கரூர்: கிருஷ்ணராயபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சரம் குத்துதல் நிகழ்ச்சி
திருட்டை தடுக்க பிச்சம்பட்டி மற்றும் வளையர்பாளையம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் காவல் பார்க்க வந்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் மிகவும் பழமையான, புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சரம் குத்துதல் திருவிழா நடைபெற்றது.
ஒவ்வொரு ஊரிலும் பிரசித்தி பெற்ற கோவில் தலத்தில், திருவிழாவின் போது நம் கலாச்சாரம் மற்றும் வீரத்தை பறைசாற்றும் வகையில் வினோதமான நிகழ்ச்சிகள் காலம் காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணராயபுரத்தில் வினோத திருவிழா நடக்கிறது. முன்னோர்களின் காலத்தில் கிருஷ்ணராயபுரத்தில் வசித்த
விவசாயிகளின் விவசாய நிலங்களில் உள்ள விளை பொருட்களை அடிக்கடி திருடி போய் வந்தது. இந்த திருட்டை தடுக்க பிச்சம்பட்டி, மற்றும் வளையர்பாளையம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் காவல் பார்க்க வந்தனர். இவர்கள் காவல் பார்த்த பிறகு திருட்டு சம்பவம் குறைந்தது.
ஆண்டுதோறும் ஊருக்காக உழைக்கும் இந்த இரண்டு ஊர் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் திருவிழாவின் போது, ஆட்டு தலையை ஈட்டியால் குத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். கடைசியில் வெற்றி பெறுபவருக்கு மாலை மரியாதை செய்து தாரை தப்பட்டை முழங்க ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த வினோத நிகழ்ச்சியின் வரலாறு பற்றி முன்னோர்கள் தெரிவித்தார்கள். இந்த மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 23ம்தேதி அழகுநாச்சியம்மன் கோவிலிருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சியோடு தொடங்கியது. 24ம்தேதி கரகம் பாலித்தல், திருத்தேர் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று 25ம் தேதி இரவு சரம் குத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிச்சம்பட்டி, வளையர்பாளையம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 10, 15 அடி உயரமுள்ள சல்லை எனப்படும் ஈட்டியை சொருகி கொண்டு மாவிளக்கு தட்டுடன் பெண்கள், பெரியோர்களுடன் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு முன்பு கூடினர்.
பின்பு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கோவிலுக்கு வெளியே இருந்த ஆட்டு தலையின் மீது பூசாரி மஞ்சள் தண்ணீரை தெளித்தார். ஆடு அனுமதிக்கு பிறகு பெரிய அரிவாளால் ஆடு வெட்டப்பட்டது. பிறகு ஆடு குட்டியின் தலை எடுத்து வானத்தை நோக்கி வீசப்பட்டது. அப்போது ஈட்டியுடன் நின்று கொண்டிருந்த இரண்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் போட்டி போட்டு கொண்டு ஆட்டு தலையை குத்த முயன்றனர். அப்போது ஒருவர் ஈட்டியால் குத்த முயன்ற போது மற்றொருவர் தட்டிவிடும் சம்பவமும் நடந்தது. கடைசியில் ஈட்டியால் ஆட்டு தலையை குத்தி கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்த வலையார்பாளையத்தைச் சேர்ந்த குமார் என்ற விவசாயி இளைஞர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் வெற்றி பெற்றவருக்கு மாலை மரியாதை செய்து தாரை தப்பட்டை முழங்க ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா, பொதுமக்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்