் வரவால் கிடைக்கப்பெற்ற காணிக்கை ரொக்கம் ரூபாய் ஐந்து கோடியே 28 லட்சத்து 58 ஆயிரத்து 880 ஆகும். தங்கம் 1,946 கிராமும், வெள்ளி 31 ஆயிரத்து 999 கிராமும், வெளிநாட்டு கரன்சிகள் 241 வரப்பெற்றது. தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன.
உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அப்புக்குட்டி, செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, அறங்காவலர்கள் செல்லமுத்தையா, லதாஶ்ரீதர், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.